Wednesday, August 17, 2011

சிக்னல்















சிக்னல்


சிக்னலில்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

கைக்குட்டை, சாக்ஸ், பூ
மற்றும் இன்னபிற விற்கும்
சிறுவர்களின் கல்வியும்
அவர்களின் பால்ய சந்தோசங்களும்
அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து.
நகராமல் அப்படியே இருக்கிறது.

***************

ஆம்புலன்ஸ்

மனிதம் மறந்து
விட்டதன் அடையாளமாய்
அவசர வண்டிக்கு
வழிவிடச் சொல்லி
காவலர் ஓடிவருகிறார்.

***************

சுதந்திரம்

ஊரெல்லாம் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள்
அன்றும் வாட்ச்மேன் தாத்தா
கொடியேற்றி காலையில் கொடுத்த
சாக்லேட்டோடு
வேலைக்கு வந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, August 12, 2011

தொலைக்காட்சி உலகம்

இருபத்தி நாலு மணி நேர செய்திகள்
இருபத்தி நாலு மணி நேர விளையாட்டு
இருபத்தி நாலு மணி நேர திரைப்படங்கள்
இருபத்தி நாலு மணி நேர பாடல்கள் என
இருபத்தி நாலு மணி நேரத்தில்
ஒரு நிமிடமும் வீணாவதில்லை..

விடுமுறை தினங்களும், பண்டிகைகளும்
நடிகர் பேட்டிகள், விளம்பரங்கள்
முதல் முறையாக ஒளிபரப்பாகும் வரலாற்றுப் படங்கள்
என சுமூகமாகவே கழிகின்றது..

மீதி நாட்களுக்கு, இருக்கவே இருக்கிறது..
எப்போது முடியும் எனத் தெரியாத
நெடுந் தொடர் கதைகள்..

சமையலுக்கு, அழகுக்கு,
நோய்களுக்கு, மனை வாங்குவதற்கு,
ராசிக் கற்கள், ஜோதிடம் என எல்லாவற்றையும்
சொல்லித் தருகிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

பெரும் நேரத்தை விழுங்கும்
இதன் இயக்கத்தை நிறுத்தினால்
நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
நம் வீட்டுக்குள்.