Wednesday, December 25, 2013

விஷ்ணுபுரம் விருது விழா - 2013

நீரைத் தவிர வேறொன்றும் தெரியாது மீன்களுக்கு. நீர்தான் உலகம். அந்த நீர் சூழ்ந்த உலகம் இல்லை என்றால் மீன்களும் இல்லை. நீர் குறைந்த காலத்தில் கூட, சின்ன இடம் என்றாலும், ஒன்றன் மேல் ஒன்று நீந்திக் கொண்டு, முட்டிக் கொண்டு ஒரே இடத்தில வாழ்ந்து விடும். அவைகளுக்கு வேறு போக்கிடமும் இல்லை. சில சமயங்களில் தன்னை விட பெரிய மீன்கள் விழுங்கவும் வரும். அந்தப் பெரிய மீன்களிடம் போராட வேண்டும். தன் இனம் தான் என பெரிய மீன்கள் நினைப்பதில்லை. 'எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!'

மீன்கள் மட்டுமல்ல, இதோ நாங்களும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொன்ன கதை, தெளிவத்தை ஜோசப் அவர்களின் 'மீன்கள்'  சிறுகதை. இந்த வருட விஷ்ணுபுர விருது தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன், அவரின் சிறுகதைகள் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளியாகின. முன்னரே அவரைத் தெரியாதிருந்த போதிலும், சில கதைகளைப் படித்தவுடனே மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டார்.


***********
விழாவில் தெளிவத்தை அவர்கள், 'ஒப்பாரிக் கோச்சி' என்று ஓரிடத்தில் குறிப்பிட்டார். இந்தப் பெயரை எங்கேயோ கேட்டிருக்கிறோம் என்று நினைத்து, பழைய பதிவுகளைப் பார்த்ததில் இந்த தலைப்பில் ஒரு சிறுகதை படித்தது பற்றி ஒரு பதிவாக எழுதி இருந்தேன். அந்தக் கதை மு.சிவலிங்கம் அவர்கள் எழுதி, தீராநதி இதழில் வெளியாகி இருந்தது. அந்தப் பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்;
"'ஒப்பாரி கோச்சி' கதையில் இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுப்பிரமணி இந்தியாவுக்கு வருவதைப் பற்றிய கதை. செல்லம்மாக்கா என்னும் ஒருவர் கதையில் 'ஈந்தியா நம்ம ஊருதானே சாமி?' என கேட்கும்பொழுது, அவர்களை அகதிகள் என அடைத்து வைத்திருக்கும் நமது முகாம்கள் நினைவுக்கு வந்தன. சுப்பிரமணிக்கு இந்தியாவில் இருந்து கடிதம் எழுதும் நபர்கள் கூட 'இங்க மோசம் சுப்பிரமணி.. செத்தாலும் நீ அங்கேயே இரு' எனக் கடிதம் போடுகிறார்கள். ஆனாலும் சுப்பிரமணி குடும்பத்துடன் இந்தியா புறப்பட நேர்கிறது. அவர்கள் ஏறிய 'இந்திய கோச்' தான் ஓயாத அழுகையால் 'ஒப்பாரி கோச்சி' ஆகிவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையில் எச்சங்களாக இருக்கும் ஒரு சுப்பிரமணியின் கதை இது. இன்னும் தெரியாத சுப்பிரமணிகளின் கதைகள் எவ்வளவோ?."

பின்பொருமுறை தீராநதி இதழில், ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்று இருந்தது. அதைப் பற்றியும் அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.. என்று பதிவாக இட்டிருந்தேன். அதிலிருந்து சில வரிகள்;
"தமிழைப் பேசுவதன்றி வேறு தவறென்ன செய்தோம் என்று கேட்கிற அளவுக்குச் சம்பவங்கள் நடந்தன. இக்கதைகளைத்தான் 'காலம் ஆகி வந்த கதை' எண்டு எழுதினன். கதை முடிவிலும் 'ஊரும் நாடும் ஐயோ என்று குமுறுகின்ற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கின' எண்டும், 'இப்போது அப்பாவும் இல்லை. அம்மாளும் இல்லை. அரசமரம் இருக்குமா? இருக்கலாம். சில வேளை அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்.' எண்டும், 'அன்றிலிருந்து அண்ணாக்கள் சில பேரைப் போர்க்களத்தில் கண்டேன்' எண்டும், 'எங்கள் சிரிப்புகளைப் பறித்தவர் யார்' எண்டும், 'அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாணமாவது இருந்தது' எண்டும், 'நாடு காண் காலம் வரைக்கும் காடுகள் சுடுகின்ற காலம் ஆகி விட்டது' எண்டும், 'தமிழுக்காக அழுதால் அதிலை என்ன பிழையிருக்கு?' எண்டும் வார்த்தைகளைப் போட்டனம்."

