Sunday, December 19, 2010

சலூன்


சுத்தற சேரும், மேல காத்தாடியும் இருந்த அந்த 'ராஜா' சலூனுக்குள் போகலாமா, வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே குழப்பம். சலூனுக்குள் போகவே பயமாக இருந்தது. வருவது வரட்டும்னு உள்ளே போயிட்டேன். உள்ளே போனால், ஒருவருக்கு முடி வெட்டிட்டு இருந்த கடைக்காரர் என்ன என்பது போலப் பார்த்தார். "கட்டிங் பண்ணனும்" என்றவுடன், "அங்க உட்காரு" என்றார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்கள் கிடந்தன. டேப்பில் ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

முன்னாடி, பின்னாடி எனப் பெரிய பெரிய கண்ணாடிகள சுவத்துல மாட்டி இருந்தன. காலி இடத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும், இன்னொரு பக்கம் ரஜினி காந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் பேப்பரில் வந்த சில நடிகைகளின் படத்தை ஒரு இடத்தில் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு இருபது நிமிசம் கழிச்சு, முடி வெட்டிட்டு இருந்தவர் கிளம்ப, என்னைப் பார்த்து "வாங்க.." என்று சேரைத் தட்டினார் கடைக்காரர்.

இது வரைக்கும் அந்த மாதிரி சேர்ல உக்காந்தது இல்ல, அதுனால ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏறி உட்கார்ந்ததும், கடைக்காரர் அழகா ஒரு பாட்டில்ல இருந்து தண்ணிய தலைக்கு அடிக்க ஆரம்பித்து, முடி வெட்ட ஆரம்பித்தார். தலை குனிஞ்சிருந்த எனக்கு அப்பா கூட நேத்து சண்டை போட்டது நினைவுக்கு வந்தது.

நேத்து அப்பா, "டேய்.. நாளைக்கு பள்ளிக்கோடம் முடிஞ்சு, முடி வெட்டிட்டு வந்திரு. கரடிக் குட்டி மாதிரி எத்தன முடி பாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து சந்தைக்கு போற ரோட்ல, காப்பிக் கடை முக்குல இருக்குற பழனிச்சாமி கிட்ட வெட்டு. அவன்தான் அஞ்சு ரூவா வாங்குவான். மத்தவங்க எல்லாரும் அதிக ரூவா வாங்குவாணுக" என்றார்.

"போப்பா.. எனக்கு அந்தக் கடைய பிடிக்கவே இல்ல" என்றேன். போன வாரம், மூர்த்தி ஒரு கடைக்கு அவனுக்கு முடி வெட்டும்போது கூட்டிட்டுப் போனான். பெரிய கண்ணாடி, காத்தாடி அப்படின்னு அழகா இருந்துச்சு. அடுத்த தடவை முடி வெட்டுனா, அங்கதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன் அன்னைக்கே. அந்த சலூன் பேரு 'ராஜா சலூன்'.

"முடி வெட்டுறதுல என்னடா.. பிடிக்கறது.. பிடிக்காதது. எதைச் சொன்னாலும் மூஞ்சிய ஒரு மாதிரி வெச்சுக்க" என்று ஒரு சத்தம் போட்டார்.

அடுத்த நாள் காலையில் மறக்காமல், பத்து ரூபாய் குடுத்தார். திரும்பவும் பழனிச்சாமி கடைக்கே போகச் சொல்ல, ஏதாவது சொன்னால் அடி விழுகும் என்று நினைத்து "சரிப்பா " என்றேன்.

