Monday, September 23, 2019

தத்வமஸி

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தின் யோக வகுப்பில் கலந்து கொண்டபோது இரண்டு சமஸ்கிருத பாடல்களைச் சொல்லிக்கொடுத்தனர். அப்பாடல்களின் மூலம் எது எனத் தெரியாமலே அதை மனனம் செய்துகொண்டேன். அந்தப் பாடல்கள்;

அசத்தோமா சத் கமய
தமசோமா ஜோதிர் கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.

ஸக நா வவது
ஸக நௌ புனக்தூ
ஸக வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினா வதிதமஸ்து
மாவித் விஷா வஹை
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.

மேற்கண்ட இருபாடல்களில் முதல் பாடலுக்கு அர்த்தம் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாடலில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஏதோ ஒரு தமிழ் பக்தி பாட்டில் 'ஸக நா வவது' என்ற வரிகள் வரும். அதைக்கொண்டு இது ஏதோ ஒரு பக்தி பாட்டு என நினைத்து கொண்டேன். ஆனால், இது ஒரு உபநிடத வரி என்று , சுகுமார் அழீகோடு அவர்கள் எழுதிய தத்வமஸி புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது.

வேதம் என்பது அனைவருக்கும் உரிமையானது. வேதம் மந்திரங்கள் அடங்கியவை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அவற்றையும் தாண்டி அறத்தை பேசும் வேதத்தையும், வேதத்தில் இருந்து முளைத்தாலும் தனிசிறப்பு வாய்ந்த உபனிடதங்களையும் சுகுமார் இந்நூலில் அழகுற விளக்குகிறார். வேதம் என்பதே 'வித்' எனும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. வித் என்னும் சொல்லுக்கு 'அறிக' என்பது பொருள். வேதத்தை ஒரு மாபெரும் தரு(மரம்) என எடுத்து கொண்டால் அதில் மலர்ந்த ஒரு மனோகரமான பூ தான் உபநிடதங்கள்.


உபநிஷத் என்ற சொல்லுக்கு 'அருகே அமர்ந்து இருக்கிற', 'அடுத்து அமர்ந்து இருக்கிற'என்ற பொருள் சொல்லப்பட்டாலும், சங்கரரின் விளக்கத்தில் இருந்து 'எந்த வித்யை அறிந்து கொண்டால் நானாவித துன்பங்கள் மறையுமோ அதுதான் உபநிஷத்' என்று சொல்கிறார் ஆசிரியர். 

உபநிடதங்கள் என்பது காலத்தால் மாறாத ஒரு பெரும்பொருளாக இருக்க காரணம் அதன் மூன்று சிறப்புகள். முதலாவதாக வேதத்தில் இருந்து தோன்றிய மறுமலர்ச்சி. இரண்டாவது பழையவற்றை மறுப்பது. மூன்றாவது புதிதாக ஒரு தரிசனத்தைக் கண்டறிவது. இந்த மூன்று நிலையிலும் சிறப்பு வாய்ந்த உபநிடதம் உயர்ந்து இமையம் போல் விளங்குகிறது. 

வேதமும் அதிலிருந்து தோன்றிய யாகங்களுமே முக்கியம் என்ற ஒரு காலகட்டம் இருந்தது. அதன் பயனாய் வளர்ந்தது பிரம்மாணமும், சடங்குகளும்,  யாகத்தில் இருந்து தோன்றிய கண்களை மறைக்கக்கூடிய புகை மண்டலமும் தான். இந்திய தொல் வானில் அந்த மாபெரும் புகை எல்லாவற்றையும் மறைக்கும் சூழலில், ஒரு ஒளிச்சுடராய் தோன்றியது உபநிடதங்கள். அறத்தையும், உண்மையான நிலைத்த பொருள் பற்றியும் உரைத்ததால் பிரம்மாணம் தளர்ந்து உபனிடத ஒளி வீசியது. அதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பின்னரே புத்தர் போன்ற ஞானிகள் வரவும், அவர்கள் கண்ட தரிசனத்தை முன்வைக்கவும் முடிந்தது. இவ்வளவு பெரிய நிலத்தில் வேதம் என்ற ஒன்று மட்டும் இயங்காமல் எல்லாவற்றுக்கும் இடமளிக்க காரணம் உபநிடதங்கள் கூறிய வார்த்தைகளும் அதன் தரிசன முறைகளும்தான்.

மூன்று பகுதிகளாக இருக்கும் இந்நூலில் முதல் பகுதி வேதம், பிரம்மாணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்கள் பற்றி விளக்குகிறது. அவை தோன்றிய வரலாற்றையும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விளக்குகிறார்.

