Posts

Showing posts from 2010

சிறு துளிகள் (29/12/2010)

Image
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . எல்லோருடைய கனவுகளும் இந்த வருடம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . ( மேலே உள்ள புகைப்படம் நான் முன்பு எடுத்தது , வாழ்த்து சொல்ல தேடிக் கண்டுபிடித்தேன் :) ) . ஊழல் தலைவர்கள் உங்களிடம் ஒருவர், 'நீங்கள் ஊழல் செய்கிறீர்கள்' என்று சொன்னால், என்ன சொல்லுவீர்கள். 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்கள். இதற்கும் மேலாக நீங்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிடுவீர்கள். அதை விடுத்து, 'எனக்கு முன்னால் இருந்தவன் ஒருவன். அவன் செய்யாததையா நான் செய்து விட்டேன், அவன் என்ன செத்தா போனான்?' என்று கேட்பீர்களா?. எங்க கிராமத்துல அடிக்கடி சொல்லுவார்கள் 'ஏண்டா.. அவன் கெணத்துல உளுந்தானா.. நீயும்மா போய் உழுவே?'. ஆக எல்லாத் தலைவர்களும் தப்பித்து விட்டு கடைசியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை கிணத்துக்குள் தள்ளி விட்டுதான் போவார்கள். சுனாமி இந்த வருடமும் சுனாமி தினம் வந்து போனது. மீண்டும் ஒருமுறை வந்தால் தடுக்க நம்மிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிதியை மட்டும...

அலைதல்

Image
வானுயர் கட்டிடங்களின் மேல் எங்கிருந்தோ வந்த பொன்வண்டு ஒன்று பறந்து கொண்டிருக்கிறது.. அது அறிந்திருக்க வாய்ப்பில்லை அதற்கான உணவு இந்நகரத்தில் இல்லையென... படம் : http://www.orangecounty.in/lifescapes/once-upon-a-bug/ தளத்தில் இருந்து . நன்றி

விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்..

Image
ஒரு கடைத் தெருவுக்கு நாம் சென்றால் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டுத் திரும்பி விடுவோம். ஆனால் அந்த கடைத் தெருவில்தான் எத்தனை விதமான மனிதர்கள். தி நகர், ரங்கநாதன் தெருவையே எடுத்துக் கொள்ளுங்கள். பூ விற்கும் பெண்கள், கைக்குட்டை சாக்ஸ் விற்பவர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொருள் விற்பவர்கள், ஐஸ் கிரீம் கடைகள், துணிக் கடைகள், பாத்திரக் கடைகள், நகைக் கடைகள், கடைக்கு வாங்க எனக் கூவிக் கொண்டிருப்பவர்கள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், பழச் சாறு கடைகள், பேக்கரிகள், அந்த கூட்டத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள், வேகமாகப் போகிறவர்கள், வீதி பெருக்குபவர்கள், திருடர்கள்... என எத்தனை விதமான மக்கள். இது போன்ற கடைத் தெருவில் வாழும் மக்களின் வாழ்வைச் சுற்றி எழுதியவர் திரு. ஆ.மாதவன் அவர்கள். கடந்த ஞாயிறு அன்று கோவையில், ஆ.மாதவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவுக்கு சென்றிருந்தேன். இது வரையிலும் மாதவன் அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நிறையப் புத்தகங்களிலும், குறிப்பாக திராவிட ஏடுகளில் நிறைய எழுதியிருக்கிறார் என்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும...

உலரும் குருதி

Image
ரீங்காரமிட்டு சுற்றி சுற்றி வந்தது பெரும் கொசுவொன்று... இரண்டு மூன்று முறை அடிக்க முயற்சித்தும் தப்பி விட இம்முறை தவற விடக் கூடாதென ஆடாமல் அமர முன்கையில் வந்தமர்ந்து குருதி ருசியில் சொக்கியது.. ஓங்கி அடித்த அடியில் வெளிவந்த குருதி இப்பொழுது என் உடம்பிலும் இல்லை கொசுவின் உடம்பிலும் இல்லை காற்றில் உலர்ந்து கொண்டிருந்தது..! படம்: இணையத்தில் இருந்து. நன்றி. பின்குறிப்பு : கவனிக்க , இதை நான் கவிதை லேபிளில் அடைக்கவில்லை !! :)

