Wednesday, February 2, 2011

கதையெனும் நதியில்..

ஒட்டகம்:



காலையில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றால், நேரம் கிடைக்கும்பொழுது மதிய சாப்பாடு, இரவு தாமதமானால் டேபிளுக்கு வரும் ரெண்டு தோசை, ஒரு ஆம்லெட்டை தின்று கொண்டு ஒட்டகம் போல வேலை பார்க்கும் இடம் தான் சாப்ட்வேர் துறை. மேலோட்டமாக பார்த்தால், ஏ.சி, கூட்டி போக வண்டி, கை நிறைய சம்பளம் எனத் தோன்றினாலும், அந்த வேலையால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்களே அறிவர்.

இந்த வாரம் ஆனந்த விகடனில், இரா.முருகன் அவர்களின் ஒட்டகம் என்னும் கதை, இந்த துறையைப் பற்றிய கதைதான்.

அறம்:

ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ள கதை அறம். ஒருவன் அறம் தப்பி விட்டால், அதுவே அவனைக் கொன்று விடும் எனும் இளங்கோவின் (நான் இல்லீங்க.. சிலப்பதிகார இளங்கோவடிகள்) வார்த்தைகளைச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

அந்தக் காலத்தில் பாடலைக் கேட்டு கோவில் தாழ் தானாகத் திறந்தது, பாம்பு மீண்டும் வந்து விஷத்தை திரும்ப உறிஞ்சியது போல, ஒரு கவிதையின் மூலம் அறம் திரும்ப பெறப்படுகிறது போலான கதை.

பிறந்த நாள்:

ஒரு வயதுக்கு மேல் நமது பிறந்த நாள் விழாக்கள் நமது மனதில் நிற்கின்றன. நினைவுகள் அறியா சிறு வயதில் கொண்டாடப்படும் பிறந்த நாளை அந்தக் குழந்தைகள் மறந்து விடும். அவர்களுக்கு அது கூட்டம் கூடும் இன்னும் ஒரு நாளே. அதைப் பற்றிய சுகா அவர்களின் நினைவுகள் தான், சொல்வனத்தில் வெளியாகியுள்ள பிறந்த நாள்.

பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாத இன்னொரு குழந்தையின் மேல் நினைவுகளை அடுக்கி விட்டு நிறைவடைகிறது.

மூங்கில் மூச்சு:

இதுவும் ஆனந்த விகடனில் வெளிவரும், சுகா அவர்களின் தொடர். இந்த வாரம் சென்னை மாநகரில் வீடு தேடுவதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சென்னையில் வீடுகள் தேடி நானும், எனது நண்பர்களும் அலைந்துள்ளோம். வீட்டுக் காரர்கள் கேட்கும் கேள்விகளை எழுதினால் ஒரு நீண்ட பதிவாக வந்து விடும். சினிமாக்காரர்கள் என்றால் வீடு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்களைப் பற்றி சொல்லிச் செல்கிறார் சுகா.

முதலில் அட்வர்டைசிங் கம்பனியில் வேலை செய்வதாக கூறி வாடகைக்கு சென்றுள்ளார். ஒரு நாள் நடிகர் ஆர்யா வீட்டுக்கு வந்ததை வீட்டுக்காரரின் பெண் பார்த்து விடுகிறாள். அப்பாவிடம் அந்தப் பெண் சொல்லி விட, வீட்டுக்காரர் இவரை வரச் சொல்கிறார். இவர் வீட்டுக்காரரிடம் என்ன சமாதானம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டு போகிறார். 'சினிமாவில் வேலை செய்வதை மறைத்து ஏன் பொய் சொன்னீர்கள்' என்று ஒரு தலைமை ஆசிரியர் போலக் கேட்டுவிட்டு, இன்னும் ஒரு கேள்வி கேட்கிறார்..."நீங்கள் சினேகாவைப் பார்த்து இருக்கீர்களா".

படம்: இணையத்தில் இருந்து.
நன்றி: சொல்வனம் மற்றும் ஆனந்த விகடன்.

Monday, January 31, 2011

சிறு துளிகள் (31/01/2011)

விழுதுகள் மையத்தில்...

இந்த வாரம் ஒரு மாலை வேளையில், எங்கள் விழுதுகள் அமைப்பினால் நடக்கும் ஒரு மையத்துக்குச் சென்றிருந்தேன். வாரமொரு முறை நடக்கும் பிரார்த்தனையில், தெரிந்தவர்கள் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்காக வேண்டுவது வழக்கம். இந்த வாரம், ஒவ்வொரு மாணாவராகத் தங்கள் பாட்டி, தாத்தா, அம்மா என உடல் நிலை சரியில்லாதவர்கள் பெயர்களைச் சொன்னார்கள்.

