Wednesday, August 3, 2011

சிநேகம்














எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.

பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.

தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.

மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Monday, August 1, 2011

புதிய இடம்: வால்பாறை

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள்.

மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;