சலூன்

Image
சுத்தற சேரும், மேல காத்தாடியும் இருந்த அந்த 'ராஜா' சலூனுக்குள் போகலாமா, வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே குழப்பம். சலூனுக்குள் போகவே பயமாக இருந்தது. வருவது வரட்டும்னு உள்ளே போயிட்டேன். உள்ளே போனால், ஒருவருக்கு முடி வெட்டிட்டு இருந்த கடைக்காரர் என்ன என்பது போலப் பார்த்தார். "கட்டிங் பண்ணனும்" என்றவுடன், "அங்க உட்காரு" என்றார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்கள் கிடந்தன. டேப்பில் ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருந்தது. முன்னாடி, பின்னாடி எனப் பெரிய பெரிய கண்ணாடிகள சுவத்துல மாட்டி இருந்தன. காலி இடத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும், இன்னொரு பக்கம் ரஜினி காந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் பேப்பரில் வந்த சில நடிகைகளின் படத்தை ஒரு இடத்தில் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு இருபது நிமிசம் கழிச்சு, முடி வெட்டிட்டு இருந்தவர் கிளம்ப, என்னைப் பார்த்து "வாங்க.." என்று சேரைத் தட்டினார் கடைக்காரர். இது வரைக்கும் அந்த மாதிரி சேர்ல உக்காந்தது இல்ல, அதுனால ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏறி உட்கார்ந்ததும், கடைக்காரர் அழகா ஒரு பாட்டில்ல இருந்து தண்ணிய தலைக்கு...

தி சர்க்கஸ் (The Circus)

Image
இது ஒரு மீள் பதிவு ! இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?. நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள். சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல. படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்க...

பாரதி

Image
சாதிகள் பெண் கொடுமைகள் படித்தவர்கள் செய்யும் சூது வேடிக்கை மனிதர்கள் என்று நிறைந்து கிடக்கும் எமது காணி நிலங்களில் உனது அக்கினிக் குஞ்சுகளை தேடிக் கொண்டிருக்கிறோம் பாரதி ஒருநாள் அகப்பட்டு அவைகளை வெந்து தணிப்போம் என்ற தாகத்தோடு.

பனைமரத்து நிழலின் சிரிப்பு

Image
குறிப்பு: கொஞ்சம் நீண்ட கதை. ரொம்ப வருடங்கள் முன்னர் எழுதியது. பழைய காகிதங்கள் கிடைக்க வலையில் ஏற்றி விட்டேன். ! ********************************* ஏதாவதொரு காலைப்பொழுது எனக்கு பனைமரத்தின் கீழ்தான் விடியும். அப்படிப்பட்ட நாட்கள் அநேகமாக சித்திரை மாத வெயில் சுழற்றி அடிக்கும் நாட்களாக இருக்கும். ஊரிலிருந்து சொந்தக்காரர்கல் யாராவது வந்தாலோ, இல்லை அம்மா ஊருக்குப் போனாலோ “நொங்கு” இருக்கும். ஏதொ பிள்ளையார் கோயிலில் பொங்கல் வாங்கற மாதிரி விடிஞ்சும் விடியாத காலங்கார்த்தால பெரிய போசியோட நொங்கு வாங்கப் போயிரணும். ஊரில் எத்தனையோ பேர் நொங்கு எடுத்தாலும், எங்க அம்மாவுக்கு ஊமையனிடம் தான் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம். அதற்கு காரணம், மத்தவங்க ஒரு ருபாய்க்கு இரண்டு நொங்கு என்றால் இவன் மூன்று போட்டுக் கூடவே நாலைந்து சேர்த்தும் தருவான். சீசன் சூடு பிடிக்கும் நாட்களில் கூட ஒன்றிரண்டு கொரைப்பானே தவிர மத்தபடி போசியை நப்பியே தருவான் என்பதால் அம்மாவுக்கு சந்தோசம். அதனால், எங்க ஊட்டு கிழிந்த துணிகளும், பழைய கொழம்பும் கொஞ்சம் தள்ளி இருக்கிற அவனின் குடிசைக்குள் தஞ்சமடையும். பட்டப்பேரு தான் ஊமையனே தவிர, அவனோட ப...

காதல் செய்வீர் உலகத்தீரே!

