Monday, May 30, 2011

ஜோசியம்


"எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா
நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க"
எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர். அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும்.

சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம். கணீரென்ற குரல், வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது. கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார். நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான். பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும். மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார். அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள். ஒரு சிலர், பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.

எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள். உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி, அவரை வர சொல்லுவார்கள். நானும் போவேன்.

"அப்பா, ஜோசியம் பார்க்கனும்னாங்க... உங்கள ஊட்டுக்கு வரசொன்னாங்க... "

"சரி.. சரி.. வர்றேன் போ.. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொல்லு... " என்பார்.

கொஞ்ச நேரத்தில், கையில் ஒரு காக்கி பையுடன் வந்து சேர்வார். கெட்டியான பை, உள்ளே காகிதங்கள், பென்சில், பேனா, பஞ்சாங்கம் என்று திணித்து வைத்திருப்பார். அவர் வந்தவுடன் பாய் போடப்பட்டு, அவரும் உக்கார, அவரை சுற்றி எல்லாரும் உட்காருவோம். பார்க்க வேண்டிய ஜாதகத்தை கொடுத்தவுடன் தனியே ஒரு பேப்பரில், கட்டம் போட்டு, கூட்டல் கழித்தல் என சில நிமிடங்கள் கரையும்.



அதற்குள் காப்பி கொண்டுவந்து வைத்தால், குடித்து கொண்டே மெல்ல கனைப்பார். அப்படியே பாட ஆரம்பிப்பார். சில சமயங்களில் அவருடைய பாடல்கள் புரியும், சிலது புரியாது. ஆனால் பாட்டை முடித்து விட்டு, விளக்கமாக ஜோசியம் சொல்லுவார்.

தொழில் எப்படி நடக்கும், கல்யாணம் நடக்குமா, பொண்ணு எந்த திசையில் இருந்து வரும் என்று அவரிடம் வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லுவார். கேள்விகள் தீர்ந்த பின், ஒரு கனத்த அமைதி நிலவும். பஞ்சாங்கம், பேனா என எல்லாவற்றையும் எடுத்து அவருடைய பையில் போட்டுகொள்வார். ஒரு தட்டில் வெத்தலை பாக்குடன் பணம் வைத்தால், வெத்தலையோடு சேர்ந்து பணத்தை எடுத்து மடியில் கட்டிக் கொள்வார்.

எங்கப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்பதால், ஜோசியம் சொல்லிவிட்டு "என்ன.. நான் சொல்லுறது சரிதானே.. " என்று அப்பாவை பார்ப்பார். அப்பாவும், சிரித்துகொண்டே "நீங்க சொன்னா.. சரிதான்" என்பார். அப்பாவுக்கு ஜோசியம் தெரியும் என்றாலும் அவர் அதை தொழிலாக செய்யவில்லை. அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்ல நேரம் பார்த்துக் கொடுப்பது, நல்ல நாள் குறித்து கொடுப்பார். ஒருசிலர், ஜாதகத்தை கொண்டு வந்து அப்பாவிடம் பொருத்தம் பார்க்க சொல்லுவார்கள். மணி கணக்கில் அவர்களுடன் உட்கார்ந்து, ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டு கடைசியில், "எதுக்கும்.. இன்னொரு ஜோசியரை பார்த்து கேட்டுக்கங்க.." என்பார். வந்தவர்களும் சரி என்பார்கள்.

எனவே, எங்கள் வீட்டில் எப்பொழுதும் பஞ்சாங்கம் இருக்கும். அதுவும் இருபது, முப்பது வருடத்திய பழைய பஞ்சங்கங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அட்டாரியில் இருக்கும்.

சில சமயங்களில் ஜோசியரை கூட்டி செல்பவர்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்காது. இல்லை, அவருக்கு வேண்டியது பழைய பஞ்சாங்கமாக இருக்கும். உடனே, ஒரு காகிதத்தில் வருடத்தின் பெயரை குறிப்பிட்டு எங்கள் வீட்டுக்கு ஆளை அனுப்புவார். எங்கள் வீட்டு அட்டாரியில் இருந்து அந்த வருடத்தியதை தேடி எடுத்து குடுப்போம்.

ஒரு நாள் வீட்டுக்கு வெளியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது, ஜோசியரை வண்டியில் உட்கார வைத்து கூட்டிச் சென்றார்கள்.

"ம்ம்.. இன்னைக்கு ஜோசியர் காட்டுல மழைதான்"

"ஆமா.. வாங்குற பணத்தை என்ன பண்ணுவாரு .. அவரே ஒன்டிகட்டைதான்.." என்றது பக்கத்து வீடு.

"வாரமான கறி, தெனமும் சுருட்டுன்னு மனுஷன் இஷ்டத்துக்கு செலவு செய்யுறார்... மீதி பணத்தையெல்லாம் பொட்டில போட்டு வெச்சுகுவரோ என்னமோ... "

தள்ளாத வயதிலும், தனியாகவே சமைத்து கொண்டு வாழ்ந்து வந்தவர், உடம்பு முடியாமல் படுத்து அடுத்த இரண்டு வாரத்திலேயே போய் சேர்ந்து விட்டார். ஊருக்கெல்லாம் நல்ல நாள் பார்த்து சொன்னவர் எந்த நேரத்தில் இறந்திருப்பார் என்று தெரியவில்லை. மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.

" தகர பொட்டில.. அரிசி பானையில.. எங்கே பார்த்தாலும் பணம் இருந்துச்சாமா.. " என்று ஊரே பேசி கொண்டது. எப்போதும் அவருடைய வீட்டை விட்டு தள்ளி உள்ள ஒரு திறந்தவெளி திண்ணையில் தான் அவர் ஜோசியம் சொல்லுவார். இப்பொழுது அந்த திண்ணை யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது. இன்னொரு ஜோசியர் அந்த திண்ணைக்கு வந்து ஜோசியம் பார்க்க சாத்தியமேயில்லை .

காலம் அங்கே தனது ஜாதகத்தை காற்றில் எழுதி கொண்டிருந்தது கூட்டல், கழித்தல்களுடன்.

இந்தப் பதிவு ஒரு மீள்பதிவு.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி

4 comments:

  1. //மனிதன் பிறப்பதும், இறப்பதும் நல்ல நேரம் பார்த்து நடப்பது இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் தேவைபடுகிறது.//

    Well said..well said...

    ReplyDelete
  2. இது கதையா? நெஜமா? எதா இருந்தாலும் நல்லா இருக்கு. ;-))

    ReplyDelete
  3. @பூந்தளிர்
    நன்றிங்க

    ReplyDelete
  4. @RVS
    நெசக் கதைதான் அண்ணா.
    தங்கள் பாராட்டுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete