Posts

Showing posts from 2009

தொலைந்த எழுத்து

வெகு நாளாக புரட்டாத புத்தகத்தில் ஒரு பூச்சி உயிர் விட்டிருந்தது... உயிர் விட்டிருந்த பக்கத்தில் ஓர் எழுத்தை மறைத்து கிடந்தது.. பூச்சியை எடுத்த பின் அவ்விடத்தில் இருந்த எழுத்தும் காணவில்லை... எந்த எழுத்தை போட்டும் அவ்வாக்கியத்தை நிரப்ப முடியவில்லை அதன் உயிரைப் போல...

மோகமுள்

மோகத்தை அழித்துவிடு, இல்லால் என் உயிரை போக்கி விடு - என்கிறார் மகாகவி. மோகம், அனைத்தையும் வீழ்த்தி விடும். மோகத்தால் அழிந்தோரின் கணக்கு ராவணனிடமிருந்து ஆரம்பிக்கிறது. மனித இனம் எப்பொழுது குடும்பம் என்கிற சிறைக்குள் அகபட்டதோ, அப்போதிருந்தே காமமும் அடக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நியதிகள் விதிக்கப்படுகின்றன. மீறியவர்களை ஊர் தவறாக சித்தரித்தது. ஆணுக்கு பெண் தேடும்பொழுது கூட, அவனை விட வயது குறைந்த பெண்ணை தேடுவது வழக்கம். காதலிக்கும்போதும் ஒத்த அல்லது வயது குறைவான பெண்ணையே தேர்வதும் வழக்கம். தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலிப்பதும், அவள் மறுத்தும், அவளின் சம்மதம் வரும் வரையில் காத்திருக்கிறான், தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய "மோகமுள்ளின்" கதாநாயகன். அவன்தான் பாபு , அவன் காதலிப்பது யமுனாவை. பாபு தன்னுடைய சின்ன வயதில் இருந்தே, யமுனாவை அக்கா என்றே பழகி வருகிறான். அவனை விட பத்து வயது மூத்தவள். ஆனால் சில சமயங்களில் அவளின் அழகை அவன் ரசிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் கல்யாணம் ஆகாமல் தடை பட, இவன் உள்ளத்தில் உள்ளதை அவளிடம் சொல்லுகிறான். முதலில் சம்மத...

பேருந்துக்குள் தட்டான்

விரைந்து போன பேருந்தில் எப்படியோ உள்வந்த தட்டான் கண்ணாடி சன்னலில் முட்டி மோதியது வெளியேற கண்ணாடி சன்னலில் சாய்ந்து தூங்கியிருந்த பெண்ணின் முகத்திலும் அதே சலனங்கள்...

புகைப்படங்கள்

Image
இவை யாவும் என்னுடைய அலை பேசியிலிருந்து எடுக்கப்பட்டவை.. மேட்டுபாளையம் ஆறு.. சென்னை, அண்ணா பல்கலைகழகம் கொடைக்கானல் பழனி பழனி ஊட்டி ஊட்டி ஒரு புன்னகை அவினாசி கோவில் அவினாசி கோவில் பூக்களின் அழகு இரவும் மலரும் மற்றும் ஒரு புன்னகை ஊட்டி ஊட்டி

