Saturday, October 9, 2010

ஓர் இலையின் பயோடேட்டா


ஓர் இலையின் பயோடேட்டா இது.

பெயர் : இலை

தாய் - தகப்பன் : மரம்

நிறம் : பச்சை

வசிப்பிடம் : எல்லா இடங்களிலும்

தொழில் : மனிதன் சுவாசிக்க பிராண வாயு உற்பத்தி

தொழில் ஓய்வு : மரத்திலிருந்து உதிரும் வரை

பிடித்தவர்கள் : மரம் வளர்ப்பவர்கள்

பிடிக்காதவர்கள் : மரம் வெட்டும் முதலாளிகள்

சிறப்பு இயல்பு 1 : நிழல் தருவது

சிறப்பு இயல்பு 2 : உதிர்ந்த பின்னும் உரமாவது

[குறிப்பு: மேலே உள்ள புகைப்படம் என் கைப்பேசியில் எடுத்தது.]

Wednesday, October 6, 2010

துக்கம் மறையும் இரவு


இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று ஒரு வழக்கு உண்டு. ஆயிரம் கண்கள் இருக்கிறதோ இல்லையோ, இரவு என்பது நாம் இளைப்பாற ஏற்பட்டது என்றுதான் எனக்குப் படுகிறது. காலை எழுந்தவுடன் விழித்த கண்கள் ஓய்வை நோக்கி காத்திருக்கும் நேரம் இரவு. உடல் மனம் என அனைத்தும் ஓய்வெடுத்து அடுத்த நாளுக்கு தயாராவதும் இரவில்தான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உப பாண்டவம் நாவலில் 'எல்லாருடைய துக்கத்தையும் மறக்கச் செய்யும் இரவு' என்று சொல்லியிருப்பார். ஆம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேதனைகள், பிரச்சனைகள், சங்கடங்கள் அவை எல்லாவற்றையும் மறந்து போகச் செய்யும் ஆற்றல் இரவுக்கு உண்டு.

நிசப்தமான இரவுகளில் அலைந்து கொண்டிருக்கும் நபர்கள், நெடுஞ்சாலையில் கனரக வண்டியை செலுத்திக் கொண்டிருப்பவர்கள், அயல் நாட்டு நேரத்தில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர்கள், உறவுகளை இழந்து வாடுபவர்கள் என எல்லோரையும் இரவு தன் வலிய கரங்களால் அணைத்துக் கொண்டிருக்கிறது.

எண்ணிப் பார்த்தால் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் ஒரு 'கால்' தான் வித்தியாசம். துக்கம் - தூக்கம்.

இரவில் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதாவது செய்து கொண்டிருந்தாலும் தூக்கம் நம் கண்களை இழுத்துக் கொண்டு போகிறது. இந்த வார்த்தைகளைக் கூட ஓர் இரவு நேரத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆறுதல் கூறும் நண்பன் போல தினமும் இருப்பது இந்த இரவு மட்டும் தான் அல்லவா ?.

இரவை நேசிப்போம். [தூங்கிக் கொண்டு :) ]