Thursday, February 10, 2011

சுவரேறிக் குதிப்பது திருடன் மட்டுமில்லை

இரவு 9.40 - க்கு கோடம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், நிலை கொள்ளாத அவசரத்தில், நீண்டு கிடக்கும் கருந் தண்டவாளங்களில் எலெக்ட்ரிக் ரயிலின் முக வெளிச்சம் வருகிறதா என்று எட்டிப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். எப்போதும் இப்படி இருப்பதில்லை. எப்படியும் கால் மணி அல்லது இருபது நிமிடத்தில் ஏதாவதொரு வண்டி வந்து விடும். இன்று என்ன பிரச்சினையோ அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை. கலைந்து கிடக்கும் பயணிகள் கூட்டம் கூடி விட்டது. தொடர்ந்து செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை கணவனோ அல்லது மனைவியோ, குழந்தைகளோ, அப்பா அம்மாவோ 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என நச்சரித்துக் கொண்டிருக்கலாம்.

என்னைப் போல இவர்களும் லேட்டாகப் போனால் அவர்களது வீட்டின் கேட் திறந்திருக்குமா?. ஆனால், எங்கள் வீட்டு உரிமையாளர் கண்டிப்பாக நடையைச் சாத்தியிருப்பார். இந்த மாநகரத்துக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஏற்கனவே நண்பர்கள் குமார், ரமேஷ் இருந்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், மூன்றாவதாக நானும் சேர்ந்து கொண்டேன்.



நான் அங்கே பெட்டி, படுக்கையுடன் போனதும், எனது அலுவலக முகவரி, வீட்டு முகவரி, போடோவுடன் கூடிய அடையாளச் சான்று என நண்பன் வாங்கி வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டான். எதற்கு என்று கேட்டதற்கு, 'போலீஸ் வந்து கேட்டா, குடுக்கறதுக்கு அப்படின்னு சொன்னாரு' என்றான் நண்பன். அப்புறம் ஒவ்வொரு கன்டிசனாய் சொன்னார்கள். 'நைட் பத்து மணிக்குள்ள வந்துடனும், பத்தே காலுக்கு கேட் பூட்டிருவாங்க.. காலைல எட்டு மணிக்குள்ள குளிச்சிடனும், அதுக்கு மேல தண்ணி வராது.. வாரத்துல ஒரு தடவதான் தொவைக்கணும்.. ப்ரெண்ட்ஸ் யாரும் வந்து நைட் தங்க கூடாது..'. கேட்டதும் தலை கிர்ரென்றது.

இந்த ஒரு மாதமாக எப்படியும் அடித்து பிடித்து பத்து மணிக்குள் எப்படியும் கேட் முன்னாடி ஆஜர் ஆகிட்டேன். இன்னைக்குன்னு பார்த்து ப்ராஜெக்ட் ஹெட் எட்டு மணி ஆகியும் விடவில்லை. கிளம்புவதற்கு ஒன்பது மணி ஆனதென்றாலும், குரோம்பேட்டை போக எப்படியும் மீறிப் போனால் பத்து மணிக்குள்ளாக போய்விடலாம் என நினைத்து வந்தால், வண்டி இன்னும் வந்து சேரவில்லை. 9.40 ஆகியும் இன்னும் கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தது வண்டி. வண்டியில் உள்ள கூட்டத்தை பார்த்தால், ஒவ்வொரு ஸ்டேசன்லயும் நிறுத்தி எடுக்க எப்படியும் மூணு நிமிசத்துக்கு மேல ஆகும். இன்னைக்கு எப்படியும் லேட் தான் என முடிவு பண்ணிக் கொண்டு குமாருக்கு கூப்பிட்டால், "நான் இன்னும் ஆபீஸ்ல தாண்டா இருக்கேன், ரூமுக்கு காலைலதான் வருவேன். நீ ரமேஷுக்கு கூப்பிட்டு சொல்லிடு. அவன் வீட்டு ஓனர் கிட்ட கேட் சாவி வாங்கி வெச்சிடுவான்" என்றான். ரமேஷுக்கு கூப்பிட்டால், செல் சுவிட்ச் ஆப் என்றது. திரும்ப குமாருக்கு கூப்பிட்டேன். "டேய்.. பேசாம கேட் ஏறிக் குதிச்சிடு.. நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அப்படிதான் குதிச்சேன்.." என்றான். "சரி.. போன வை" என்று கட் பண்ணினேன்.