பாரதியும் ரஜினியும்

டிசம்பர் 11 அன்று மகா கவி பாரதியின் பிறந்த நாள். ஊரும் உலகமும் மறைந்த அந்த கவியை நினைத்து பார்க்க நேரமில்லாமல் இருந்தனர். அக்னி குஞ்சாய் வலம் வந்த பாரதியை நினைக்கவும் ஆள் இல்லை. ஒரு சில வலை தளங்களில் மட்டும் பாரதியை பற்றிய கட்டுரைகள் காணக் கிடைத்தன. அதற்கு அடுத்த நாள்.... பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரை படங்கள் அனைத்து டிவி களிலும், ஊர் எங்கும் அன்ன தானங்கள், சிறுவர்களுக்கு சில பரிசளிப்புகள், அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க வண்ண புகைப்படம், தலைப்பு செய்திகள், இடை விடாமல் அவர் புகழ் பாட எப்.எம். ரேடியோக்கள், பட்டாசு வெடிப்புகள்... இன்னும் நிறைய நடந்தது.. இதை எல்லாம் விட உச்ச பட்சம்.. அவருக்காக பால் குடம் எடுத்த ரசிக மக்களும், சிறப்பு பிரார்த்தனை நடத்திய மக்களும் தான்... அவர் வேறு யாருமில்லை.. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.. ரஜினி கொண்டாட பட வேண்டியவர்தான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் பாரதியின் பிறந்த நாள் அன்று ஊடகங்கள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியவில்லை.. நம் மக்களும் பாரதியை நினைத்து என்ன ஆக போகிறது என்று நினைத்து இருக்கலாம்... காலையில் இருந்து பொழுது சாயும் நேரம் வரையும...

மீண்டும் சில கொலைகள்

அன்புள்ள குழந்தைகளே, எமது அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி வழங்குவதிலும், சில முறைகேடுகள் செய்யவுமே நேரம் இருந்தமையால் உங்களையும் உங்கள் பள்ளிகள் பற்றியும் நினைக்க நேரம் இல்லை. கும்பகோணத்தில் உங்கள் நண்பர்கள் நிறைய பேரை இழந்தும், அரசும் அதிகாரிகளும் கண்களை கட்டி கொண்டுதான் வேலை செய்கிறார்கள். இப்பொழுதுதான் தடை போடுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் நடப்பது தானே.. என்று நாங்களும் எங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.. வேதாரண்யத்தில் ஏற்பட்டது விபத்து என்கிறார்கள், உங்களுக்கு தெரியும் இது கொலை என்று... கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நாட்டில் நீங்கள் பிறந்து தொலைத்ததுதான் காரணமோ ? எப்படியோ போகட்டும், அடுத்த விபத்து நடக்கும் போதும் தடைகள் போடுவார்கள் நிச்சயமாக... ... எனது கண்ணீர் அஞ்சலிகள் உங்களுக்கு... பிஞ்சு உள்ளங்களே எங்களை மன்னியுங்கள்....

சினிமா

எங்கள் வாழ்க்கையில் வராத வில்லன்களை காட்டினீர்கள் நாங்கள் பார்க்காத குறையுடை காதலிகளுடன் கொஞ்சி மகிழ்ந்தீர் கனவில் கூட பார்க்காத தூர தேசங்களில் பாடி ஆடினீர் பறந்து பறந்து பகைவரை அடித்தீர் எதை வைத்து நீங்கள் நடிக்கும் தயாரிக்கும் சினிமாக்கள் தான் எம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமென விளம்பரம் தருகுரீர் ?

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும். "யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க ..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும். வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ். ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் ...

சாக்கடை

நிலவில் நீர் இருக்கலாம் என அறிய ஒரு செயற்கைக்கோள் ! கண்டம் விட்டு கண்டம் பாயும் கணைகள் ! எத்தனையோ வசதிகள் அறிவியலால் கண்டோம் ! எப்போது தூக்கி விட போகிறோம் சாக்கடையில் இறங்கி முழங் கால் சேற்றில் பதிய சுத்தம் செய்யும் மக்களை.. கைக்குட்டை பொத்தி எட்டி நடை போட்டு மூக்கோடு வாசனையை மறைக்க நினைக்கும் நமக்கு அறிவியல் ஒரு வரம்தான் !

குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)

ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்க்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம். ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று. கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்." "அண்ணா என்ன சொல்லி கொண்டி...

தலைவர்கள் வருகிறார்கள்.....

தேர்தலுக்கும் இடை தேர்தலுக்கும் வெள்ளம் வந்தாலும் தீ வைத்து கொண்டாலும் கட்சியினர் இல்ல திருமணத்திற்கும் உதவிகள் வழங்கவும் கடைகள் திறப்பிற்கும் எங்கள் தலைவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள் நோயுற்றிருக்கும் நோயாளியை பார்க்க வருவது போலவும் மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில் சாக்கடை அதன் ஓரத்தில்தான் எம் மக்களின் இல்லங்கள் எம் குழந்தைகள் அள்ளி விளையாடுவதும் குளித்து மகிழ்வதும் அங்கேதான் எல்லா சமையத்திலும் கழிப்பதும் அங்குதான் அங்கேயும் எம்மை காக்க வந்த ரட்சகர்களான கட்சிகளின் கொடிகள் மட்டும் அழுக்கில்லாமல் உயரத்திலேயே பறக்கின்றன !

பெயர்

நான் எழுதிய எல்லா கவிதைகளுக்கும் பெயரிட்டு விட்டேன் உன்னைத் தவிர !

அம்மா

கூரை மீது வைத்த சோற்றுக்கு வந்தமர்ந்த காகங்களில் எது என் அம்மாவென எப்படி கண்டுபிடிப்பேன் ?

Chicken Ala Carte

பசி... மனிதன் வெல்ல முடியாத நோய்... பாரதி கூட, தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம் என்கிறார். ஒரு பக்கம் தட்டு தட்டாக ஆர்டர் செய்து விட்டு சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டும் ஒரு கூட்டம், குப்பையில் கிடைத்ததையே உண்டு வாழும் ஒரு கூட்டம் என சமூக முரண்பாடுகள். Chicken Ala Carte குறும்படம் இதைத்தான் விளக்குகிறது. உணவின் மீது மரியாதையும், இல்லாதவர் மீது இரக்கமும் ஏற்பட்டால் அதுவே இப்படத்தின் வெற்றி. http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

தாயம்

தாயம் குறும்படத்தின் இணைப்பு பகுதி 1 http://www.youtube.com/watch?v=25D3LgdU RnY பகுதி 2 http://www.youtube.com/watch?v=mJgmFjuu mfk Probability என்பதை கல்லூரியில் படித்ததோடு சரி.. அது வாழ்க்கையிலும் பின்னி பிணைந்து இருக்கும் என்பதை இப்பொழுதுதான் கற்றேன்.... இசை, நடிப்பு, இயக்கம் என அசத்தி விட்டார்கள்... வாழ்த்துக்கள் !

குப்பையும் நானும்

கவிதை எழுதலாம் என்றேன் என்ன கவிதை எனக் கேட்டாய் உன் பெயர் என்றேன் என் பெயர் குப்பை எனச் சொன்னாய் 'உன் பெயர் குப்பைதான் என்னைக் கசக்கி எறிந்து உன்னுடனே என்னையும் குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன் சிரித்துக்கொண்டே தூரம் விட்டு தூரம் நகர்ந்து காற்றோடு கலந்து போனாய் அன்று பெய்த மழை நாளில் !

ஒரு சுகம்

எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை. ஒரு கட்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் பிளாஸ்டிக் நிறைய ஐஸ் ஒரு புட்டி பிராந்தி வத்திப்பெட்டி அல்லது சிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்க்கு நீ நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு. -கவிஞர் நகுலன்

பூ

நீ தலையில் சூடியிருக்கும் பூவை பார்த்த வண்டுகள் எது பூவென தெரியாமல் தடுமாறுகின்றன !

