Sunday, January 25, 2009

அரச மரத்தடி நடசத்திரங்கள்

கிளைவிட்டுப் பரவிய
அரச மரத்தை சுற்றிலும்
வெள்ளை நட்சத்திரங்களாய்
பறவைகளின் எச்சங்கள்
பூத்து கிடந்ததொரு நாளில்
ஊர்ப் பஞ்சாயத்து கூடி
வெட்டுவதென
முடிவு செய்தனர்

மரத்தின் வேர்
சுற்றியுள்ள வீடுகளில்
ஊடுருவுகின்றதாம்

மீண்டும் தழைத்து விடுமென
அடிமரத்தை தோண்டிய
குழியில்
உச்சியில் கட்டப்பட்டிருந்த
ஏதோவொரு பறவையின்
கூடும் முட்டைகளோடு புதைபட்டது

இடம் மாறிய பறவைகள்
இன்னொரு மரத்தடியில்
எச்சமிட்டு
கொண்டிருக்க கூடும் !

Sunday, January 4, 2009

என் கடவுள்

சிறப்பு வழியா, பொது வழியா
என தடுமாறி
நீண்ட வரிசையில்
காத்திருந்து
ஒதுக்கப்பட்ட சில கணத்தில்
பார்த்தது அய்யரின் முதுகா ?
இல்லை கடவுள் சிலையா ?
கடைசி வரை விளங்கவில்லை

பள்ளத்தில் கூமாச்சி
கல்லெடுத்து
நட்ட வெச்சுருக்கலாம்
பூவும் படையலும்
நானே படைச்சு
முடிந்தால்
என் சாமிக்கு
முத்தம் கூட கொடுத்திருக்கலாம் !