கடைசிப் பீரியட் முடிந்து வெளியே வந்ததும், அந்தக் கடைக்கே போகணும்னு முடிவு பண்ணிட்டேன். போன தடவ வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமத்தான் போச்சு முடி வெட்டுறது. வழக்கமா, மணியன் வீட்டுக்கு வந்து முடி வெட்டிட்டு போயிருவாப்ல, நான் சின்னப் பையன்ல இருந்து அவருகிட்டதான் வெட்டிட்டு இருக்கேன். வீட்டுக்கு வெளியே இருக்குற வேப்ப மரத்தடியில ரெண்டு முக்காலிகளப் போட்டு உட்கார்ந்து முடி வெட்டி விட்டுட்டுப் போயிடுவார். அதுவும் குனிய வெச்சு, பின்னாடி கழுத்துக்கு கீழே கத்தி படும்போது ஒரு மாதிரியா குறுகுறுப்பா இருக்கும். "ஆடாத தம்பி" என்று சொல்லிக்கொண்டே தலையை கெட்டியாப் பிடிச்சுக்குவார்.

பள்ளிக்கோடம் போனா பசங்க எல்லாம் முடி வெட்டுனத பார்த்து கிண்டல் அடிப்பாங்க. ஆனா, ஒண்ணு ரெண்டு வாரத்துல முடி வளர்ந்து 'கிராப்' சரியாப் போயிடும். இந்த கிண்டலுக்கு வேண்டியே அடுத்த தடவ மணியன் கிட்ட முடி வெட்டக் கூடாது அப்படின்னு நெனப்பேன், ஆனா அப்பா விட மாட்டார். ஏதோ ஒரு அதிசயம் போல, இந்த தடவ ஒரு மாசத்துக்கும் மேல ஊருக்குப் போன மணியன் திரும்பவே இல்ல. அப்பாவே வளர்ந்த முடியப் பார்த்துட்டு, டவுன்ல வெட்டிட்டு வரச் சொல்லிட்டார்.

எந்தக் கடைக்கு போகலாம்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு, 'ராஜா' சலூன்ல பணம் அதிகம் வாங்கிட்டா என்ன பண்ணுறது. அப்பா திட்டுவாரேன்னு பயம் வேற. ஆனா, இன்னைக்கு மட்டும் அந்த முக்கு கடைக்கு போகவே கூடாது. மூர்த்தி கிட்டயாவது எவ்ளோ பணம் ஆகும்னு கேட்டிருக்கலாம், அவன் கிட்டயும் கேட்கல. அவன் இன்னைக்கு லீவு. பத்து ரூபாதான் இருக்குதுல்ல, அதுக்கு மேல கேட்க மாட்டாங்க அப்படின்னு எனக்கு நானே நெனச்சுட்டு, 'ராஜா' கடைக்குள்ளே வந்தாச்சு.

'ராஜா' கடைக்காரர், எனக்கு முடி வெட்டிட்டு இருந்தார். மேல போர்த்துன துண்டு, சுத்திலும் கண்ணாடி, டேப் பாட்டு அப்படின்னு நல்லாத்தான் இருந்தாலும், எவ்ளோ பணம் கேப்பாங்களோ அப்படின்னு பயம்தான். பத்து ரூபாய்க்கு உள்ளே கேட்டா பரவா இல்ல, பத்து ரூபாய்க்கு மேல கேட்டா என்ன பண்றது. வெட்டி முடிச்சுட்டு, இன்னொரு துண்டால முடிய தட்டி விட்டார் கடைக்காரர். "எந்திரி தம்பி.. இந்தா சீப்பு" என்று ஒரு சீப்பை கையில் கொடுத்து சீவச் சொன்னார். சீவி முடித்ததும், மேலே இருந்த முடிகளை தட்டி விட்டேன். அப்பவும் சட்டையில் இருந்து ஒரு சில முடிகள் போகவே இல்ல.

கொஞ்சம் பயமாகவே "அண்ணா.. எவ்ளோங்க.. " என்றேன். "ஏழு ரூவா தம்பி" என்றார். "அப்பாடா" என மனசுக்குள் நினைச்சிட்டு, மீதி சில்லறைய வாங்கிக் கொண்டு "நான் வர்றேனுங்க.." என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். பஸ்ல வரும்போது அப்பா கிட்ட என்ன சொல்லுறதுன்னு பயம் வேற.

