Monday, September 6, 2010

எஞ்சாத புன்னகை















எப்போதும் புன்னகைப்பாய்
என்னைப் பார்த்தால்..

ஓர் அதிகாலை
ஆரஞ்சு நிறப் பாதம் கொண்ட
பவழ மல்லிகளை நீ
பொறுக்கும் பொழுதுதான்
என் பிரியத்தை
உன்னிடம் சொல்ல நேர்ந்தது
கேட்டதும் உள்ளோடி மறைந்தாய்
உன் வீட்டினுள்.

அடுத்த மூன்று மாதத்தில்
உனக்கும் உன் முறை மாமனுக்கும்
கல்யாணம் சொர்க்கத்தில் நடப்பதாக
பெரியவர்கள் சொன்னபடி நடந்தது.

இப்பொழுதும் தெருவில்
பார்த்துக் கொள்கிறோம்
ஆனால் உன் புன்னகைதான் இல்லை..

உன்னிடத்தில் என் பிரியத்தைச்
சொல்லாமலிருந்தால்
அந்தப் புன்னகையாவது
எஞ்சியிருக்கக் கூடும்.

(புகைப்படம்: இணையத்தில் இருந்து.)

Monday, August 30, 2010

இன்று(30/08/2010) காணாமல் போனோர் தினம்...


புதிய தலைமுறை இதழுக்கு நன்றி, இப்படிப்பட்ட ஒரு தினத்தை அறிமுகம் செய்ததற்காக. காதலர் தினம், அன்னையர் தினம் போல் இதுவும் ஒரு தினமாக கண்டிப்பாக இருக்காது. ஏனெனில், அந்த தினங்கள் நம்மோடு வாழ்பவர்களுக்காக. ஆனால் இந்த தினமோ, உயிரோடு இருக்கிறார்களா இல்லையா எனத் தெரியாமல் அனுசரிக்கப்படுகிறது.

ஐ.நா. அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து இந்த தினத்தைக் கடை பிடிக்கிறது. அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் காணாமல் போன மக்கள் மிக அதிகம். அடக்கு முறைகளால் கைது செய்யப் பட்டு, குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், என்ன செய்தார்கள் என்ற நிலைமை தெரியாமல் "காணாமல் போனோர்" பட்டியலில் அடைத்து விடுகிறார்கள்.

பள்ளிச் சிறுவர்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள் எனத் தினமும் காணாமல் போவோர் ஏராளம். ஏதோ ஒன்றுக்கு பயந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சக குடும்பத்தினர் மீது நம்பிக்கை இல்லாமலோ, குடும்பத்தினரின் தொந்தரவுகளினாலோ அவர்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனதன் பின்னர் விளம்பரம் கொடுத்து நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா, இல்லை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

காணாமல் போனவர்கள் எங்காவது ஒரு அடைக்கல இல்லத்தில் தங்கியோ, பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டோ, தள்ளு வண்டிக் கடை, ஹோட்டல் போன்றவற்றில் வேலை செய்து கொண்டோ, ரயில்களில் பெருக்கி கொண்டோ, ஏன் நாட்டை விட்டுக் கூடப் போயிருக்கலாம். அவர்கள் அனைவரையும் நினைத்துப் பார்க்கும் நாளாக இது இருக்கட்டும்.