Monday, August 23, 2010

புத்தகம் - எனக்குப் பிடிக்கும்


இலக்கியத்தை படிப்பவர்கள் பொழுது போகாமல் இருப்பவர்கள்தான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.

சின்ன வயதில் காமிக்ஸ், சிறுவர் மலர், அம்புலி மாமா என படித்து வளர்ந்த நான் கொஞ்ச நாட்கள் கழித்து, ராணி, தேவி, ராஜேஷ் குமார் க்ரைம் நாவல் என்று தொடர்ந்தது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பாலகுமாரன், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள் என்றாகி, இன்றும் இலக்கியங்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இதற்கு காரணம் என் அப்பாதான். பள்ளிக்கு செல்லாமலே படித்து, பக்திப் பாடல்கள், ஜோசியம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். சொல்லப் போனால் என் ப்ரோக்ரேஸ் கார்டு-ல் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவார். என் நண்பர்கள், உங்க அப்பா என்ன படித்து இருக்கிறார் என்று கேட்பார்கள் கையெழுத்தைப் பார்த்து. பள்ளிக் கூடமே போனதில்லை என்று சொன்னால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். எங்கள் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. புத்தகங்களைப் படிக்க கற்றுக் கொடுத்ததே அப்பாதான். வீடு பூராவும் ராணி, தேவி, குமுதம் என வார மலர்கள் நிறைந்து கிடக்கும். சாப்பிடும் பொழுது புத்தகம் படித்தால் கூட திட்டாத ஒரே வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும். எங்கள் ஊர் கிராமம் என்பதால், பக்கத்துக்கு ஊரான புளியம்பட்டி போகும்பொழுது அம்மாவும் அப்பாவும் புத்தகங்களை வாங்கி வருவார்கள். அதுவும் பழைய புத்தகம் என்றால், ஐம்பது காசு, ஒரு ரூபாயாக இருக்கும்.

இப்படியாக வளர்ந்த என் வாசிப்பு இப்போதும் தொடர்கிறது. என் நண்பர்கள் வட்டத்தில் நான் படிக்கும் புத்தகங்களைப் படிப்பவர் யாருமே இல்லை. ஒன்றுமே வேண்டாம், விகடனில் வரும் ஒரு வித்தியாசமான சிறுகதையைக் கூட படிக்க மாட்டார்கள். குற்றமும் தண்டனையும், புயலிலே ஒரு தோணி, மோக முள் என என்னைத் தவிர யாருமே திருப்பிப் பார்க்கவில்லை. சரி, அது கூட என் ரசனை என்று எடுத்துக் கொள்ளலாம்.

நிற்க. நண்பனின் திருமணத்துக்கு நேற்று ஈரோடு செல்ல வேண்டி இருந்தது. மற்ற நண்பர்கள் வந்து சேரத் தாமதம் ஆனதால், பேருந்து நிலையத்தில் இருந்த விஜயா பதிப்பகத்தின் கடைக்குச் சென்றேன். உப பாண்டவம், ஒரு புளியமரத்தின் கதை, தலைகீழ் விகிதங்கள் என ஆறு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தேன். புத்தகங்களை வாங்கி வரவும், நண்பர்கள் வரவும் சரியாக இருந்தது.

புத்தங்களைப் பார்த்ததும், ஒரு நண்பன் "என்னடா.. உனக்கு ரொம்ப நேரம் ப்ரீயா இருக்குதா.. இவ்ளோ புக்ஸ் வாங்கிருக்கே" என்றான்.

"அது இல்லடா.. ரொம்ப நாளா வாங்கனும்னு நெனச்சேன்.. இன்னக்கி டைம் கெடச்சுது.. வாங்கியாச்சு" என்றேன் நான்.

"இந்தப் புக்ஸ் எல்லாம் படிக்கிறதுனால என்ன ஆயிடப் போகுது. எல்லாமே கதையா இருக்கும். உண்மையாவா இருக்கப் போகுது. உனக்கு என்ன யூஸ் ? " என்றான்.

"எனக்குப் பிடித்திருக்கிறது.. அவ்ளோதான்" என்றேன் நான். ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏற்படும் எண்ணங்களை அவனுக்கு எப்படி என்னால் புரிய வைக்க முடியும். பேச்சு திசை மாறி நீண்டது.

அவனிடம் சொன்ன பதிலான "எனக்குப் பிடித்திருக்கிறது" என்பதைத் தவிர, புத்தகங்களை விரும்ப எனக்கு வேறு பதில் ஏதுமில்லை அல்லது நினைவுக்கு வரவில்லை. உங்களிடம் வேறு பதில்கள் இருக்கிறதா?.

Wednesday, August 18, 2010

முரண்கள்

அரசு மதுபானக் கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி, அரசின் 'குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்' வாசகம்.
********

லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்றுதான் இருந்தேன். முட்டிக் கொண்டு வரும்போது, சிறுநீர் கழிக்க ரூ.1 க்கு பதில் ரூ.3 வாங்கும் அவனிடம் சட்டம் பேச நேரமில்லை.

********

இப்போதெல்லாம் மசாலாப்(கம்மர்சியல் ?) படங்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. ஒரு காலத்தில் இதையும் கை தட்டி ரசித்தோம் என்பதை மறந்து விடுகிறேன்.
********

சின்ன வயதில் அப்பா என்ன வாங்கி வந்தாலும் ருசித்தது. இப்போதோ, எதாவது வாங்கி வந்தால் 'நல்ல கடை கெடைக்கலியா?' என்பதே வார்த்தைகளாக வருகிறது.
********

ஆம்பளைப் பையன் பூவை ரசித்தால், ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இதுவே கையில் ஒரு ரோஜாவோடு இருந்தால் புன்னகைக்கிறார்கள். (சமயத்தில் அடியும் கிடைக்கக் கூடும்)
********

குளிர் காற்று நிறைந்த அங்காடிகளில் பில் போட்ட விலையைத் தருகிறோம். நடை பாதைக் கடைகளில் ரூ.10 உள்ள பொருளுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
********

சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஆனோம் என்கிறார்கள். இருந்தாலும் சம்பளம் போதவில்லை என்று கதறுகிறார்கள்.