Monday, November 15, 2010

சொல்லிக்கொடுத்த பாரதி..


தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன.

ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி.

சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி.

இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும்.

"தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் மிக வாடித் துன்புற்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போல்
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. "

"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" - ஒரு சிறு பொறி கூட ஒரு பெரும் காட்டை அழித்து விடும் என்று அக்னிக் குஞ்சாய் முழங்குகிறார்.

"தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடுவோம்" - என்னும் வரிகளில் அந்த மா மனிதனின் உள்ளம் தெரிகிறது.

இன்னும் நிறைய இருக்கிறது, பாரதியைப் பற்றி எழுத நினைத்தால் எவ்வளவோ வந்து விழுகின்றன.. இன்னும் ஒரு நாள் மற்றொரு பதிவில்...

என்னையும் தமிழை நேசிக்க வைத்த மகா கவிக்கு என் நன்றிகள்.

***************
ஒரே பாரதி புலம்பல் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நானும் ஒரு சில வரிகள் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு பாரதியைப் போன்றவர்களும், எனக்கு தமிழ் சொல்லித் தந்த ஆசிரியர்களுமே காரணம். இந்தப் பதிவு எனது நூறாவது பதிவு. இந்நேரத்தில் அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக என் நன்றிகளையும், இந்த எழுத்துக்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கூடவே பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கு - என் வணக்கங்களும் நன்றிகளும்.

படம் தந்து உதவிய கூகிளாண்டவருக்கு நன்றி.


Thursday, November 11, 2010

சிறு துளிகள் (11/11/2010)

நேற்று காலை சன் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது புதிது, புதிதாக வரும் சிறப்புத் தினங்கள் பற்றி. அதில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு கவிதை சொன்னார்;

"தினங்களை விட்டு விட்டு
எப்போது
குழந்தைகளைக்
கொண்டாடப் போகிறீர்கள்" . (குழந்தைகள் தினம் வரப் போகிறது இன்னும் இரண்டு நாட்களில்)

சொல்லப் போனால் குழந்தைகளை கவனிக்க முழுவதும் மறந்து விட்டோம். பள்ளி, டியுசன், டிவி, வீடியோ கேம்ஸ் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறை. கேட்டதெல்லாம் உடனே கிடைக்கிறது. ஒரு பொருளைப் பெற காத்துக் கிடப்பது இல்லை. எல்லாம் உடனே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

இதற்கு நேர் எதிர் ஏழைக் குழந்தைகள். எதுவுமே கிடைக்காமல், (உணவும்தான்) சிக்னல்களிலும், பேருந்து நிலையங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கிறது பிஞ்சு கைகள்.

ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?.

கொஞ்சம் குழந்தைகளைக் கவனியுங்கள்....

**************************************

கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. உலகம் தெரியாத குழந்தைகளை தங்கள் நோக்கத்துக்காக கடத்துவது தவிர்க்க முடியாத குற்றங்கள். இன்னும் குழந்தைகள் கொடுமைச் சட்டங்கள், தண்டனைகள் அதிகமாக வேண்டும்.

குழந்தைகள் கூடி விளையாடுவது இந்தக் காலத்தில் குறைந்து வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகைப் புரிந்து கொள்ள முடியாத சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, பள்ளிகளும், பெற்றோர்களும் இனியாவது விழிப்புணர்வு கொண்டு, கொஞ்சம் உலகைப் பற்றி விவரிக்கலாம்.

இலக்கியம், தினமும் படிப்பு என்று கூட வேண்டாம், தினச் செய்திகள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு எந்திரன் படத்தின் வெளியீட்டு நாள் தெரிகிறது. கொஞ்சம் வாசிப்பை அவர்களுக்கு பழக்கப்படுத்தலாம்.

சிறுவர் கொடுமைகள் என்றால் அது எங்கேயும் இருக்கிறது.

- ஒரு குழந்தையையும் இன்னொரு குழந்தையையும் ஒப்பீடு செய்வது.
- நிறம், உயரம் போன்றவற்றை இழிவு செய்வது
- பள்ளியிலும் வெளியிலும் உள்ள பாலியல் தொந்தரவுகள்
- முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது
- பெற்றோர்களின் பிரச்சினைகள் (விவாகரத்து, சண்டை... )

இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது. இந்தக் கொடுமைகள் குறைய நாம் என்ன செய்யப் போகிறோம்? .

****************************************

கோவை என்கவுண்டருக்குப் பிறகு, குழந்தைகளைக் கடத்தும் மற்றவர்கள் பயந்திருப்பார்கள். இனி குழந்தை கடத்தல் நடக்காதிருக்க வேண்டும். ஒரு குற்றவாளி இறக்கும் போது அவனுடன் சேர்ந்து ரகசியங்களும் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை அவன்தான் முழுக் குற்றவாளி என்றால் இந்த என்கவுண்டர் நியாயமானதே.

"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.. "

***************************************

குழந்தைகள் தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களும் குழந்தைகளைக் கொண்டாடுவோம்.