Monday, March 28, 2011

இதுவும்...

ஓட்டுப் பொத்தானை ஒரு அழுத்து அழுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால், கையைப் பிடித்திழுத்து கருப்பு மையை அழுத்தி வைப்பார்கள். அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் மை அப்புவார்கள். அதுவரைக்கும் எந்தக் கூட்டம் கொள்ளை அடித்தால் என்ன, ஊழல் செய்தால் என்ன, நமக்குத் தவறாமல் சன்மானமாக கருப்பு மையோடு, தொலைக்காட்சிப் பெட்டிகளும், மிக்சிகளும், செல்போன்களும் கொடுப்பார்கள்.

- தொழில்கள் வளர
- கல்விக் கட்டணங்களை குறைக்க
- அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிகள்
- விவசாயம் மேம்படுத்த
- மின்சாரம், நீர் ஆதாரம், சாலைகள் பற்றி
- ஏழை மக்கள் முன்னேற
- குழந்தை தொழிலாளர்கள் பற்றி
இவைகளைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. எல்லாமே இலவசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது தேர்தல்.

"மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

அந்த ஒருநாளும் கடந்து போகத்தான் போகிறது. "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா" என்பது போல், அன்றும் வாக்களிக்கப் போகிறோம். கருப்பு மையோடு பின்னர் எல்லோரிடமும் கடமையைச் செய்ததாக பேசிக் கொள்ளுவோம்.

மகாகவி சொன்னதும் நமக்குத் தான்:

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
கஞ்சி குடிப்பதற்கு இலார் - அதன்
காரணம் இவையென அறியும் அறிவுமிலார்
நெஞ்சு பொறுக்கு திலையே...




Thursday, March 17, 2011

ஒரு விருது


விழுதுகள் அமைப்பின் சிறந்த நிகழ்வுகளில் இன்னுமொரு நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை(12/03/2011 ) அன்று சென்னை நாரத கான சபாவில், எங்கள் நண்பன் கமலக்கண்ணனுக்கு, சிறந்த சேவைக்காக, 'மாணவ சேவா தர்ம சம்வர்தினி' யின் 12 - ஆம் ஆண்டு விழாவில் 'சற்குரு ஞானானந்தா நேசனல் அவார்ட்' வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். இந்த விருதுடன் பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கியிருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து கமலக்கண்ணன் உட்பட நால்வருக்கு மட்டுமே இந்த விருதை அளித்திருக்கின்றனர்.

இவ்விருதைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வேளையில், விழுதுகளுக்கு உதவி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

(புகைப்படத்தில் பெற்றோருடன் கமலக்கண்ணன்)