டாஸ்மாக் - எல்லோருக்கும்
தெரிந்த இடம். கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எங்கும் இருக்கிறது.
குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசுப் பள்ளிகள் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மாக்
கடைகள் இருக்கின்றன.
ஒரு பொருள் எளிதாக எங்கும் கிடைத்தால் அதை மக்கள் வாங்கவே
விரும்புவார்கள். அந்தப் பொருள் ஏதோ டீ போலவோ, பிஸ்கட் போலவோ, போதை தராமல்
இருந்தால் பரவாயில்லை. ஆனால் போதையை தரும் இந்தக் கடைகளை என்ன செய்யலாம்?.
பிறந்த
நாளா - லோன் கிடைக்கவில்லையா - லோன் கிடைத்து விட்டதா - மேனஜேர்
திட்டினாரா - மேனஜேர் பாராட்டினாரா - சம்பளம் உயர்வா - குழந்தை பிறந்ததா -
காதலி போனை எடுக்கவில்லையா - மனைவி கூட சண்டையா - கல்யாணமா - நண்பர்கள்
சந்திப்பா - உறவினர்கள் யாராவது இறந்து விட்டார்களா - இப்படி எது
நடந்தாலும், எந்தப் பிரச்சினை என்றாலும் நம் மக்கள் சொல்லும் வார்த்தை
"வா.. குடிக்கலாம்" என்பதே. பத்தடி தூரத்தில் கிடைக்கும் பொழுது எல்லோரும்
விரும்புவது டாஸ்மாக்கையே.
எங்கள் சிறு வயதுகளில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த கடை இன்று ஊருக்கு
நட்ட நடுவில். சுற்றிலும் தள்ளாடும் மக்கள். அலைமோதும் கூட்டம். சனி,
ஞாயிறுகளில் கேட்க வேண்டாம், வசூல் அள்ளுகிறது. பண்டிகை, தேர்தல்
சமயங்களிலும் அப்படியே - பத்து மடங்கு, இருபது மடங்கு வருமானம் என்று
பத்திரிகைகளில் சொல்கிறார்கள்.
மிக்சர், முறுக்கு சுற்றிய பாலிதீன் கவர்கள், தண்ணி கவர்கள், குளிர்பான
பாட்டில்கள் என ஒவ்வொரு டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கிறது.
சில சமயங்களில் உடைந்த பாட்டில்களும். இந்த உடைந்த பாட்டில்கள், எல்லா
சாலை ஓரங்களிலும், சுற்றுலா செல்லும் மலை பகுதிகளிலும், இன்னும் ஏன்
பாதுகாக்கப்பட்ட இடங்களில் கூட பாட்டில்களை உடைத்து வீசி இருக்கிறார்கள்.
பணம் இருப்பவன் குடித்தால் அவனுக்கு பணம் இருக்கிறது, குடிக்கிறான்
என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தினமும் இருநூறு ரூபாய் கூலி(இதை
விடக் குறைவாகவும் கொடுக்கபடுகிறது) வாங்கிக் கொண்டு, அதில் பாதியையோ
அல்லது முழுவதையுமோ குடிக்கச் செலவிடும் குடிமகனை என்னவென்று சொல்வது.
மனைவி, பிள்ளைகள் அவனுக்கு இருக்கும். மனைவி கொண்டு வரும் கூலியில்,
குடும்பம் நடந்து கொண்டிருக்கலாம். இந்த இடத்தில்தான் நமக்கு உறுத்துகிறது,
அந்த டாஸ்மாக்கை நடத்துவது ஒரு அரசாங்கம் என்று.
பெரியார், கள் இறக்க காரணமாக தன் தோட்டத்தில் இருந்த அனைத்து தென்னை
மரங்களையும் வெட்டி விட்டதாகச் சொல்வார்கள். அதே பெரியாரைத் தான் திராவிடக்
கழகங்கள், முன்னோடி என்று சொல்லிக் கொள்கின்றன. ஆனால், அதே திராவிடக்
கழகங்கள் தான் டாஸ்மாக்கையும் நடத்திக் கொண்டிருக்கின்றன என்பது மிகப்
பெரிய முரண் அல்லவா?.
இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கை ஒழிக்க மாட்டார்கள். அது ஒரு
தங்கச் சுரங்கம். குடிமகன் குடித்துச் செத்தால் என்ன, அவன் குடும்பம்
பசியில் வாழ்ந்தால் என்ன, அவன் பிள்ளைகள் படிக்கும் வயதில் வேலைக்கு போனால்
என்ன?. எல்லாம் அவன் தலைஎழுத்து என்று சொன்னாலும் சொல்வார்கள்.
டாஸ்மாக் - நம் கலாச்சாரத்தில் ஓர் அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.