கிண்டி தாண்டியதும் கூட்டம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. படுபய, என்னமோ ஹார்லிக்ச அப்படியே சாப்பிடுவேன்னு சொல்லுற மாதிரி கேட்ட தாண்டிடு அப்படிங்கிறான். அவ்ளோ பெரிய கேட்ட எப்படி எட்டிக் குதிக்கிறது. அப்படியே குதிச்சு யாரவது பார்த்துட்டா, அடுத்த நாள் ஜெயில்ல தான் கம்பி எண்ணனும். சரி யாரும் பார்க்கலைன்னு வெச்சுகிட்டா கூட, அந்த நாய் வேற இருக்குது. எப்பவும் வரும் போதும், போகும்போதும் வள்ன்னு கத்தும். என்னதான் சங்கிலில கட்டி வெச்சிருந்தாலும், அது போடுற சத்தத்துல யாராவது வந்துட்டா?. இங்க வேலைக்கு வந்து இந்த கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்கனும் போல இருக்குதுன்னு நெனச்சிட்டு இருக்கும்போதே, பல்லாவரம் தாண்டிருச்சு. அடுத்து குரோம்பேட்டைதான்.

நேரம் 10.25 ஆகி இருந்தது. சரி எதுக்கும் ரமேசுக்கு கூப்பிட்டு பார்க்கலாம் என நினைத்து கூப்பிட்டால் ரிங் போனது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள, "ஹலோ" என்றேன் நான். பதிலில்லை. திரும்பவும் "ஹலோ.. ஹலோ.." என்றேன். ம்ஹூம். தொடர்பைத் துண்டித்து, திரும்பவும் கூப்பிட்டால்.. 'நாட் ரீச்சபிள்' என்றது. அதற்குள் குரோம்பேட்டை வந்துவிட, இறங்கி படிகளில் ஏறினேன். 10.30 ஆகிவிட்டது.

திரும்ப அவனுக்கு முயற்சி செய்ய, அவன் "டேய்.. எங்கடா இருக்கே.." என்றான்.

"உன்னோட செல் என்னாச்சு.. சுவிட்ச் ஆப் னு வந்துச்சு.."

"இல்லடா.. பாட்டரி டவுன். அதுனால சார்ஜ் போட்டிருந்தேன். ஆபீஸ்ல இருந்து நானும் லேட்டா தான் வந்தேன். நீ கூப்பிட்டப்போ, உன்னோட வாய்ஸ் சரியா கேக்கல. சிக்னல் வேற கிடைக்கல" என்றான்.

"சரி எங்க இருக்கே?" என்றான்.

"எங்க இருப்பேன், ரூமுக்கு வந்துட்டு இருக்கேன். ஆமா, அந்த ஆள் கேட்ட பூட்டிட்டாரா?"

"அதெல்லாம் கரெக்டா, நீ சொல்லிருந்தா நான் சாவி வாங்கி வெச்சிருப்பேன்"
"போடா.. நீயும் உன்னோட செல்லும்.. இப்போ என்ன பண்ணுறது" என்றேன் நான்.

"சரி வா பார்த்துக்கலாம்.. நான் கீழ எறங்கி வர்றேன்"

"சரிடா" என்று போனை வைத்தேன்.

எப்போதும் பிசியாக இருக்கும் மார்கெட்டில், எல்லாக் கடைகளும் பூட்டி விட்டார்கள். கடைகளின் வாசலில் நாடோடிகள் போர்வையை விரித்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டு மூன்று மாடுகள் காய்கறி கடைகளின் கழிவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. பகல் பூராவும், சுவரொட்டிகளை மேயும் மாடுகளுக்கு கொஞ்சம் பச்சை இரவில்தான் கிடைக்கும் போல. மாரியம்மன் கோவிலுக்கு பெரிய கேட் போட்டு, மூன்று பெரிய பூட்டுகள் மேலிருந்து கீழாக தொங்கிக் கிடந்தன. காக்கும் சாமிக்கும் இவ்வளவு பெரிய கேட் தேவை என்றால், எங்கள் வீட்டு ஓனருக்கு கேட் தேவைதானே?

வீட்டுக்கு பக்கமாக வந்து விட்டேன். நாயின் சத்தம் தெரு முக்கு வரை கேட்டது. ரமேஷ் முழித்துக் கொண்டிருபதற்க்கு அறிகுறியாக, மேல உள்ள எங்கள் ரூமில் வெளிச்சம் இருந்தது. கீழே ஒரு சீரோ வாட்ஸ் பல்ப் மட்டும் தர்மத்துக்கு எரிந்து கொண்டிருந்தது. கேட் பக்கத்தில் இருக்கும் படிக்கட்டில் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கேட் பக்கத்தில் வந்தான். கேட்டின் இடைவெளியில், "ஏண்டா.. இவ்ளோ லேட்" என்றான்.

"அந்தக் கதைய அப்புறம் பேசலாம்.. மொதல்ல நான் எப்படி உள்ள வர்றது" என்றேன்.

