Tuesday, December 29, 2009

மோகமுள்

மோகத்தை அழித்துவிடு, இல்லால் என் உயிரை போக்கி விடு - என்கிறார் மகாகவி. மோகம், அனைத்தையும் வீழ்த்தி விடும். மோகத்தால் அழிந்தோரின் கணக்கு ராவணனிடமிருந்து ஆரம்பிக்கிறது.


மனித இனம் எப்பொழுது குடும்பம் என்கிற சிறைக்குள் அகபட்டதோ, அப்போதிருந்தே காமமும் அடக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நியதிகள் விதிக்கப்படுகின்றன. மீறியவர்களை ஊர் தவறாக சித்தரித்தது.


ஆணுக்கு பெண் தேடும்பொழுது கூட, அவனை விட வயது குறைந்த பெண்ணை தேடுவது வழக்கம். காதலிக்கும்போதும் ஒத்த அல்லது வயது குறைவான பெண்ணையே தேர்வதும் வழக்கம். தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலிப்பதும், அவள் மறுத்தும், அவளின் சம்மதம் வரும் வரையில் காத்திருக்கிறான், தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய "மோகமுள்ளின்" கதாநாயகன். அவன்தான் பாபு , அவன் காதலிப்பது யமுனாவை.


பாபு தன்னுடைய சின்ன வயதில் இருந்தே, யமுனாவை அக்கா என்றே பழகி வருகிறான். அவனை விட பத்து வயது மூத்தவள். ஆனால் சில சமயங்களில் அவளின் அழகை அவன் ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் கல்யாணம் ஆகாமல் தடை பட, இவன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் சொல்லுகிறான். முதலில் சம்மதிக்காத அவள், கால சக்கரத்தில் சுழன்று எட்டு வருடங்கள் கழித்து அவனிடம் சரி சொல்லுகிறாள். இந்த இடை பட்ட காலங்களில் நடக்கும் கதைக்கும் அவர்களின் உள்ளத்துக்கும் நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார் தி.ஜானகிராமன்.


எட்டு வருடங்கள் கழித்து அவள் கேட்கிறாள்;
"நீ என்னை மறந்திருப்பேன்னு நெனச்சேன். மோகமுள் முப்பது நாள் குத்தும்.. அதுக்கு அப்புறம் மழுங்கிடும்பாங்க. எட்டின மோகம் மட்டும் இல்லை. எட்டாத மோகமும் அப்படிதான். நீ மாறவே இல்லையா பாபு" - யமுனா.


"பழைய காலத்திலே நெருப்பு பெட்டி கிடையாதாம். அதனால ஒவ்வொரு வீட்லயும் ஒரு குண்டான்ல நெருப்பு போட்டு மூடி வெச்சிருப்பாங்க. மறுநாள் காலமே கொஞ்சம் சுள்ளியும் வராட்டியும் போட்டு விசிறினால் போதும். அப்படி காப்பாத்திட்டு வந்தாங்க அக்கினிய" - என்கிறான் பாபு.

இவர்கள் இருவரை தவிர, பாபுவின் அப்பா, அம்மா, நண்பன் ராஜம், பாட்டு வாத்தியார் ரங்கா அண்ணா, யமுனாவின் அம்மா, காவேரி கரை என எல்லாவற்றையும் நேரில் பார்ப்பது போல நாவல் கொண்டு செல்கிறது.

எட்டாத மோகம் எட்டி விட்ட முடிவில் நாவலை முடிக்கிறார் தி.ஜானகிராமன் அவர்கள். ஒரு வரைமுறைக்குள் இருக்கும் ஊர் எதைத்தான் ஒத்து கொண்டது. மோகமுள் எல்லோரிடமும் எப்பவாவது குத்தி கொண்டுதானே இருக்கிறது. ஒரு ஓரத்தில் அதையும் ரசித்து கொண்டுதானே இருக்கிறோம் நாம், வலியைப் பொறுத்துக்கொண்டு.

3 comments:

  1. மரப்பசு படிங்க. தி.ஜானகிராமனின் கதைகள் பெரும்பாலும் உறவுச் சிக்கல்களை வெளிப்படுத்துவைகள் தான். இன்று நீ நாளை நான் என்ற ஒரு படம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படத்தில் சொல்லியிருக்கும் சிக்கல் மிகவும் நுண்ணியமானது. முடிந்தால் ஒரு பார்வை பார்த்து வையுங்கள்

    ReplyDelete
  2. கண்டிப்பாக படிக்கிறேன் அண்ணா...

    ReplyDelete
  3. மோகமுள்ளில் ஆரம்பித்த என் தி.ஜா பைத்தியத்தை அவரே மரப்பசுவில் தீர்த்து விட்டார்...இது வரையில் தி.ஜா உங்களுக்குப் பிடிக்குமென்றால்..மரப் பசு படிக்க வேண்டாம்...அம்மா வந்தாள், செம்பருத்தி எல்லாம் திகட்டாத நாவல்கள்..மரப்பசு..கொடுமை!

    ReplyDelete