Thursday, March 25, 2010

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை. நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன. ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அங்கே நடந்தவை இங்கு:

- நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை. நேரம் 10:15

- இன்னொரு அலுவலர் வந்தார். இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார்.

- ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க, 'எத்தன தடவ சொல்லுறது... இன்னும் ஒரு வாரம் கழித்து வா.. ' என்றார்.

- ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார். சரி, நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன். ஒரு பத்து நிமிடம் கழித்து, அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார். அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு, கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.

- இன்னொரு ஊழியர் வந்தார். வந்ததும் கையோடு கொண்டு வந்திருந்த கவரில் இருந்து இரண்டு முழ கதம்ப பூவை எடுத்து, பாதியாக்கி ஒன்றை படத்துக்கும் இன்னொன்றை தன் முன்னால் உள்ள பைல்களின் மேல் வைத்தார். நல்ல வேளை படத்தில் அல்லா, விநாயகர் மற்றும் ஏசு அருள் புரிந்து கொண்டிருந்தார்கள். மற்ற மதங்கள் எல்லாம் பாவம் !!

ஆகையால் இதனால் தெரிவிப்பது என்னவென்றால், தெரிந்தவர்கள் அரசு அலுவலகத்தில் இருந்தால் உங்கள் வேலை முடியும். அரசு ஊழியர்கள், நேரம் இருப்பின் நமக்கும் பணி செய்வார்கள் !! . நீங்கள் படிக்காத குடிமகனாகவோ அல்லது நன்றாக பேச தெரியாவிட்டால் கோவிந்தா.. கோவிந்தா.. . அவர்கள் சொல்லும் நேரம் அங்கே இருக்க வேண்டும், இல்லை என்றால் காரியம் நடக்காது.

சரி, இவ்ளோ பேசுறியே, நீ போன வேலை முடிஞ்சுதான்னு கேக்குறிங்க தானே ?. என்ன அடுத்த மாசம் திரும்ப வர சொல்லிருக்காங்க :) . நானும் சாதரண குடிமகன் தானுங்கோ!

Thursday, March 18, 2010

தண்ணீர்.. தண்ணீர்..

தண்ணீர்.. இது இல்லையென்றால் உயிர்களின் வாழ்வு அவ்வளவுதான். திருவள்ளுவர் கூட மழை இல்லையெனில், பசும் புல் கூட தலை நீட்டலரிது என்கிறார்.

காடுகளை அழித்து, மரங்களை வெட்டி சாம்பல் ஆக்கிவிட்டோம். வெய்யில் எரிக்கிறது என்று புலம்புகிறோம். இளநீர் குடித்தும், தர்பூசணி சாப்பிட்டும் தாகம் தணிக்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் என்ன செய்யும். ஒருவேளை கால போக்கில் கடல் நீரில் இருந்து பெற்று கொள்வீர்கள். நம் நாட்டு விலங்குகள் தண்ணி இல்லாமல் மடிய வேண்டுமா?.

வெளிநாட்டு தோழி பேசும்பொழுது சொன்னது "எனக்கு இந்தியாவை பிடிக்கும். அங்குதான் யானைகளும், குரங்குகளும் நிறைய உள்ளன" என்றாள். அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே ?.

அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது. நம்மால் முடிந்த சிலவற்றை செய்யலாம்.

- முடிந்த அளவு நீரை குறைவாக பயன்படுத்துங்கள். முழுவதும் குழாயை திறந்து விட்டு வீணாவதை தடுங்கள்.
- குழாயில் நீர் வீணாவது தெரிந்தால் நன்றாக அடைத்து விடுங்கள்.
- தோட்டம் செடிகள் வைத்திருந்தால் கழிவு நீரை எப்படி உபயோகிக்கலாம் என திட்டமிடுங்கள்.

பதிவர் திரு வின்சென்ட் அவர்கள் தனது வலையில் உலக தண்ணீர் தினம் பற்றி எழுதி உள்ளார். அதற்கான இணைப்பு. http://maravalam.blogspot.com/2010/03/blog-post_10.html

நெஞ்சில் அறைவது போல ஒரு படம் கீழே. தண்ணீர் நம்மை காப்பற்றியது போல, நாம் தண்ணீரை காப்பாற்றுவோம்.