Saturday, September 18, 2010

ஒரு வனதேவதையின் உக்கிரம்
















ஆதியில்
தண் பசுமையும் குளிர் காற்றும்
பட்சிகளின் வாழ்வும்
பகலவனின் ஒளி புகாத
கானகத்தினுள்
ஒரு வேம்பினடியில்
மடித்து வைத்த பாதங்களோடு
அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன்.

கொடும் கரம் கொண்டு பசுமையழித்து
கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு
என்னை ஒரு நாற் சுவருக்குள்
அடைத்தது ஒரு கூட்டம்.

தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய்
மாறிப்போன எனக்கு
தினந்தோறும் பூசைகள்
பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி
தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள்
என எதுவும் பிரியமில்லை.

அறிந்துகொள்ளுங்கள் மக்களே
நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை
எனக்கு ஒரு கானகம் வேண்டும்.













படங்கள் : இணையத்திலிருந்து.

Thursday, September 16, 2010

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது.

சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ).



வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?.

சரி அப்படிதான் கிடங்கு கட்ட இடமில்லை !. பணம் இல்லை !. நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றை வீணாகாமல் ஏழை மக்களுக்கு அளிப்பதில் என்ன கஷ்டம். தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் ஏழை மக்களைக் காப்பாற்றுவேன் என்று தொண்டை வரள நீங்கள் கத்துவது வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தானே?. அடுத்த தேர்தல் வந்தால் திரும்பவும் பேசுவீர்கள், நாங்களும் எந்தக் கொள்ளியில் எது நல்ல கொள்ளி எனத் தெரியாமல் வாக்களிப்போம்.

சாப்பிடும் போது இரண்டு பருக்கை கீழே சிந்தினால் அடிக்க வரும் எங்கள் தாய், தந்தையர் இத்தனை தானியங்கள் வீணாவது தெரியாமல்தான் இருக்கின்றனர் அமைச்சர்களே. அதுதானே உங்களுக்கும் நல்லது, அடுத்த தேர்தலைச் சந்திக்க.

'கஞ்சி குடிப்பதற்கு இலார்.. அதன் காரணங்கள் என்ன என அறியும் அறிவும் இலார்.. ' என வருந்திப் பாடிவிட்டு போய்விட்டார் எங்களுக்காக வருத்தப்பட்ட கவிகளில் ஒருவர். எங்களுக்கு உங்கள் அறிக்கைகள் புரியாது. விவாதங்கள் புரியாது. ஏனெனில் நாங்கள் படிக்காதவர்கள், இன்னும் ஏழையாகவே கிராமத்திலும், நகரத்திலும் வசித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தொலை நோக்கு (!!) பார்வைகளுக்கு பசித்திருக்கும் எங்களின் வாடிய வயிறுகள் தெரியப் போவதில்லை.