"ஷூவக் கழட்டி உள்ள போட்டுட்டு..அப்புறம் மேல ஏறு.." என்றான். நாய் குலைத்த சத்தத்தில் இன்னும் ரெண்டும் மூன்று நாய்கள் தொடர ஆரம்பித்தன. நல்ல வேளை, தெருவில் யாரும் இல்லை. குனிந்து ஷூவைக் கழட்டி உள்ளே போட்டேன். சத்தம் கேட்டு நாயின் சத்தம் இன்னும் அதிகமானது. "அதக் கண்டுக்காதே" என்றான் ரமேஷ்.

கேட்டின் மேலே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியைப் பிடித்து காலை கேட்டில் வைத்தேன். கீழே இருக்கும் விளிம்பில் காலை வைக்க வழுக்கிக் கொண்டு போனது. மீண்டும் தம் பிடித்து ஏறினேன். மீண்டும் வழுக்கியது. "என்னடா இது" என்றேன் கொஞ்சம் நடுக்கத்துடன். "உனக்கு ஏறத் தெரியலன்னு சொல்லு" என்றான் அவன். மேலும், ஒரு தடவை முயற்சி செய்ய கால் பெருவிரலில் வலி பரவியது.

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு பக்கத்தில் பார்த்தால், பக்கத்துக்கு வீட்டின் காம்பவுண்டு கண்ணில் பட்டது. அது இடுப்பு உயரம் உள்ள காம்பவுண்டு. எளிதாகத் தாண்டி செல்ல முடியும். அந்த வீட்டின் காம்பவுண்டில் ஒட்டி இருந்த ஒரு வேப்ப மரம் இரண்டு வீட்டின் பொதுக் காம்பவுண்டு சுவற்றின் மேல் கிடந்தது. "டேய்.. அந்தப் பக்கமா வர்றேன்" என்றேன். "பார்த்துடா.." என்றான் அவன்.

காம்பவுண்டை தாவி, மரத்தின் மேல் கால் வைத்து அந்தப் பக்கமாக எட்டிக் குதித்தேன். இன்னும் நாய் உறுமிக் கொண்டு நின்று கொண்டிருந்தது. சங்கிலி மட்டும் இல்லை என்றால், அதோ கதிதான். இன்னும் தெருவில் யாரும் வரவில்லை. அவன் முன்னே போக, பெருமூச்சுடன் மாடிப் படிகளில் ஏறி தாழிட்டேன். உள்ளே போனதும், ரமேஷ் "ஏண்டா லேட்" என திரும்பக் கேட்க, அவனிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் ஒரு சொம்பு தண்ணியை அப்படியே குடித்து முடித்து ஹாலுக்கு வந்தேன். அவனிடம் இன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். ஏனோ, சொந்த ஊரில் இருக்கும் வீட்டு நினைவு வந்து போனது.

படம் : http://lifemytake7.wordpress.com/ - தளத்தில் இருந்து, நன்றி.


Tuesday, February 8, 2011

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில்.

வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான்.

பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.

நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?.

நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது;

நகுகம் வாராய் பாண ! பகுவாய்
அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்று தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யான்தான்
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஓரிஇ
யாரையோவென் றிகந்து நின் றதுவே !

பாடியவர்: மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
திணை : மருதம்
துறை : புதல்வனோடு புக்க தலைமகன் பாணர்க்கு உரைத்தது

வேறொரு பெண்ணிடம் மையல் கொண்டிருந்த தலைவன், தன் வீடு வழியாக செல்லும்பொழுது தன் மகனைப் பார்த்து விட்டு, மனைவியிடம் பேசியதை பாணனிடம் கூறியது இப்பாடல்.

பாடலின் பொருள்:
பாணனே, சிறுவாய் பிளந்த, மணிகளோடு கூடிய கிண்கிணி ஒலிக்க என் புதல்வன் தெருவில் தேர்நடை நடந்து கொண்டிருந்தான்.

மணம் கூடிய ஆம்பல் மலரை போன்ற வாய் கொண்டவனும், குழைத்து பூசிய சந்தனம் கொண்டவனுமான என் மகனை அள்ளி எடுத்துக் கொண்டு என் மனைவியை நெருங்க வீட்டினுள் சென்றேன்.

அழகிய நெற்றியும், கூந்தலையும் உடைய அவள், அஞ்சி விலகும் மான் பிணையை போல என்னைப் பார்த்து 'இங்கே வரும் தாங்கள் யாரோ?' எனக் கேட்டாள். இதை நினைத்து நாம் எண்ணி நகையாடலாம் வா !

காலங்கள் பல நூறு கடந்தும் காதலும், கூடலும் அப்படியேதான் இருக்கிறது.


இது ஒரு மீள்பதிவு !