ஒரு கடைத் தெருவுக்கு நாம் சென்றால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டுத் திரும்பி விடுவோம். ஆனால் அந்த கடைத் தெருவில்தான் எத்தனை விதமான மனிதர்கள். தி நகர், ரங்கநாதன் தெருவையே எடுத்துக் கொள்ளுங்கள். பூ விற்கும் பெண்கள், கைக்குட்டை சாக்ஸ் விற்பவர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொருள் விற்பவர்கள், ஐஸ் கிரீம் கடைகள், துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள், கடைக்கு வாங்க எனக் கூவிக் கொண்டிருப்பவர்கள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், பழச் சாறு கடைகள், பேக்கரிகள், அந்த கூட்டத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள், வேகமாகப் போகிறவர்கள், வீதி பெருக்குபவர்கள், திருடர்கள்... என எத்தனை விதமான மக்கள். இது போன்ற கடைத் தெருவில் வாழும் மக்களின் வாழ்வைச் சுற்றி எழுதியவர் திரு. ஆ.மாதவன் அவர்கள்.
கடந்த ஞாயிறு அன்று கோவையில், ஆ.மாதவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவுக்கு சென்றிருந்தேன். இது வரையிலும் மாதவன் அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நிறையப் புத்தகங்களிலும், குறிப்பாக திராவிட ஏடுகளில் நிறைய எழுதியிருக்கிறார் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். ஒருவேளை, அவரின் கதைகளை எங்காவது படித்திருந்தாலும் கூட அவரின் பெயர் என் நினைவில் இல்லை. இனிமேல் அவரின் பெயர் மறக்காது, அதற்கு இந்த விழாவே காரணம்.
ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் வெளிச்சத்தில் இருக்க, சிலரைப் பற்றி வெளியே தெரிவதில்லை. அவர்கள் எழுதியதும் வெளியே தெரிவதில்லை. அப்படி இருக்கும் கால கட்டத்தில், மூத்த எழுத்தாளர்களைப் பற்றி, நல்ல இலக்கியங்களைப் பற்றி விவாதித்து வெளிக் கொணர வேண்டியது அவசியம். இந்த விழாவை நடத்தி, ஆ.மாதவன் என்னும் 'கடைத்தெருவின் கலைஞனை' என் போன்றோருக்கு அறிமுகம் செய்வித்த 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட' நண்பர்களுக்கு என் நன்றிகள்.
திருப்பூர் மற்றும் கோவையை சேர்ந்த பதிவர்கள் வந்திருந்தார்கள். பதிவர்களை அன்பே சிவம் முரளி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். விழா முடிந்த பின்னர் முரளி மற்றும் திருப்பூர் பதிவர்கள் ஒன்றாகவே கிளம்பினோம். ஆ.மாதவன் அவர்களின் 'கிருஷ்ணப் பருந்து' நாவல் நான் வாங்குவதற்குள் தீர்ந்து விட்டது. பிறகு, அவரின் 'ஆ.மாதவன் கதைகள்' தொகுப்பையும், ஜெயமோகனின் 'கடைத்தெருவின் கலைஞனை' யும் வாங்கிக் கொண்டேன்.
விழாவில் ஜெயமோகன், நாஞ்சிலார், வேத சகாய குமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, மணிரத்தினம், எம்.ஏ. சுசீலா, கோவை ஞானி ஆகியோர் கலந்து கொண்டார்கள். புனத்தில் அவர்கள் மலையாளத்தில் பேசி, அதை ஜெமோ அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். அவர் பேசும்பொழுது, 'ஒருவன் எந்த மொழியில் கனவு காணுகிறானோ.. அதுதான் அவன் தாய் மொழி' என்றார்.
ஆ.மாதவன் அவர்கள் தனது ஏற்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். விழா முடிந்ததும், சுசீலா அம்மாவிடம் சென்று 'நான்தான் இளங்கோ.. எப்படி இருக்கீங்க?' என்றேன். 'நீங்கதான் இப்படிக்கு இளங்கோவா?' என்று நலம் விசாரித்து விட்டு விடை பெற்றார்கள். ஆ.மாதவன் அவர்களிடம், கையெழுத்துப் பெற்றுக்கொண்டு நாங்களும் திரும்பினோம். அடுத்த நாள் நாஞ்சில் நாடனுக்கு 'சாகித்ய அகாடாமி விருது' அறிவிக்கப்பட்டது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த இடைப் பட்ட நாட்களில், ஆ.மாதவன் சிறுகதை தொகுப்பிலிருந்து பாச்சி(சொல்வனத்தில் பாச்சி), கோமதி, தூக்கம் வரவில்லை, நாலு மணி போன்ற கதைகளைப் படித்தேன். அனைத்துக் கதைகளுமே தெருவில் இருப்பவர்களைப் பற்றிய கதை. அனைத்துக் கதைகளையும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்.
இப்படி ஒரு விழாவை நடத்திய இலக்கிய வட்ட நண்பர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
தொடர்பு பதிவுகள்:
ஜெயமோகன்: விஷ்ணுபுரம் விருது விழா 2010
எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...1.