Tuesday, October 4, 2011

நட்பின் இலக்கணம்

நட்புக்கு இலக்கணமாக சங்க காலத்தில் இருந்து இருவர் சுட்டிக் காட்டப்படுகிறார்கள். பிசிராந்தையாரும் சோழனும். அப்பாடலைப் பற்றி, ஆனந்த விகடனில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள் 'சங்க சித்திரங்கள்' பகுதியில் எழுதியிருந்தார். என் டைரியில் எழுதி வைத்திருந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


==============

அன்னச் சேவ லன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்
நாடுதலை யளிக்கு மொன்முகம் போலக்
கோடுகூடு மதிய முகில்நிலா விளங்கும்
மையன் மாலையாங் கையறு பிணையக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே.
-- பிசிராந்தையார்

பொருள்:
========
அன்னச் சேவலே, அன்னச் சேவலே
போரில் வென்று, யானை மீதேறி
ஊர்க்கோலம் வரும்
மன்னனின் முகம்போல
மலைமடிப்பில் முழுமதி ஒளிரும்
இந்த அழகிய இரவில்
நான் மட்டும் துயருற்று இருக்கிறேன்.
நீ குமரிக் கடலில் இருந்து
அயிரை பிடித்து உண்டு
வடக்குமலைக்குச் செல்லும் போது வழியில்
சோழ நன்னாடு வருகையில்
கோழியோனின் உயர்ந்த மாடத்தில்
உன் பேடையுடன் இறங்கி
வாசலில் புகாது அவன் அவைக்குச் சென்று
என் பெரு நற்கிள்ளி கேட்க,
பெரும்பிசிர் ஊரைச் சேர்ந்த
ஆந்தையாரின் அடியவன் என்பாய் என்றால்
உன் அழகிய பேடை அணிய தன் அன்பு கலந்த
அணிகலன்களை அள்ளிப் பரிசளிப்பான்.

============

சங்கக் கவிதையுலகில் நட்பின் இலக்கணமாக இந்தக் கதை மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது. அன்பின் பெரு வல்லமையைப் பற்றி சொல்லும் இந்தக் கவிதை, எனக்கு அடைக்குந் தாழ்களையே மேலும் துல்லியப் படுத்துகிறது. பறவை மண்ணிலிருந்து விடுபட்டது. மண்ணின் எண்ணற்ற சுவர்கள், எல்லைகள், அடையாளங்கள் அதற்கு இல்லை. பிசிராந்தையார் உண்மையில் சொல்ல முயன்றது - மண்ணில் மானுடத்தைத் தளையிடும் எல்லைகளைப் பற்றி அல்லவா?.
- ஜெயமோகன்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

1 comment: