Friday, April 27, 2012

சித்திரை மழையில்

வழக்கமாக வைகாசி பாதிக்கு மேல்தான் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருடம் சித்திரை மாதத்திலேயே பெய்ய தொடங்கிவிட்டது. நான்கு நாட்களாக மழையில் ஊரே பசுமை போர்த்தியது போல இருக்கிறது. வாடிகிடந்த செடி கொடிகள் எல்லாம் மழையில் தளிரத் தொடங்கியிருக்கிறது. மழையால் வெயில் ஓடிபோய் ஒளிந்து கொண்டது போல, நிலம் சில்லென்று இருக்கிறது. 

வண்ணநிலவன் நாவலில் இப்படிச் சொல்கிறார்; "மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது" -- ஆம் மழை கடவுள், மழையை நேரில் பார்க்கும்போது சில நேரங்களில் நாமும் கடவுள் தன்மை பெற்று விடலாம்.

மழை பெய்து ஓய்ந்த நேரம் எடுத்த படங்கள் இவை; 







 

Monday, April 23, 2012

மியாவ் மியாவ்













எங்கிருந்தோ வந்த
அந்த வெண் மியாவைப்
பார்த்ததும் பையனுக்கு கொண்டாட்டம்

மியாவைப் பார்த்ததும்
அவனுக்கு சோறு உள்ளே சென்றது
மியாவுக்கும் போடச் சொல்ல
அதுவும் கொஞ்சம் பசியாறியது
பின்னர் அடிக்கடி வந்து போனது

இன்னும் கொஞ்ச நாள் கழித்து
சின்ன மியாவுடன் வந்து
வீட்டைச் சுற்றியது

காருக்கடியில், மாடிப்படியில்
செடிகளுக்கு அடியில்
எனச் சுற்றிக்கொண்டே இருக்கிறது
சின்ன மியாவ்.
அம்மா மியாவ் பார்த்தும் பார்க்காமலும்
இருக்கிறது

இப்போதெல்லாம் அவனுக்கு
சோறு ஊட்டினால்
மியாவுக்கும் வைக்கச் சொல்கிறான்

நமக்கு பால் விலை
எப்போதாவது உறுத்த
அவனுக்கோ எப்போதும்
மியாவின் பசியே தெரிகிறது.

படம்: இணையத்தில் இருந்து : நன்றி