(சுகுமார் அழீக்கோடு)

நூற்றுக்கும் மேற்பட்ட உபநிடதங்களில் முக்கியமான பத்து உபநிடதங்கள் பற்றி இரண்டாம் பகுதியில் இடம்பெறுகிறது. மூன்றாம் பகுதியில் இன்றைய நிலையில் வேதம், உபநிடதங்கள் பற்றிய பார்வையையும், மேலை நாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும் சொல்கிறது. 

உபனிடதங்களை விளக்கும்பொழுது, அதில் வரும் வரிகளுக்கு அர்த்தம் சொல்லும்போது, சங்கரர் முதலாக மேலை நாட்டு அறிஞர்கள் வரை அவர்கள் சொன்ன கருத்துக்களை சொல்கிறார் ஆசிரியர். அந்தக் குறிப்புகளையும் தனியாக ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் கொடுத்திருக்கிறார்.

ஈசம், கேனம், கடம், பிரச்சனம், முண்டகம், மாண்டூக்யம், தைத்திரியம், ஐதேரேயம், சாந்தோக்யம் மற்றும் பிருகதாரண்யகம் முதலான பத்து உபநிடதங்கள் ஏன் முக்கியமானவை, அவற்றின் பிரசித்தி பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவாக சொல்கிறார் ஆசிரியர். 

தத்வமஸி, அகம் பிரஹ்மாஸ்மி, சத்யமேவ ஜயதே, நேதி நேதி, ஈசாவாஸ்யம் இதம் சர்வம் போன்ற  உபநிடத்தில் இடம்பெற்ற மகாவாக்கியங்கள் பற்றி தெளிவுபடச் சொல்கிறார். தத்வமஸி என்ற சொல்லுக்கு, 'நீயே அது' என்ற பொருள் இருந்தாலும், தத்+த்வம் எனப்பிரித்து தத் என்ற சொல்லுக்கு வெளியே இருப்பதையும், த்வம் என்றால் உள்முகமான இருப்பையும் கண்டு , இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை உண்டு. அதைக் கண்டறிவதுதான் தத்வமஸி என்ற சொல்லின் நோக்கம் என சொல்கிறது இந்நூல். மேலும் வாய்மையே வெல்லும் என்ற வரியான சத்யமேவ ஜெயதே எனும் வாக்கியம் இந்திய அரசில் அமைந்தது பற்றியும் சொல்கிறது. 

பிருகதாரண்ய உபனிடதத்தில் ஒரு அவையில் கேட்கப்படும் கேள்விக்கு யாக்ஞவல்கியரின்  பதில் கீழே: 
மனிதனுக்கு ஒளி தருவது எது?
சூரியன்
அஸ்தமித்தால்?
சந்திரன்
இரண்டும் இல்லையென்றால்?
தீ
அது இல்லையென்று ஆகுமானால் ?
சொல்
அதுவும் போனால்..?
ஒரு தேவதை
எதுவுமே இல்லாதிருக்கும்போது?
ஆன்மா.


'ஓம் பூர்ணமத'  எனத் தொடங்கும் உபனிடத சாந்தி பாடலில், பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின்னரும் பூரணமே எஞ்சுகிறது என்ற மாபெரும் அறிவைப் பற்றி ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. அந்த வரிகள்;
ஓம் பூர்ணமத:
பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி

யமனுக்கும் நசிகேதனுக்கும் நடந்த உரையாடல் பற்றியும், மற்ற சில புராணக்கதைகளும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது.

இப்புத்தகம் படித்த பின்னர், வேதம் என்றால் என்ன, உபநிடதங்கள் என்றால் என்ன, எந்த வகையில் அவை முக்கியமானவை, மேலை அறிஞர்கள் வேதம் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை, சங்கரர் முதல்கொண்டு அரவிந்தர் வரை உபநிடதம் ஈர்க்க காரணம் என்னவென்பதை அறிய நேர்ந்தது. காந்தி, விவேகானந்தர் போன்ற பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் நூலில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்திய தத்துவம், வேதங்கள், உபநிஷத் பற்றி அறிய விரும்பும் வாசகனுக்கு, இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்பதை அறுதியிட்டு சொல்லமுடியும். 

