Monday, March 11, 2013

வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

நீங்கள் எப்போதாவது அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாங்கள் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறோம். பேருந்துகளில், ரயில் நிலையங்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகிறார்கள், வட நாட்டு மக்கள். மொழி புரியாமல் இங்கே வரும் அவர்கள், குறைந்த கூலிக்கு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். சின்ன இடத்தில அவ்வளவு பேரும்  தங்குகிறார்கள். குறைந்த சம்பளத்தை வாங்கி, கொஞ்சம் செலவு செய்து மீதியை தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால், அவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு நாள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நான்கைந்து பேர் ஏறினார்கள். பயணச் சீட்டும் எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும், நடத்துநர் அவர்களிடம் 'டிக்கெட் எங்கே?' எனக் கேட்க, உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தே நின்று விட்டான். அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. நடத்துநர் திரும்பவும் சத்தமாக கேட்க,. எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு மூன்று முறை கேட்டு, எப்படியோ அவர்கள் புரிந்து கொண்டு பயணச் சீட்டை எடுத்துக் காண்பித்தனர். நடத்துநர் சரி பார்த்து விட்டு, புலம்பிக் கொண்டே சென்றார். என் பக்கத்திலிருந்த ஒரு பயணி 'வந்திர்ரானுகோ கெளம்பி..' என்று, கேவலமாகச் சிரித்தார்.

இன்னொரு நாள் சந்தையில், வட நாட்டு இளைஞர்கள் சிலர் உருளைக் கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் ஐந்து கிலோ, பத்து கிலோ என்ற கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தனர் . 'எப்படித்தான் இத்தன உருளக் கெழங்க தின்கிரானுகளோ' என்று பேசிக்கொண்டு நடந்தார் இன்னொருவர்.

இதற்கும், இந்த ''வளைகள் எலிகளுக்கானவை"  கதைக்கும் என்ன சம்பந்தம் என்ன என்று கேட்கிறீர்களா?. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் - 'சூடிய பூ சூடற்க' கதைத் தொகுதியில், 'வளைகள் எலிகளுக்கானவை' என்ற கதை இருக்கிறது. இந்தக் கதையிலும் எங்கோ வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், ரயில் சுற்றுப் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புண்ணிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் ஏறும் நம் ஊர் மக்கள், அவர்களைப் பார்த்து 'வேறு பெட்டிக்கு போகச் சொல்கிறார்கள்.. கூடவே அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் எனவும் பேசி விடுகிறார்கள். அவர்கள் கோபத்துடன், தங்களிடம் இருந்த பயணச் சீட்டை காண்பிக்கிறார்கள். சிறு கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. இறுதியில கலெக்டர் வந்து சமாதானம் செய்து ரயிலைப் புறப்பட வைக்கிறார்.

'நாங்க ஏழைங்க சாப்.. கர்சிரோசி விவசாயிங்க.. வித்அவுட் பிச்சைக்காரங்க இல்ல.. போன வருஷம் காசி போனோம்.. அதுக்கு முந்தி காளிகட் போனோம்.. கன்யாகுமரி வந்து நாங்க ரத்தக் கறையோட போறோம்..'  என்று சொல்கிறார்கள் அவர்கள்.

ரயில் நகர்ந்த பின் வழியனுப்ப வந்த இருவர் பேசிக்கொண்டு போனார்கள். 'காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊர்லே கெடக்காம..பொறப்பிட்டு வந்திருக்கானுகோ.. ஊரை நாறடிக்கரதுக்கு..'

அவர்கள் மேற்கில் மேலாங்கோடும் கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை. தெற்கே கன்னியாகுமரிக் கடலையும் வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்ட முடியாது.


***********

அவர்கள் எங்கேயோ இருந்து கிளம்பி வந்து, இங்கே பிரயாணம் செய்கிறார்கள், கோவிலுக்குப் போகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். நாமோ இருக்கும் இடத்தில இருந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆம், எப்போதும் வளைகள் எலிகளுக்கானவை.

4 comments:

  1. திறமையான புத்திசாலிகள்...

    ReplyDelete
  2. நல்ல பார்வை . அதேசமயம் அவர்களும் சமயங்களில் ஆடி பார்த்துவிடுகிறார்கள் என்பதும் உண்மையே.

    ReplyDelete
  3. இந்த கதைத் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன் இன்னம் படிக்கவில்லை...ஒரு நேரத்தில் தமிழன் பிழைப்பு தேடி வட நாடு நோக்கி செல்லவேண்டியிருந்தது...கால மாற்றம் இன்று அவர்களை வரவைத்திருக்கிறது.அனைத்திற்கும் காரணம் கல்வி எனும் மகிழ்வு கொஞ்சம் இருக்கிறது...

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன்
    @ஜீவன்சுப்பு
    @ezhil
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete