Tuesday, February 8, 2011

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்:
பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான்.

மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன்.

அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.


இது ஒரு மீள்பதிவு !11 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நற்றிணை பாடல் அதன் பொருள் அறிந்து கொண்டேன்..
அருமை..

Chitra said...

அருமையான பகிர்வு. ரசித்தேன்.

RVS said...

இலக்கியப் பதிவு நன்றாக இருந்தது... ;-)

ஜீ... said...

அருமை பாஸ்!

ஷஹி said...

அதெல்லாம் சரி தான் .நீங்க பாருக்கு போனீங்களா???!

இளங்கோ said...

@# கவிதை வீதி # சௌந்தர்
தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே..

இளங்கோ said...

@Chitra
நன்றிங்க சித்ரா அக்கா.

இளங்கோ said...

@RVS
தங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள் அண்ணா.

இளங்கோ said...

@ஜீ...
நன்றிங்க பாஸ்.. :)

இளங்கோ said...

@ஷஹி
யாராவது கேட்பார்கள் என நினைத்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள் :)

நான் சும்மாதான் போனேன், அந்த ப்ரென்ட் தான் குடிச்சான் :)

நான் சும்மா, கதைய கேட்டுட்டு திரும்பி வந்துட்டேன்.

ஷஹி said...

அதானே பாத்தேன்! gud boy, keep it up...

Post a Comment