Wednesday, December 1, 2010

வெதச்சவனும் வளர்த்தவனும்..















நடு மக,
புருஷன் பணம் வேணும்னு
கேக்குறான்னு தேம்பிக்கிட்டு இருக்க
கட்டி இருந்த நாலு வெள்ளாட்டுல
ஒன்னப் புடிச்சு
சந்தையில விக்கப் போனா
தெக்க வூட்டு ஆத்தா...

ஆட்ட வித்துப் போட்டு
பேரன் ஆட்டுக் கறி வேணும்னு
போன வாரம் கேட்டது
நெனவுக்கு வர
வாங்கலாம்னு எட்டி வெக்கையில
புள்ளைக்கு பணம் பத்தாமப் போனா
என்ன பண்றது அப்படின்னுட்டு...

வெதச்சவனும் வளர்த்தவனும்
என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு
பொலம்பிட்டு வெறுங்கையோடு
நடந்து போகிறாள் சந்தையிலிருந்து..



****************
படம்: இணையத்திலிருந்து நன்றி.
****************


Monday, November 29, 2010

அமிழ்தினும் அமிழ்து













ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும்
கொஞ்சம் பொட்டுக் கடலையும்
கொண்டு வந்து
தின்னத் தந்துவிட்டு
'என்கிட்டே வேறென்ன இருக்கு'
என்று தள்ளாமையில்
புலம்பிக் கொண்டிருக்கும்
பாட்டிக் கிழவியிடம்,
இது
அமிழ்தினும் அமிழ்து
என்பதைச் சொல்ல
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு: இப்பதிவில் இருக்கும் படம், பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி.

**************