வீட்டுக்கு வந்ததும் "முடி அப்படியே இருக்கு.. இன்னும் ஒண்ட வெட்டச் சொல்லி இருக்கலாம்ல... எங்கடா முடி வெட்டுன.. " என்று கேட்டார் அப்பா.
"ராஜா சலூன்ல" என்றேன்.
"அது என்ன பழனிசாமி கடையா? "
"இல்லப்பா.. இது வேற கடை"
"நெனச்சேன்.. நீ அங்க போக மாட்டேன்னு.. இவன் எவ்ளோ வாங்குனான்.."
"ஏழு ரூவாப்பா.. "
"ம்ம்... பத்து ரூபாயையும் குடுக்காம வந்தியே. அதுவரைக்கும் நல்லது"
"ஏங்க.. அவனப் போய்த் திட்டிட்டு.. நான் வெந்தண்ணி காய வைக்கிறேன்..." என்று துணைக்கு வந்தார் அம்மா.

அதோடு பிரச்னை முடிந்தது. அடுத்த தடவை முடி வெட்டிட்டு வரும்போது எவ்ளோ ஆச்சு என்று அப்பா கேட்கவே இல்லை. பல வருடங்கள் கழித்து வெளிநாட்டில் ஆறு மாதம் தங்க நேர்ந்த போது முடி வெட்ட குடுத்த காசு, இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ரூபாய் என்பது அப்பாவுக்கு இன்னும் தெரியாது.

படம்: http://www.lonelyplanetimages.com தளத்தில் இருந்து. நன்றி.

Friday, December 17, 2010

தி சர்க்கஸ் (The Circus)

இது ஒரு மீள் பதிவு !

இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?.


நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள்.



சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல.


படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்கே உலகம் மயங்கி இருக்கும். என்னமாய் நடித்து இருக்கிறார். ஒரு சர்க்கஸ் ஆளை போலவே படத்தில் வருகிறார். அனைத்து காட்சிகளிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. அதுவும் குரங்கு மூக்கை கடிக்க, அதன் வால் வாயில் நுழைய நடிக்கும் பொழுது அந்த மகா நடிகனின் நடிப்பு நம்முள் ஆச்சயர்யத்தை உருவாக்குகிறது.


எதிர் பாராமல் சர்க்கஸ் கம்பனியில் வேலை கிடைத்து, அங்கே ஒரு பெண்ணை பார்த்து காதல் கொள்ளுகிறார். அதற்குள் அவள் இன்னொருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். புதிதாக வந்தவன் கயிற்றில் மேலே நடக்கும் பொழுது, எல்லாரும் பயந்திருக்க சாப்ளின் மட்டும் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறார், ஏன் எனில் அவள் அவனைத்தான் காதலிக்கிறாள். இறுதியில் அவனும் சர்க்கஸை விட்டு வெளியேற, சாப்ளினும் வேறு காரணங்களுக்காக வெளியேற்ற படுகிறார்.


சாப்ளினை தேடி வரும் நாயகி, உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழ, அவளை தேற்றி அவளின் காதலனிடம் சேர்த்து, கல்யாணம் செய்து வைக்கிறார். சர்க்கஸ் கம்பனி கிளம்ப தயாராக இருக்கும் பொழுது, புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார் சாப்ளின்.


சர்க்கஸ் கம்பனியின் எல்லா வண்டிகளும் கெளம்பி போன பின்னர், தனி ஒரு ஆளாய் அங்க நிற்கிறார் சார்லி. புழுதி பறக்க, சூரியன் மறைய, கூடாரம் அடிக்க போட்ட ஒரு வட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரம் அமர்கிறார். மெதுவாக திரும்பி பார்த்து விட்டு, தனது வழக்கமான நடையில் அந்த வட்டத்தை விட்டு வெளியேறுகிறார் சாப்ளின்.

ஒரு வட்டத்துக்குள் தங்கி இருக்கும் நாம் எப்பொழுது அதை விட்டு விடுதலை பெறுவோம் என்பது போல அவரின் நடிப்பு இருக்கிறது. சிரிப்பதற்கு மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது, சக உயிரின் மேல் எந்த அளவுக்கு நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை போதிக்கும் படம்.