Monday, July 19, 2010

சினிமா - லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)



பரந்து விரிந்த இந்த பூமியில், எவ்வளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பின்னாலும் மிக நீண்ட கதை இருந்திருக்கும். ஒரு சிலர் தங்கள் கதைகளை சொல்லிவிட்டு சென்றார்கள். மற்றவர்கள் மண்ணில் புதைக்கப் படும்போதே, அவர்களின் வரலாறும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. சொல்லப்பட்ட கதைகளை விட, சொல்லாமல் விட்ட கதைகள் தான் அதிகமாக இருக்கும்.

உலகம் அழகானது. வாழ்க்கையும் கூட அழகானதுதான். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக மாறினால்?. 'Life Is Beautiful' படம் பற்றி நிறையத் தடவை கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்க்க முடிந்தது. 'இது ஒரு சாதாரணக் கதை.. ஆனால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.. .' என படத்தின் ஆரம்பித்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.

உலகப் போரின்போது சித்திரவதை செய்யப்பட்ட யூத மக்களின் கண்ணீர் துளிகளில், ஒரு துளி இந்தக் கதை. பல வருடங்கள் ஓடியும் இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை, அதற்கு சான்று இலங்கை. பட்டியில் அடைப்பது போல அடைக்கப்பட்ட மக்களின் குடும்பம் என்ன ஆனது, குழந்தைகள் என்ன ஆனார்கள், வயதான பெற்றோர் என்ன பண்ணியிருப்பார்கள். இதைவிடக் கொடுமை,யூதர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பிரித்து அடைத்து வைத்து அழித்தொழிக்க அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.

'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்தின் நாயகன், கைடோ இத்தாலியில் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறான். படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்புடனே நகர்கின்றது. அங்குதான் அவனின் மாமாவும் இருக்கிறார். இவர்கள் யூதர்கள் என்பதால் அடிக்கடி அவமானப்படுத்த படுகிறார்கள். டோரா எனும் இத்தாலிப் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. டோராவின் அம்மா இன்னொருவருக்கு அவளை நிச்சயம் செய்ய முயற்சிக்க, கைடோ அவளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். மகிழ்ச்சியான வாழ்கையில், அழகான ஒரு குழந்தை. பெயர் ஜோசுவா. நான்கு வயதான ஜோசுவாவின் பிறந்த நாள் அன்று, அவனின் பாட்டியான டோராவின் அம்மா அவனை வாழ்த்த வீட்டுக்கு வர விரும்புகிறார்.

பிறந்த நாள் அன்று காலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் டோரா, வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடைப்பதை பார்த்து ஏதோ புரிந்து கொள்ளுகிறாள். நேராக ரயில் நிலையம் சென்று கைடோவும், மகனும் இருக்கும் ரயிலில் தன்னையும் அனுப்புமாறு அதிகாரியிடம் கேட்க, அவனும் அவளை இன்னொரு பெட்டியில் ஏற்றிவிடுகிறான். ரயில் ஒரு இடத்தில நிற்க, பெண்கள், ஆண்கள், முதியவர்கள் எனத் தனி தனியாகப் பிரித்து அந்த வளாகத்தில் அடைக்கிறார்கள். கைடோவும், ஜோசுவாவும் ஓரிடத்தில், டோரா இன்னொரு இடத்தில்.

அந்தக் குழந்தையை கைடோ சமாளிப்பதும், ஜோசுவா கேட்கும் கேள்விகளுக்கு போர், ரத்தம் என பயம் காட்டாமல் 'இது ஒரு விளையாட்டு' எனச் சொல்வதும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் கைடோ. மூவரும் என்ன ஆனார்கள் ?, படத்தைப் பாருங்களேன். எவ்வளவு அழகான வாழ்க்கை நமக்கெல்லாம் என்று தோன்றும்.



கண்ணீர்த் துளிகள்;
துளி 1 :
'Dogs and Jewish are not allowed' என ஒரு கடையில் எழுதியிருக்கும். அதைப் பற்றி ஜோசுவாவும், கைடோவும் பேசும்பொழுது சிந்தியது. கவனிக்க, நம் நாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. எல்லா சாதியினர் வீட்டுக்குள், எல்லா சாதியினரும் செல்ல முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

துளி 2 :
தனியாக கடையில் அமர்ந்திருக்கும் ஜோசுவாவை அவன் பாட்டி பார்க்க வரும்பொழுது.