அதில் ஒரு மாணவன், "சார்.. என்னோட அக்காவுக்கு கையில காயம் சார்.." என்றான்.
"ஏன்.. என்னாச்சு".. என்றோம்.
"கையில் அரிவாள் பட்டிருசுங்க சார்.." என்றான்.
"அருவாளா? கையில எப்படி பட்டுச்சு"
கொஞ்சம் தயங்கி "சார்.. வீட்ல அம்மாவுக்கும். அப்பாவுக்கும் சண்டை சார். அப்பா, அருவாளா எடுத்துட்டு அம்மாவா அடிக்க வர, அக்கா நடுவுல பூந்து கையில காயம் ஆயிருச்சு சார்.." என்று எங்கள் கண்களையே பார்த்தான்.
வேறு ஒன்றும் பேச இயலாதவராய், "சரிப்பா.. உங்க அக்கா பேரச் சொல்லு" என்றோம்.

பெரிய குடும்பமோ (உதாரணதுக்கு நடிகர் விஜயகுமார் பேரன்), அல்லது இந்த மாதிரி ஒரு கிராமத்துக் குடும்பமோ பெற்றோர்களின் சண்டையில் மாட்டிக் கொண்டு துன்புறுவது குழந்தைகளே. பெற்றோர்கள் சண்டையால் வளரும் குழந்தைகள், என்ன விதமான மனத் துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்னும் ஒரு மாணவன், "பாப்பா" பாட்டில் பாரதி சொன்னது போல, உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னது போல சொன்னான்.
"சார்.. எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு சார்.. பேரு ஜிம்மி.. எழுதிக்குங்க சார்" என்றான்.


தமிழக மீனவர்கள்

ஏதோ தமிழக மீனவர்கள் பற்றி இப்பொழுதுதான் கரிசனம் வந்தது போல எல்லாத் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணமில்லை, வரும் தேர்தல் தான் மூல காரணம். கூட்டணி பிரித்துக் கொண்டு திரும்பவும் ஓட்டுக் கேட்டு வர வேண்டுமல்லவா, அது வரைக்கும் தாக்குதலை நிறுத்தி வைக்க சொல்லி இருந்தாலும் இருப்பார்கள். தன்னைக் கட்டு மரம் என்று கூறிக் கொள்ளும் தலைவர் டெல்லியில் கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். கொஞ்சம் கண் வைத்தால், கட்டு மரமே வாழ்க்கையாக கொண்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட மாட்டார்கள்.

விலைவாசி

கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சிறிதளவாவது தப்பித்துக் கொள்ளலாம். ஒரு துணிக்கடை அல்லது பலசரக்குக் கடை ஊழியரோ வாங்கும் சம்பளம் ஐந்தாயிரத்துக்கும் குறைவே. இதில் வீட்டு வாடகை, காய்கறிகள், மருத்துவச் செலவு என செலவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?.
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.. என்றுதான் பாடத் தோன்றுகிறது.


சில குறுஞ்செய்திகள்:

ஒரு காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் நேரம் இருந்தது. இப்போது, எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது, நேரம் தான் இல்லை.

**********

ஓர் ஏழை ஒரு மீனைப் பிடித்தான். ஆனால் அவனின் மனைவியால் அதைச் சமைக்க முடியவில்லை. ஏனெனில், விலை வாசியால் மின்சாரம், சமையல் வாயு, எண்ணெய் வீட்டில் இல்லை. எனவே, மீனை மீண்டும் ஏழை மீண்டும் நீரில் விட, திடீரென மீன் கத்தியது. "உயிர் காக்கும் திட்டங்கள் தந்த முதல்வருக்கு நன்றி." :)


**********

நம்பிக்கையின் உச்சம்:
ஒரு ஏரோனாடிக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களையும் ஒரு விமானத்தில் உட்கார வைத்தார்கள். விமானம் கிளம்பப் போகும் சமயம், "இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்கள் தயாரித்தது" எனச் சொல்ல அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடினார்கள். ஒருவர் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருக்க, அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "எங்கள் மாணவர்கள் தயாரித்தது என்றால், இது ஓடாது" என்றாரே பார்க்கலாம். :)


**********