ஓரிடம்

எங்கோ ஓரிடத்தில் சந்திக்க நேரும் போதெல்லாம் கேட்கத்தான் தோன்றுகிறது அகதியாய் வந்த நாம் எப்பொழுது திரும்புவோம் என நேற்று வந்திறங்கிய கர்ப்பிணி பெண்ணை பார்த்த பின் தொண்டைக்குள்ளேயே தங்கி விட்டது

வரிசை

அத்தனையும் நகர்ந்து கொண்டிருந்தன ஒரே வரிசையில் காலுக்கு அடியில் சிலது மிதிபட்டன கையில் நசுக்கி சிலது கொல்லப்பட்டன உயிருள்ள எவற்றுக்கும் திரும்பி பார்க்க நேரமில்லை அத்தனையும் நகர்ந்து கொண்டிருந்தன ஒரே வரிசையில் !

இத்தனைகிடையிலும் ...

போரினால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட மனிதர்கள் வன்முறைகள் அரசியல்வாதியின் மாறாத தந்திர பேச்சுக்கள் போலிகளாக மாறிப்போன காவிக் கறைகள் ஊர்ப் பணத்தை கொள்ளையடிக்கும் பெரிய தலைகள் வியாபாரமான கல்விக் கூடங்கள் இத்தனை நிகழ்வுகளுக்கிடையிலும் நேற்றிரவு மழை பெய்தது பக்கத்து வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது !

அடுப்பு கரி

உஸ்.. உஸ் என ஊதாங்குழலில் அடுப்பு விறகை ஊதிய சுப்பக்காளுக்கு அவசரம் எட்டு மணிக்கு பக்கத்து ஊட்டு டிவி பொட்டியில் நாடகம் பார்க்க பவுடர் பூசிய பொம்பளைகள் அழுததை பாத்து இவளும் அழுது மூக்கை சிந்தி முந்தானியில் தொடைகரப்பதான் பார்த்தாள் மூஞ்சியில் அப்பியிருந்த அடுப்பு கரியை !

குருவி கூடு

எங்கிருந்தோ நாரெடுத்து கிணற்றுக்குள் தொங்கிய கிளையின் அந்தரத்தில் அழகாய் கூடு கட்டியது குருவி எப்படி வீடு கட்டுவெதன படிக்கிறான் மனிதன்

அரச மரத்தடி நடசத்திரங்கள்

கிளைவிட்டுப் பரவிய அரச மரத்தை சுற்றிலும் வெள்ளை நட்சத்திரங்களாய் பறவைகளின் எச்சங்கள் பூத்து கிடந்ததொரு நாளில் ஊர்ப் பஞ்சாயத்து கூடி வெட்டுவதென முடிவு செய்தனர் மரத்தின் வேர் சுற்றியுள்ள வீடுகளில் ஊடுருவுகின்றதாம் மீண்டும் தழைத்து விடுமென அடிமரத்தை தோண்டிய குழியில் உச்சியில் கட்டப்பட்டிருந்த ஏதோவொரு பறவையின் கூடும் முட்டைகளோடு புதைபட்டது இடம் மாறிய பறவைகள் இன்னொரு மரத்தடியில் எச்சமிட்டு கொண்டிருக்க கூடும் !

என் கடவுள்

சிறப்பு வழியா, பொது வழியா என தடுமாறி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒதுக்கப்பட்ட சில கணத்தில் பார்த்தது அய்யரின் முதுகா ? இல்லை கடவுள் சிலையா ? கடைசி வரை விளங்கவில்லை பள்ளத்தில் கூமாச்சி கல்லெடுத்து நட்ட வெச்சுருக்கலாம் பூவும் படையலும் நானே படைச்சு முடிந்தால் என் சாமிக்கு முத்தம் கூட கொடுத்திருக்கலாம் !

பூவை போல்

செத்த பிணத்துக்கும் கடவுளுக்கும் பூவை போல் ஒரே மாதிரி சிரிக்க தெரியாத பாவப் பட்ட மனிதர்கள் !

மொழி

உன் எழுத்தை நானும் என் எழுத்தை நீயும் திட்டியது போதும் எப்போது நிமிர்த்தலாம் நம் சண்டையில் தலை குனிந்த மொழியை !