Tuesday, January 11, 2011

ஒரு கூடு

அந்த காலை நேரத்தில் சென்ட்ரலில் இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கிய போது நகரம் கொஞ்சம் தான் விழித்திருந்தது. கண்ணனுக்கு செல்லில் கூப்பிட்டேன். வந்து கொண்டிருப்பதாகவும், மேல் படி ஏறி பிள்ளையார் கோவில் பக்கத்தில் நிற்கச் சொன்னான்.

சென்னை, தி நகரில் ஒரு வேலைக்கான இன்டர்வியு இருப்பதால் ஊரிலிருந்து நேற்று இரவு ரயிலேறினேன். முன்னமே சென்னை வந்தால், 'ரூமுக்கு வாடா' என்று சொல்லி இருந்தான் கண்ணன். நேற்றிரவே அவனிடம் பேசி நான் வருவதை அவனிடம் சொல்லிவிட்டேன். மற்ற நண்பர்கள் இருந்தாலும், இண்டர்வியுவுக்குப் போவதற்குப் பக்கமாக இருக்கும் என்றுதான் அவன் அறைக்கு வருவதாக சொன்னேன். அவனுக்காக நின்று கொண்டிருந்தேன். அதோ வந்து விட்டான்.

"எப்படிடா இருக்க.. ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.. வேலை எப்படிப் போகுது.. " என இருவரும் பரஸ்பரக் கேள்விகளை அடுக்கிப் பதிலைப் பெறலானோம். ரொம்ப தூரம் நடந்து கொண்டிருந்தோம்.

"என்னடா.. ஊரைச் சுத்திக் காட்டுறியா.. ரூம் எங்கடா.." என்றேன்.

"இதென்ன.. வந்தாச்சு" என்று பக்கத்தில் இருந்த நான்கடுக்கு மேன்சன் கட்டிடத்தைக் காட்டினான். மேன்சன் என்பதால் பக்கத்தில் முனியாண்டி சாப்பாட்டு கடை, பெட்டிக் கடை, மளிகை கடை, சலூன் என அந்த வீதி நிரம்பிக் கிடந்தது. இரண்டாவது மாடியில் அவன் ரூம் இருந்தது. ஒவ்வொரு அறைக்கு முன்னாலும் இருந்த திண்டுகளில் கயிறுகள் கட்டப்பட்டு ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

கண்ணனின் அறைக்குள் உள்ளே போனதும் "அப்பாடா.. நல்ல வேல, வர்றப்போ வாட்ச்மென் இல்ல.. இருந்திருந்தா 108 கேள்வி கேட்டிருப்பான்.." என்றான் கண்ணன். அவன் அறையில் இன்னொருவரும் தங்கி இருக்கிறார். அறைக்கு இரண்டு பேர். இரண்டு கட்டில்கள் இரண்டு பக்கமும், ஓரத்தில் ஒரு டேபிளும் போட்டிருந்தார்கள். டேபிளில் புத்தங்கங்கள், பேப்பர்கள், பேனாக்கள் என ஒழுங்கின்றி குவிந்து கிடந்தன. உள்ளேயும் இரு ஜன்னல்களுக்கு இடையில் கயிறு கட்டப்பட்டு, துணிகள் தொங்கியிருந்தன. நீண்ட நாட்கள் சுத்தம் பண்ணாததால் ஒரு வித வாசம் அடித்தது. ஓரமாக ஒரு விளக்கு மாறும், இரண்டு பக்கெட்டுக்கள் குவளைகளோடு கிடந்தன.

"ஏண்டா.. முன்னாடியே சொல்லிருந்தா.. வேற யாரோட ரூமுக்காவது போயிருப்பேன்ல." என்றேன்.

"அதனால என்ன.. அவன் கெடக்கான்.. நீயே எப்பவாவது ஒரு நாள்தான் இங்க வர்றே.. உன்னை எப்படி இங்க வர வேண்டாமுன்னு சொல்லுறது.. இந்தா போய், பல்ல வெளக்கிட்டு வா.." என்று பேஸ்டைக் கொடுத்தான்.

பல்லை விளக்கி விட்டு வந்ததும், அவன் ரூமுக்கே வர வைத்திருந்த டீயைக் குடித்து முடித்தோம். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "சரிடா.. நான் குளிச்சிட்டு வர்றேன்.." என்றதும், "இருடா.. பாத் ரூம் ப்ரீயா இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்" என்று வெளியே போய்ப் பார்த்து விட்டு வந்து, "இந்தாடா குளிச்சிட்டு வந்திரு.. யாராவது கதவ தட்டுன்னா திறந்துடாத.. அந்த வாட்ச்மென் வந்தாலும் வருவான்" என்றான்.

ஒரு பக்கெட்டை தூக்கிக் கொண்டு அந்த இருளடைந்த குளியலறைக்குச் சென்றேன். 'காதல்' படத்தில் வருவது போல நீண்ட வரிசை நிற்கும் பாத் ரூம் இல்லை. ஒராளவு சுத்தமாகத்தான்இருந்தது. உள்ளே இருக்கும் வரையிலும் வெளியே அந்த முகம் தெரியாத வாட்ச்மென், கையில் ஒரு பிரம்புத் தடியோடு நின்று கொண்டு இருந்தாலும் இருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். குளித்து விட்டு வெளியே வந்தால், யாரும் இல்லை. ஒன்றிரண்டு பேர் பேப்பரும் கையுமாக வெளியே நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் கிளம்பியதும், கண்ணனும் என் கூடவே ஸ்டேசன் வரை வருவதாக கூடவே வந்தான். கீழே இறங்கும்பொழுது முதுகு திரும்பிக்கொண்டு, தலைக்கு ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, காக்கி உடையில் வயதான் ஒரு ஆள் படிக்கு அருகில் உட்கார்ந்து இருந்தான். அந்த ஆளைப் பார்த்ததும் அவன்தான் வாட்ச்மேன் என்று தெரிந்தது. கண்ணனின் முகத்தைப் பார்க்க 'நேராப் போ.. ஒன்னையும் கண்டுக்காத..' எனச் சைகை செய்தான். இருவரும் அந்த ஆளைக் கடந்ததும், அந்த வாட்ச்மென் சுதாரித்து "தம்பி.. தம்பி.. நில்லு.." என்றான். கண்ணன் திரும்பிப் பார்த்து விட்டு "இருங்க.. ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.." என்று வேக வேகமாக என்னை இழுத்துக் கொண்டு நடந்தான்.