தத்வமஸி
சுகுமார் அழீக்கோடு (மலையாள மூலம்)
தமிழில்: ருத்ர துளசிதாஸ்
பதிப்பு: சாகித்ய அகாதெமி




Thursday, July 25, 2019

அவன் காட்டை வென்றான் - கேசவ ரெட்டி

'அவன் காட்டை வென்றான்' நாவல் ஒரு கிழவரையும், அவர் வளர்க்கும் பன்றிகளையும், காட்டையும் பற்றிய கதை. அவருக்கு பெயர் எல்லாம் நாவலில் இல்லை. அவருடன் வசிப்பது அவரின் பேரன் மட்டுமே. வேறு யாருமில்லை. காடு எப்பொழுதுமே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பியது. காடுகளை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோர்கள் பார்த்த காடுகள் இப்பொழுது இல்லை. காடுகளை நாம் இப்பொழுது மாற்றிவிட்டோம். 

அன்று காலை அவருக்கு முடியாததால், பன்றிகளை மேய்க்க பையனை அனுப்புகிறார். பொழுது சாய்ந்த பின்னரும் பையன் பன்றிகளைத் திருப்பி ஓட்டி வராததால் கிழவர் பயந்து போகிறார். பன்றிகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ இல்லை பையன் எங்காவது போயிருப்பானோ என்றெல்லாம் நினைக்கிறார். திடீரென அவருக்கு, ஒரு சினைப்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பியது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் பன்றிதான் எங்காவது தொலைந்து போய், பையன் தேடிக் கொண்டிருக்கிறானோ என நினைக்கிறார். 

கொஞ்ச நேரம் கழித்து பையன் பன்றிகளோடு திரும்புகிறான். சினைப்பன்றி தொலைந்து போனதால், அதைத் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அழுகிறான் பேரன். சரி, நான் போய்த் தேடிப் பார்க்கிறேன் என்று கையில் ஈட்டியுடன் கிளம்புகிறார் பெரியவர். 

அவரிடம் இருந்த இரண்டு சினைப்பன்றிகளில் ஒன்று குட்டிகளை ஈன்று குடிசையிலேயே தங்கிவிட்டது. இரண்டு பன்றிகளுமே சிலநாட்கள் முன்பின் தாய்மை அடைந்தவை. அப்படி என்றால் தொலைந்து போன அந்த பன்றி, குட்டிகளை ஈனுவதற்கு இடம் தேடித்தான் போயிருக்கும் என்று நினைக்கிறார். ஈனுவதற்கு தயாராய் இருந்த பெண்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொள்கிறார். 



குட்டிகளை ஈன்ற பெண்பன்றி மிகுந்த கோபமுடன் இருக்கும். யாரையும் பக்கத்தில் நெருங்க விடாது, அப்பன்றியை வளர்த்தவனாகவே இருந்தாலும் கிழித்து சாய்த்து விடும். எப்படியும் கண்டுபிடித்து பன்றி மற்றும் குட்டிகளுடன் திரும்பி வந்து விடுவேன் என்று கிளம்புகிறார் கிழவர். 

பன்றிகள் மேய்ந்த இடத்திலிருந்து, சிறுவன் கூறிய திசையை வைத்து அது காட்டுக்குள் தான் போயிருக்க வேண்டும் என நினைத்து காட்டை நோக்கிச் செல்கிறார். ஒரு ஓடையை கடந்து, எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பம் ஏற்பட்டபோது, தூரத்தில் ஒரு குருவி விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. எனவே பன்றி அங்கேதான் இருக்க வேண்டும் என எண்ணியவாறு குரல் வந்த திசை நோக்கிச் செல்கிறார். 

பக்கத்தில் போனதும் அங்கே பன்றி இருப்பதற்கான தடயங்களை அறிகிறார். ஆனால் பக்கத்தில் சென்றால் பன்றி குதறியெடுத்து விடும் என்று நினைத்து ஒரு மரத்தின் மேலே ஏறிப்பார்க்கிறார். அங்கே தாய்ப்பன்றியைச் சுற்றி குட்டிகள் கிடக்கின்றன. குட்டிகளை எண்ணிப்பார்த்து மகிழ்கிறார். வீட்டில் இருக்கும் குட்டிகளுடன் இந்தக் குட்டிகளையும் சேர்த்தால், எவ்வளவு குட்டிகள் எனக்கு என்று மகிழ்கிறார். அன்று முழுநிலவு. வானத்துக்கு ஒரே நிலவுதான், ஆனால் இங்கே என் அருமைக்குட்டிகள் எவ்வளவு கிடக்கின்றன இந்தப்பூமியில் என்று பூரிக்கிறார். 