இப்படி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்து எழுத்துக்கள் படிக்க கிடைத்தன. கிடைத்தது கொஞ்சம் என்றாலும், அவை ஏற்படுத்திய வடுக்கள் அதிகம். உண்மை எப்போதும் சுடும் என்பது கூட காரணமாக இருக்கலாம். இனிமேல் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இங்கே கிடைக்கலாம். அதற்கு முன்னோட்டமாக, தெளிவத்தை அவர்களின் சிறுகதைகள் 'மீன்கள்' என்ற புத்தகமும், அவரின் 'குடைநிழல்' என்ற குறுநாவலும் விழாவில் வெளியிடப்பட்டது. அரங்கத்தில் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள்.

இதுவரை விஷ்ணுபுரம் விருது, ஆ. மாதவன், பூமணி, தேவதேவன் மற்றும் இப்பொழுது தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பூமணி அவர்களைத் தவிர, மற்ற மூவரையும் முன்னர் நான் அறிந்ததில்லை. அந்த வகையில், மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

***********
அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க விழா தொடங்கியது.

விழாவில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஆற்றிய தலைமையுரையில் 'வழக்கமான விழாக்களைப் போலில்லாமல், ஏதோ விருது கொடுத்தோம் என்று இருந்து விடாமல் அந்தப் படைப்பாளியோடு இரண்டு நாட்கள் கலந்துரையாடி, அவரின் படைப்புக்களுக்கு பெருமை சேர்ப்பதே இந்த விழாவின் சிறப்பு' எனக் குறிப்பிட்டார்.

 
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவரின் கவிதையை, ஆவணப் பட இயக்குநர் ரவி சுப்ரமணியம் அவர்கள் பாடினார். அரங்கத்தைக் கட்டிப் போட்ட கணீர் குரல். இறந்து போன தன் தந்தை பலிச்சோறு கேட்பதாக இருக்கும் கவிதை. ஓரிடத்தில், கவிதை வரிகள் காதில் விழாமல், அந்தக் குரலின் பின்னாலே போய்க் கொண்டிருந்தேன். கடல் அலை நம் காலைத் தழுவிக்கொண்டு திரும்பும்போது, நம்மையும் உள்ளே இழுப்பது போல அந்தக் குரலின் பின்னாலே போக நேர்ந்தது.

இயக்குநர் பாலா அவர்கள் பேசும்பொழுது, நந்தா படம் தவிர தனது மற்றைய படங்கள், எழுத்தாளர்களின் ஆக்கங்களில் இருந்தே பிறந்தது என்று பேசினார். 'சினிமா ஒன்றும் தீண்டத்தகாத துறை அல்ல. எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வர வேண்டும்' என்ற தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள், தெளிவத்தை அவர்களின் கதைகள் பற்றி உரையாற்றினார். ஈழத்தில் இருக்கும் அரசியல் பற்றியும், அங்கே இருக்கும் சூழல் பற்றியும் எடுத்துரைத்து, அங்கேயும் தமிழ் மக்களிடம் 'இவன் தோட்டக் காட்டைச் சேர்ந்தவன்' என்ற பிரிவினை இருப்பதாகவும், நாம் எங்கே போனாலும் இப்படித்தான் இருப்போமா என்றும் பேசினார்.

