Sunday, December 13, 2009

பாரதியும் ரஜினியும்

டிசம்பர் 11 அன்று மகா கவி பாரதியின் பிறந்த நாள். ஊரும் உலகமும் மறைந்த அந்த கவியை நினைத்து பார்க்க நேரமில்லாமல் இருந்தனர். அக்னி குஞ்சாய் வலம் வந்த பாரதியை நினைக்கவும் ஆள் இல்லை. ஒரு சில வலை தளங்களில் மட்டும் பாரதியை பற்றிய கட்டுரைகள் காணக் கிடைத்தன.

அதற்கு அடுத்த நாள்....

பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரை படங்கள் அனைத்து டிவி களிலும், ஊர் எங்கும் அன்ன தானங்கள், சிறுவர்களுக்கு சில பரிசளிப்புகள், அனைத்து நாளிதழ்களிலும் ஒரு பக்க வண்ண புகைப்படம், தலைப்பு செய்திகள், இடை விடாமல் அவர் புகழ் பாட எப்.எம். ரேடியோக்கள், பட்டாசு வெடிப்புகள்... இன்னும் நிறைய நடந்தது..

இதை எல்லாம் விட உச்ச பட்சம்.. அவருக்காக பால் குடம் எடுத்த ரசிக மக்களும், சிறப்பு பிரார்த்தனை நடத்திய மக்களும் தான்...

அவர் வேறு யாருமில்லை.. நமது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்..

ரஜினி கொண்டாட பட வேண்டியவர்தான்.. இல்லை என்று சொல்லவில்லை.. ஆனால் பாரதியின் பிறந்த நாள் அன்று ஊடகங்கள் எல்லாம் எங்கே சென்றன என்று தெரியவில்லை.. நம் மக்களும் பாரதியை நினைத்து என்ன ஆக போகிறது என்று நினைத்து இருக்கலாம்... காலையில் இருந்து பொழுது சாயும் நேரம் வரையும் ரஜினியை புகழந்து தள்ளிய இவர்களுக்கு, பாரதியை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடவா கிடைக்கவில்லை.. ? அது சரி, ரஜினியை பற்றி நிகழ்ச்சி போட்டால் வருமானம் வரும், இந்த பாரதியை போட்டால் விளம்பரம் கூட கிடைக்காது.. சிட்டுக் குருவிக்கு போட அரிசி கூட வாங்க முடியாது என எல்லாரும் நினத்திருக்கலாம்... !!


இன்னும் சில காலங்களில், புதிய சூப்பர் ஸ்டார்கள் வரலாம். போகலாம். ஆனால் பாரதி போன்றவர்களை காலம் வெல்ல முடியாது

அவரே சொல்வது போல;

தேடி சோறு நிதந் தின்று சில சின்ன சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்புற்று பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கு இரையென பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல் நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?



காலனை எட்டி உதைக்க கூப்பிட்ட கவியே, உனக்கு மரணமில்லை....

Friday, December 4, 2009

மீண்டும் சில கொலைகள்

அன்புள்ள குழந்தைகளே,

எமது அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி வழங்குவதிலும், சில முறைகேடுகள் செய்யவுமே நேரம் இருந்தமையால் உங்களையும் உங்கள் பள்ளிகள் பற்றியும் நினைக்க நேரம் இல்லை.

கும்பகோணத்தில் உங்கள் நண்பர்கள் நிறைய பேரை இழந்தும், அரசும் அதிகாரிகளும் கண்களை கட்டி கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.

இப்பொழுதுதான் தடை போடுவதாக பேசி கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறையும் நடப்பது தானே.. என்று நாங்களும் எங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டோம்..

வேதாரண்யத்தில் ஏற்பட்டது விபத்து என்கிறார்கள், உங்களுக்கு தெரியும் இது கொலை என்று... கல்வி வியாபாரம் ஆகிவிட்ட நாட்டில் நீங்கள் பிறந்து தொலைத்ததுதான் காரணமோ ?

எப்படியோ போகட்டும், அடுத்த விபத்து நடக்கும் போதும் தடைகள் போடுவார்கள் நிச்சயமாக... ...

எனது கண்ணீர் அஞ்சலிகள் உங்களுக்கு...
பிஞ்சு உள்ளங்களே எங்களை மன்னியுங்கள்....