Wednesday, August 18, 2010

முரண்கள்

அரசு மதுபானக் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி, அரசின் 'குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்' வாசகம்.
********

லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்றுதான் இருந்தேன். முட்டிக் கொண்டு வரும்போது, சிறுநீர் கழிக்க ரூ.1 க்கு பதில் ரூ.3 வாங்கும் அவனிடம் சட்டம் பேச நேரமில்லை.

********

இப்போதெல்லாம் மசாலாப்(கம்மர்சியல் ?) படங்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதையும் கை தட்டி ரசித்தோம் என்பதை மறந்து விடுகிறேன்.
********

சின்ன வயதில் அப்பா என்ன வாங்கி வந்தாலும் ருசித்தது. இப்போதோ, எதாவது வாங்கி வந்தால் 'நல்ல கடை கெடைக்கலியா?' என்பதே வார்த்தைகளாக வருகிறது.
********

ஆம்பளைப் பையன் பூவை ரசித்தால், ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதுவே கையில் ஒரு ரோஜாவோடு இருந்தால் புன்னகைக்கிறார்கள். (சமயத்தில் அடியும் கிடைக்கக் கூடும்)
********

குளிர் காற்று நிறைந்த அங்காடிகளில் பில் போட்ட விலையைத் தருகிறோம். நடை பாதைக் கடைகளில் ரூ.10 உள்ள பொருளுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
********

சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஆனோம் என்கிறார்கள். இருந்தாலும் சம்பளம் போதவில்லை என்று கதறுகிறார்கள்.

Friday, August 13, 2010

ஞாயிற்றுகிழமைச் சுதந்திரம்

ரயில் முன்பதிவு
குடும்பத்துடன் சுற்றுலா
என எதுவுமில்லாமல்
வருகிறது சுதந்திர நாள்
ஞாயிற்றுக் கிழமையால்...

போலி மருந்துகள்
போலிச் சாமியார்கள்
போலிச் சான்றிதழ்கள்
எனச் சுற்றிலும் போலிகள்
சுதந்திரமாய்...

கந்துவட்டி, லஞ்சம்
கல்விக் கட்டணம்
சிறுவர் கொடுமைகள்
விலைவாசி
எனவும்
நமக்கான முடிவுகளை
யாரோதான் எடுக்கிறார்கள்...

இதற்கெல்லாம் கவலை
வேண்டாம் நண்பரே..
அடுத்த வருடம்
சுதந்திர நாள்
திங்கட்கிழமையில் வருகிறது..

மூன்று நாட்கள்
மூழ்கித் திளைப்போம் அடுத்த
சுதந்திர நாளன்று...