சுரேஷ் அவர்கள், தெளிவத்தை அவர்களின் கதைகள் பற்றிப் பேசினார். அதன் பின்னர், போன முறை இந்தியா வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் அணியில் இருக்கும் வீராசாமி பெருமாள் என்பவரைப் பற்றி அறிய நேர்ந்ததாகவும், நமது தமிழ் ஊடகங்கள் அவரைப் பற்றி பேட்டி கண்டு வெளியிடும் என்று தான் நினைத்திருக்க, சச்சின் இறுதி ஆட்டப் புயலில் இது எல்லாம் முக்கியம் இல்லாதவையாக மாறிவிட்டன என்று குறிப்பிட்டார். 'நமது ஊரிலேயே, கடந்த பத்து இருபது வருடங்களில் யாருக்கும் வீராசாமி பெருமாள் என்ற பெயர் இல்லாதிருக்க, எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் இந்தப் பெயர் கொண்டவர் இருக்க, அவரைப் பற்றி, அவரின் மூதாதையர் பற்றி நாம் அறிந்து கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

ஜெயமோகன் அவர்கள் பேசும்பொழுது, 'கொலைச் சோறு என்ற கதையில் ஒருவன், தன் தந்தையைக் கொன்ற ஒரு யானையை பழிவாங்க இருந்ததாகவும், ஆனால் பத்து நாள் அந்த யானையுடன் பழகியதில் அந்த எண்ணம் மறந்து, அந்த யானைக்கே பாகனாக மாறிவிட்டான். அதுபோல எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த படைப்பாளிகளைக்  கண்டடைவதே விருதின் நோக்கம்.' என்று குறிப்பிட்டவர், 'எங்கேயோ இருக்கும், ஒரு சிறு குழுவினர் கூட தனக்கான வரலாற்றைக் கண்டு எழுதுகின்றனர். அவர்களின் பரம்பரைகள் எங்கிருந்தன, தன் மூதாதையர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரிக்கின்றனர். ஆனால், நாம் நமது வரலாற்றைத் தேடித் போகவே இல்லை.' என்று கூறினார். மேலும்  'இலட்சக் கணக்கில் கடலுக்குள் செல்லும் ஆமைக் குஞ்சுகள், மேலே பறக்கும் பறவைகளிடம் தப்பி, உள்ளே கடலுக்குள் தன்னை விழுங்கக் காத்திருக்கும் மீன்களிடமும் தப்பி, இறுதியில் சில குஞ்சுகளே தப்பிப் பிழைக்கும். அதுபோல எங்கு எங்கோ சிதறி, நிறைய இன்னல்களுக்கு ஆட்பட்டு, உலகம் முழுதும் நம் மக்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.'  என்று பேசினார்.

தெளிவத்தை ஜோசப் அவர்கள் பேசும்பொழுது, 'எங்கேயோ இருக்கும் என்னைக் கண்டடைந்து விருது கொடுத்ததற்கு நன்றி. தோட்டக் காட்டான், கள்ளத் தோணி என்றெல்லாம் எங்களைப் பேசிய மக்களிடம் 'மலையக மக்கள்' என்ற சொல்லை நாங்கள் பெற இத்தனை காலம் ஆகி இருக்கிறது. இன்னும் போராட வேண்டும்.' என்று குறிப்பிட்டவர், பாலாவின் நான் கடவுள் படம் பற்றியும், இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் படிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். 'இலங்கையில் இருக்கும் நான், இங்கே இருக்கும் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்திருக்க, இங்கேயோ எங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கின்றனர். இதற்கு எங்களின் புத்தகம் இங்கே கிடைக்க விடாமல் செய்யும் அரசியல் பற்றி என்ன சொல்ல?. இனிமேல் நீங்கள் எங்களைப் படிக்க வேண்டும்.' என்றும் கூறினார்.

செல்வேந்திரன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

***********
விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களைச் சந்தித்துப் பேச முடிந்தது.


6 comments:

  1. வணக்கம்

    வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  2. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களைப்பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி இளங்கோ. கோவை வந்தது முதல் நான் பார்க்க நினைத்த நபர் நீங்கள். ஏனோ தள்ளிப்போய்க்கொண்டே இருந்து அன்றுதான் வாய்த்தது. இனி எப்போதும் தொடர்பில் இருக்கலாம்.

    ReplyDelete
  4. @கரந்தை ஜெயக்குமார்
    நன்றிங்க

    ReplyDelete
  5. @எம்.ஏ.சுசீலா
    மிக்க நன்றிகள், நிச்சயம் தொடர்பில் இருப்போம்.

    ReplyDelete