Wednesday, March 2, 2011

பேரும் பெயரும்...

பெயர்க்காரணம் பற்றிய தொடரில் என்னையும் எழுத அழைத்த அண்ணன் ஆர் வி எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.



ஒரு பையனும், ஒரு பெண்ணும் ஏற்கனவே இருக்க மூன்றாவதாக ஒரு பெண் பிறக்க, அப்பாவும் அம்மாவும் இதோடு போதும் என்று குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு பாரத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, 'என்ன பண்றீங்க, இன்னொரு குழந்தை பிறக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்...' என அங்கே வீரம் பொங்க பேசியிருக்கிறார் எனது அம்மத்தா (அம்மாவின் அம்மா). டாக்டர் எவ்வளவோ சொல்லி பார்க்க, மறுத்து விட்டது அம்மத்தா. பின்னர் சில வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் நான். நான் பிறக்கப் போவதை முன்னாடியே யூகித்து வைத்திருந்த மாதிரி, இப்போ பார்த்தாலும் அதைச் சொல்லிக் காட்டும் அம்மத்தா. அன்னைக்கு அம்மத்தா வற்புறுத்தாமல் இருந்திருந்தால், இந்த ப்ளாக், கம்மென்ட் எல்லாம் இருந்திருக்காது, அப்பாடா தப்பிசிருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் தானே? :)

என்னுடைய நட்சத்திரப் படி 'இ' வரிசையில் வரும் பெயர் தான் வைக்க வேண்டும் என முடிவாகியிருக்கிறது. வீட்டில் எல்லோருக்குமே அழகான தமிழ் பெயர்கள், கதிர்வேல், குணவதி, தமிழ்செல்வி என. அது போலவே எனக்கும் 'இளையராஜா' (யாருப்பா.. அங்க சிரிக்கறது.. சிரிக்கப்படாது.. இது வரலாறு !!) என முதலில் வைத்திருக்கிறார்கள். அப்புறம் அது நன்றாக இல்லை என்று 'இளங்கோ' என்று ஆக்கி விட்டார்கள். இப்படிதான் எனக்கும் ஒரு நாமம் சூட்டப் பட்டது.

எங்கள் ஊரில் ஒரு சிலருக்கு 'இ' வராது போல, 'என்ன எலங்கோவா...' என்று கூப்பிடுவார்கள். இதில் இன்னொரு பாட்டிக்கு நான் 'இளங்கோவு...'. பக்கத்துக்கு வீட்டில் இருந்த இன்னொருவர் பெயரை முழுதாக மாற்றி 'என்ன கோவாலு..' என்பார். எப்படியோ ஊரில் சமாளித்து விடலாம். ஆனால் இந்தப் பள்ளியில், 'சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள்' என்று புத்தகத்தில் இருக்கும். அந்தப் பாடம் முடிந்து கொஞ்ச நாளைக்கு 'என்ன இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி முடிச்சுட்டியா? ' என்று கிரௌண்டில் நின்று கொண்டு கத்துவார்கள்.

ஆனால் ஒரு நிம்மதி என்னவெனில், ஏகப்பட்ட சுரேஷ்-களும், ஆனந்த்-களும், சரவணன்-களும் இருக்கும் வகுப்பறை அட்டேண்டேன்சில் எனது ஒரு பெயர் மட்டும் தனியாக இருக்கும். அபூர்வமாகவே இன்னொரு இளங்கோவை எங்காவது கிராஸ் பண்ண முடிகிறது.

இந்தப் பெயர் மட்டும் என்றில்லை. நிறையப் பட்டப் பெயர்கள் உண்டு. அதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. இத்துடன் இந்தப் புராணத்தை நிறுத்திக் கொள்கிறேன். அண்ணன் ஆர் வி எஸ் அவர்களை போல சரளமாக என்னால் எழுத முடியவில்லை என்றாலும், அவர் என்னை மன்னிப்பாராக. :)

நானும் கொஞ்ச நண்பர்களைத் தொடர அழைக்கிறேன்;

பிரகாஷ் (சாமகோடாங்கி)
முரளி
சித்ரா
ஷஹி

மேலே உள்ள படம்: இணையத்தில் இருந்து, 'இளங்கோ' என்று தேட இது தான் கிடைத்தது :(.

நன்றி



Friday, February 25, 2011

நிறம், அழகு மற்றும் சிவப்பழகு கிரீம்கள்

பெண் தேடும் படலத்தில், நல்ல குடும்பம், படிப்பு என்று தாண்டி 'நல்ல சிவந்த நிறமுள்ள பெண் தேவை' , குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை என்ன கலர்?'. குழந்தையின் எடை, ஆரோக்கியம் பற்றி ஒரு கேள்வியுமில்லை. கல்யாணத்துக்குப் போனால், 'பெண் / மாப்பிள்ளை மேட்ச் சரியில்லை. எங்க இருந்து தான் மாப்பிள்ளை / பொண்ணு பிடிச்சாங்களோ' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

சரி விட்டுத் தள்ளுங்கள், சினிமாவில் கூட அழகான நல்ல கலரான (இல்லை மேக்-அப் போட்டுக்கொண்டு) பெண்களே காணக் கிடைக்கிறார்கள். கிராமப் படம் என்றால் இயக்குனரைப் பொருத்து கலர் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்கப் படுகிறது.

அப்படி என்றால் அழகில்லாதவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கும் வழி உண்டாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில், தொடர்களுக்கு மத்தியில், சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. தனது தோலின் நிறம் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம் போல் சொல்கிறார்கள். அது எப்படி ஒரே வாரத்தில், ஸ்லைட் மாற்றுவது போல மின்னுகிறார்கள் எனத் தெரிவதில்லை. அதன் பின்னர் திரும்பிப் பார்க்காத ஆடவரெல்லாம் முக ஒளி பட்டு கீழே விழுந்து தொலைக்கிறார்கள்.



ஆண்களுக்கும் சிவப்பழகு கிரீம்கள் உண்டு. 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு' என்று பாடல் இருந்தாலும், அதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளுவதில்லை. எப்படி சிவப்பழகு க்ரீம்களை உபயோகப் படுத்திய பெண்ணின் பினனால் ஆடவர் செல்கிறார்களோ, அதுபோலவே அது போன்ற க்ரீம்களை உபயோகப் படுத்தும் ஆடவன் பின்னாலும் பெண்கள் செல்கிறார்கள்.

இன்னும் சில நிபுணர்கள் அவ்வப்பொழுது வந்து, வெள்ளரி, முட்டை என்று சிபாரிசு செய்கிறார்கள். சாப்பிட அல்ல, முகத்தில் தேய்க்க. க்ரீம்களை விட இந்த இயற்கை பொருட்கள் எவ்வளவோ மேல்.

உங்கள் நிறம் எதுவாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியமான உடலே உங்களைப் பற்றிச் சொல்லும். எனவே, வெய்யில் காலம் ஆரம்பமாகி விட்டது. நிறைய தண்ணீர் குடியுங்கள். வெள்ளரி, தர்ப்பூசணி போன்ற நீர்ச் சத்து நிறைந்த வகைகளை நிறையச் சாப்பிடுங்கள். ஜொலிக்கும் அழகு உங்களுக்கே.

படம்: இணையத்தில் இருந்து - நன்றி.