நான் அவனிடம், "என்னடா.. அந்த வாட்ச்மேன் ஏதாவது சொல்லுவானாடா.. " என்று கேட்டேன்.

"அவன் என்ன சொல்லப் போறான். போய், இன்னைக்கி அவன் நைட் தண்ணி அடிக்கறதுக்கு ஐம்பதோ நூறோ குடுக்கணும். புதுசா ஒரு ஆள் வரக் கூடாது அவனுக்கு. " என்றவன், திடீரென்று என்ன நினைத்தானோ,

"ஏண்டா.. இந்த பாரதி சொன்னாப்ல சுத்திலும் தென்னை மரம், குருவி கிளி இருக்குற மாதிரி வீடு கூட வேண்டாண்டா. சொந்தக் காரங்களோ, நம்ம பசங்களோ வந்தா ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு, ஊரைச் சுத்திக் காட்டுற மாதிரி ஒரு வீடு இருந்தா எப்படி இருக்கும். பெரிய ஊருனுதான் பேரு. ரெண்டு நாள் சேர்ந்து தங்க வைக்க முடியறதில்ல.. ஏண்டா, நாமா எல்லாம் இங்க ஒரு வீடு வாங்க முடியுமாடா.. ஒரு நாள் இந்த சிட்டில வீடு வாங்கணும்டா.. " என்று புலம்பிக் கொண்டு வந்தான்.

ஸ்டேசன் வந்ததும், அவனே என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு தி.நகருக்கு டிக்கெட் வாங்கி வந்தான். பிளாட்பாரமுக்கு வரவும் எலெக்ட்ரிக் வண்டி வந்து நின்றது. "இன்டெர்வியு நல்லா பண்ணுடா.. ஆல் தி பெஸ்ட்.. பை டா.. " என்று விடை பெற்றுக் கொண்டோம்.

நகரம் என்பது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மாயை போலத் தோன்றுகிறது. ஆனால், அதன் அடியில் எவ்வளவோ அடிகளும், வேதனைகளும் உறைந்து கிடக்கிறது. உள்ளே அமர்ந்து யோசித்து கொண்டிருக்கும் என்னைச் சுமந்த படி, ரயில் நகர்ந்து விட்டது.

18 comments:

  1. சொந்த அனுபவமா? இல்லை கதையா? ஆரம்பம் அட்டகாசம். ;-)

    ReplyDelete
  2. நகரம் என்பது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மாயை போலத் தோன்றுகிறது. ஆனால், அதன் அடியில் எவ்வளவோ அடிகளும், வேதனைகளும் உறைந்து கிடக்கிறது. உள்ளே அமர்ந்து யோசித்து கொண்டிருக்கும் என்னைச் சுமந்த படி, ரயில் நகர்ந்து விட்டது.


    ......சாராம்சம் - எல்லோரையும் நிச்சயமாக யோசிக்க வைக்கும்.

    ReplyDelete
  3. நல்லதொரு சிறப்பான மொழி நகர்வு...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  4. சென்னையின் அவலம் இக்கதையில் ஒரு துளி. உங்க நடை வசீகரம் இளங்கோ!

    ReplyDelete
  5. எழுத்து நடை அருமை சகோ

    ReplyDelete
  6. @RVS
    அனுபவம் - 75%, கதை - 25%.. :)
    வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  7. @Chitra
    ஆமாங்க. நன்றிகள் :)

    ReplyDelete
  8. @ம.தி.சுதா
    நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  9. @Balaji saravana
    பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  10. @ஆமினா
    நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  11. உங்கள் சிறுகதை களத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம்..
    உங்கள் எழுத்து நடைக்கு உள்ளிருந்து ஆதரவு அளிக்கிறோம்.

    ReplyDelete
  12. @பாரத்... பாரதி...

    ஆஹா, ஏதாவது கட்சி ஆரம்பிக்கும் எண்ணமா இல்லை தேர்தல் நெருங்குவதாலா, இப்படி ஒரு பின்னூட்டம். :)

    உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் எனது நன்றிகள் நண்பரே.

    நன்றி.. ! நன்றி.. ! நன்றி.. ! :)

    ReplyDelete
  13. //ஷஹி said...

    nice one Elango..touching also
    //

    Thank you..

    ReplyDelete
  14. //அன்புடன் அருணா said...

    பூங்கொத்து!
    //
    நன்றிங்க..

    ReplyDelete
  15. நினைத்துக் கொண்டு ஒரு பயனும் இல்லை.. நகரங்களைக் காதளிப்பதைக் கை விடுவோம் ... கிராமங்களை காதலிப்போம்..

    ReplyDelete
  16. //சாமக்கோடங்கி said...

    நினைத்துக் கொண்டு ஒரு பயனும் இல்லை.. நகரங்களைக் காதளிப்பதைக் கை விடுவோம் ... கிராமங்களை காதலிப்போம்..
    //
    நன்றிங்க பிரகாஷ்..

    ReplyDelete