துளி 3 :
இப்படி அடைத்து வைத்திருப்பது, சாப்பாடு இல்லாமல் இருப்பது இதெல்லாம் எதற்கு என ஜோசுவா கேட்க 'இது ஒரு விளையாட்டு' என கைடோ சொல்லுமிடம். ஆம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே என எனக்கு நினைவுக்கு வந்தது.

துளி 3 :
கைடோ தான் கொல்லப்படும் சமயம், பையனுக்கு தெரியாமல் இருக்க வீர நடை நடந்து போகும் பொழுது.

துளி 4 :
போட்டியில் வெற்றி பெற்றால் பையனுக்கு ஒரு 'Tank' கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் கைடோ. இறுதியில் 'Tank' மேலமர்ந்து வரும் வீரர், ஜோசுவாவை தூக்கி வைத்துகொள்ள அவன் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும்பொழுது.

முடிவாக, 'அன்பே சிவம்' படத்தின் இறுதியில் 'இந்த உலகத்தில் மறைந்து கிடக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்' என ஒரு வரி வரும். அந்த ஆச்சரியங்களை பார்த்து ஆனந்தப் படாமல், மனிதர்களை காவு வாங்க வைக்கும் போர்களை நடத்தும் மனிதர்களை என்ன செய்யலாம்?.


Wednesday, July 14, 2010

மரங்களில்லா வாழ்வு.. ? (ஒரு கேள்விக்குறி)


நாம் இருக்கும் அலுவலகம், வீடு என எல்லாமே ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்தது தான். அழிக்க மட்டும் முடிந்த நம்மால் ஒரு சிறு மரத்தை நட்டு பாதுகாக்க முடிவதில்லை.

கோவை - மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையின் இருபுறமும் இருந்த புளிய மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மரமா, மனிதனா என்று கேட்டால் மனிதன் தான் முக்கியம் எனச் சொல்லும் மனிதர்கள் உள்ள இந்த காலத்தில் மரங்கள் அழிவதை எப்படித் தடுக்க முடியும். மரங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை, எல்லாவற்றுக்கும் சட்டத்தில் வழி உண்டு.

நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தனது வலைத்தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார். http://saamakodangi.blogspot.com/2010/07/blog-post.html. அவருக்கு எனது நன்றிகள் பல. அந்த மரங்களுக்கு அருகில் இருந்தவன் என்பதனால் எனக்கு மிக்க வருத்தம்.

எல்லா மரங்களையும் வெட்டி விட்டு சுவாசக் காற்றுக்கு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும் வரலாம். நம் சந்ததிகளுக்கு எதை கொடுக்க போகிறோம்?. வாடகைக்கு அறைகள் கட்டும் இடங்களில், கொஞ்சம் மரங்கள் வளர்க்கவும் இடம் ஒதுக்கலாம். ஓங்கி வளர்ந்த அழகு மரங்களை வளர்க்கும் நமது IT நிறுவனங்கள், கொஞ்சம் வேப்ப மரம் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இந்த உலகில் இருந்து எவ்வளவோ பெற்று கொண்ட நாம் ஒரு மரத்தை நட்டு வைத்தால் என்ன நண்பர்களே..

நாளை சாலைகள் இருக்கும். அந்த மரங்கள் இருக்காது.
பூமி இருக்கும். சுவாசிக்க காற்றுதான் இருக்காது.



மரத்திற்கு;

தாய், செல்வம் என எப்படி உங்களை அழைப்பது?. தாய் என்றால், என் தாய்க்கும் முன்னால் இருந்து நீங்கள் இருந்தீர்கள். செல்வம் என்றால், உங்களை செல்வம் என எப்படி அழைப்பது, நீங்கள் கொடுத்தது கொடை அல்லவா ?. ஆகையால் நீங்கள் கடவுள்கள்.

கடவுள்களே, நாங்கள் சுவாசிக்க காற்று தந்தீர், கனி தந்தீர், நிழல் தந்தீர், மழை தந்தீர். ஆனால் நாங்களோ, உங்களுக்கு மரணத்தைப் பரிசளிக்கிறோம். எங்களை மன்னியுங்கள். இரக்கமற்ற பாவிகள் நாங்கள்.

போய் வாருங்கள் கடவுள்களே....




குறிப்பு:
எங்கள் விழுதுகள் மூலமாக இந்த வருடம் மரக் கன்றுகளை நட எண்ணியுள்ளோம்.
மேலே இருக்கும் பசுமையான படங்கள் போன வருடம், அதே சாலையில் எடுத்தவை.