குட்டிகளை அருகில் பார்க்க எண்ணி, மரத்தை விட்டு இறங்கி மெதுவாக பக்கத்தில் செல்கிறார். அதற்குள் பன்றி அவரைப் பார்த்து பாய்ந்து வந்து குதறுகிறது. பன்றியிடமிருந்து தப்பித்த கிழவர், சரசரவென மரத்தில் ஏறுகிறார். சிராய்ப்புகளுடனும், உடம்பில் அங்கங்கே வலியுமாக சிரமப்படுகிறார் கிழவர். பன்றிகளை அவருக்கு காட்டிக்கொடுத்த குருவி இன்னும் கத்திக்கொண்டே இருக்கிறது. தொலைவில் இருந்து பன்றி ஈன்ற வாசத்தை வைத்து பெரிய விலங்குகள் ஏதாவது வந்து விடுமோ என பயப்படுகிறார். அவர் பயந்தது போலவே, ஒரு நரி மெதுவாக புதரை நெருங்கி வருகிறது. 

தாய்ப்பன்றி அந்த நரியை குதறி எடுத்து விடுகிறது. தான் வளர்த்த பன்றி நரியைப் போராடிக் கொன்றதில் அவருக்கு பெருமை ஏற்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நான்கு நரிகள் ஒரே நேரத்தில் வர, தாய்ப்பன்றி ஒரு நரியைக் கொல்ல, கிழவர் தன் ஈட்டியின் மூலம் ஒரு நரியைக் கொல்கிறார். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் புதருக்குள் புகுந்த மீதம் இரண்டு நரிகள், ஆளுக்கொன்றாக இரண்டு குட்டிகளை கவ்விக்கொண்டு போகின்றன. பத்துக் குட்டிகளில் இரண்டு போனதை நினைத்து வருந்துகிறார் கிழவர். குருவி இன்னும் ஓயாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. 

கொஞ்ச நேரம் போனால் பன்றி என்னை அடையாளம் கண்டுவிடும் என்று நினைக்கிறார். விடிந்ததும் முதல் வேலையாக தாய்ப்பன்றியை மீதமிருக்கும் குட்டிகளுடன்  கூட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். திரும்ப நிறைய நரிகள் கூட்டமாக வருகின்றன. என்ன செய்யவென அவருக்கு புரியவில்லை. கூட்டமாக இருக்கும் நரிகளை ஒரு பன்றி எவ்வாறு எதிர்கொள்ளும் என நினைத்து, குறைந்தபட்சம் குட்டிகளையாவது காப்பாற்றுவோம் என எண்ணிக்கொண்டு, தன் ஈட்டியை கணநேரத்தில் பன்றியை நோக்கி வீசுகிறார். பன்றி சாய்ந்துவிட்டது. தான் வளர்த்த பன்றியை தானே கொன்றுவிட்டதை எண்ணி கலங்கியவர், கீழிறங்கி கற்களை எடுத்து நரிக்கூட்டத்தை நோக்கி வீசுகிறார். நரிகள் கொஞ்ச தூரம் திரும்புகின்றன. ஒரு கூடையில் அந்தக் குட்டிகளை எடுத்துவைத்து தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். 

வரும் வழியில் அசதியும் களைப்பும் ஏற்பட, குட்டிகளை எப்படியாவது வீட்டுக்கு கொண்டுபோய்ச் சேர்த்து இன்னொரு தாய்ப்பன்றியிடம் முலையருந்த விடவேண்டும் என நினைக்கிறார். பன்றி குதறியதால் தொடையில் ஏற்பட்ட காயங்களும் சேர்ந்துகொள்ள, ஒருமாதிரி இருட்டிவர கூடையை கீழேவைத்து கண் சாய்கிறார். கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்தால் கூடையைச் சுற்றி கழுகுகள் அமர்ந்திருக்கிறது. அவசரமாக அவற்றை விரட்டி விட்டுப் பார்த்தால்,குட்டிகள் உயிருடன் இல்லை. தாங்கமுடியாத துயரத்துடன் மெதுவாக தன் குடிசையை நோக்கி நடக்கிறார். பொழுது விடியப் போகிறது. தன் குடிசை வாசலுக்கு வந்ததும், பொத்தென்று கீழே படுக்கிறார். பேரன் உள்ளிருந்து அவரைப் பார்த்து ஓடி வருகிறான். 

கிழவர் உண்மையாகவே இந்த நாவலின் தலைப்பு போலவே காட்டை வென்றாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இருந்த அறிவை வைத்து இரவு முழுவதும் அந்தக்காட்டில் வாழ்ந்திருக்கிறார். பன்றியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். குருவிகளின் குரலை, பன்றியின் கோபத்தை, நரிகளின் வருகையை அறிந்துகொள்கிறார்.  அந்தவகையில் அவர் காட்டை வென்றவர்தான்.