Friday, March 8, 2013

சாந்தக்கா

நாலரை மணி ரயிலுக்கு
நாலு மணிக்கே கூடையுடன் வந்து
ஜங்சனில் அமர்ந்திருக்கும்
கொய்யா விற்கும் சாந்தக்கா

மெல்லிய வெள்ளை வேட்டியை
இரண்டாக மடித்து கூடை மேலே போடப்பட்டும்
கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள்
வெளியே தெரியும்.

கொய்யா வெட்ட பெரிய கத்தியும்
விருப்பமானவர்களுக்கு
உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த
பிளாஸ்டிக் டப்பாவும்
கூடையில் இருக்கும்.

வண்டி வந்து நின்றவுடன்
யாரோ ஒருவர் தூக்கி விட
கூடையுடன் வந்து பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா
திரும்ப இறக்கி வைக்கவும் ஏற்றவும்
யாரோ ஒருவர் உதவுவர்

வண்டி கிளம்பியதும்
கூடையை நகர்த்திக்கொண்டு
கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா

அடுத்த ஸ்டேசனில்
அடுத்த பெட்டி என்று
ஒவ்வொரு பெட்டியாய்
கொய்யா மணம் பரவும்

ஒருநாள் சுமையைத் தூக்கிவிடும்போது
'சொமையா இல்லியா அக்கா?' என்றேன்.
'ம்.. இதென்ன சொமை..
குடிகார புருசனும்
ரெண்டு புள்ளை,  ஒரு பையனையும் விடவா
பெரிய சொமை'
என்று சொல்லிவிட்டு..
'கொய்யாக் காயேய்..' எனக்  கூவிக் கொண்டு
அடுத்த பெட்டிக்கு
அவசரமாகப் போனது சாந்தக்கா..

சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது.





Wednesday, February 27, 2013

நமது மாணவர்கள்

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா, நானா' - மாணவர்கள் - களப் பணியாளர்கள் என்ற நிகழ்ச்சி பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய தளத்தில் (அசடுகளும் மகாஅசடுகளும்) எழுதியிருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். மாணவர்களைப் பார்த்து அவர்களின் சிரிப்பும், அந்தப் பார்வையும்..  இவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்ற பேச்சும்... . கொடுமை.

மாணவர்களுக்கு இந்தச் சமூகம் பற்றிய பிரக்ஞை இல்லை என்றால் அது யார் குற்றம்?

மாணவர்களுக்கு, இந்த உலகம் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால், நாம் அதற்காக என்ன முயற்சி செய்தோம்?.

அரசியலும், கல்வியும் பணத்தின் பிடியில் இருக்கும் போது, அதற்காக நாம் என்ன செய்தோம்?

நாம் என்ன கற்றுக் கொடுத்தோமோ, அது தானே இங்கே இருக்கிறது. அவர்களின் தடுமாற்றத்தைப் பார்த்து நாமே சிரிப்பது, அவர்கள் நமது அடுத்த தலைமுறை, நம் குழந்தைகள் என்பது நமக்குத் தெரியாமல் போனதேன்.