உலகம் என்ன சொல்லும் என்கிறாய் உன்னையும் என்னையும் தவிர உலகத்தில் யாருமில்லை கண்ணே ! ********************************* நீ வெட்டி விலகிச் செல்லும் போதெல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் தழைக்கும் தாவரமென வளர்கிறது உன்மேலான என் பிரியம் ! ********************************* தென்றலாய் நடந்தாய் மணியாய் சிரித்தாய் தண் நிலவாய்ப் பார்த்தாய் ஒரு நாள் கவிதையாய்ப் பேசியபோதுதான் நான் கவிதை கிறுக்க ஆரம்பித்தேன் ! *********************************

பயோடேட்டா : மழை

Image
பெயர்: மழை சாதனை: உயிர்கள் தோன்ற காரணமாக இருந்தது இருப்பிடம்: வானம், பூமி, ஆறு, கடல் முதற்கொண்டு உங்கள் வீட்டின் நீர் பிடிக்கும் பாத்திரங்கள் என அனைத்திலும். நிறம்: இல்லை பிடித்த இடம்: என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை எழுதும் கவிஞர்களின் மனம். பிடித்தவர்கள்: மரம் வளர்ப்பவர்கள் பிடிக்காதவர்கள்: மரம் + காடுகளை அழிப்பவர்கள், சுற்றுச்சூழலைக் கெடுப்பவர்கள். எரிச்சல்: வெயில் காலங்களில் மழை இல்லை என்று புலம்பிவிட்டு, மழை பெய்யும் காலங்களில் 'எப்பதான் இந்த மழை நிக்குமோ?' எனத் திட்டும் மனிதர்களைக் கண்டால். நீண்ட கால சாதனை: இன்னும் பெய்து கொண்டிருப்பது, உயிர்களை வாழ வைப்பது. சோகம்: முன்காலம் போல் மும்மாரி எல்லாம் பொழிய முடியாமல், குறைவாக பெய்வது. (இதற்கே மக்கள் 'வரலாறு காணாத மழை, வீட்டில் வெள்ளம்' என்று செய்தியில் சொல்லுகிறார்கள்). பிடித்த குறள் : விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ********************************** நன்றி: மழைப் படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

வெதச்சவனும் வளர்த்தவனும்..

Image
நடு மக, புருஷன் பணம் வேணும்னு கேக்குறான்னு தேம்பிக்கிட்டு இருக்க கட்டி இருந்த நாலு வெள்ளாட்டுல ஒன்னப் புடிச்சு சந்தையில விக்கப் போனா தெக்க வூட்டு ஆத்தா... ஆட்ட வித்துப் போட்டு பேரன் ஆட்டுக் கறி வேணும்னு போன வாரம் கேட்டது நெனவுக்கு வர வாங்கலாம்னு எட்டி வெக்கையில புள்ளைக்கு பணம் பத்தாமப் போனா என்ன பண்றது அப்படின்னுட்டு... வெதச்சவனும் வளர்த்தவனும் என்னைக்கு அதத் தின்னிருக்கான்னு பொலம்பிட்டு வெறுங்கையோடு நடந்து போகிறாள் சந்தையிலிருந்து.. **************** படம் : இணையத்திலிருந்து நன்றி . ****************

அமிழ்தினும் அமிழ்து

Image
ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும் கொஞ்சம் பொட்டுக் கடலையும் கொண்டு வந்து தின்னத் தந்துவிட்டு 'என்கிட்டே வேறென்ன இருக்கு' என்று தள்ளாமையில் புலம்பிக் கொண்டிருக்கும் பாட்டிக் கிழவியிடம், இது அமிழ்தினும் அமிழ்து என்பதைச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். குறிப்பு : இப்பதிவில் இருக்கும் படம் , பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி . **************

பெருமூச்சு

Image
மேள சத்தங்கள் ஜொலிக்கும் மேடைகள் ஆயத்த சிரிப்புகள் உருட்டப்படும் பாத்திரங்கள் மணக்கும் உணவுகள் பரபரக்கும் மனிதர்கள் விளையாடும் குழந்தைகள் என நிறைந்து கிடக்கும் திருமண மண்டபத்தின் வாசலை, வீதியில் கடக்கும் யாரேனும் ஒருவரின் பெருமூச்சு நிரப்பி விட்டுச் செல்கிறது. படம் : இணையத்திலிருந்து : நன்றி. ************************

சிறு துளிகள் (23/11/2010)

Image
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...

அழைப்பு வராத இரு எண்கள்

" ஹலோ பிரகாஷ் ” “ மச்சி , எப்படிடா இருக்க ?” “ நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாயின் பண்ணனும் . உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா ” “ ஓகே டா மச்சான் , ஆல் த பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன ” “ சரிடா ..” என்று போனை வைத்தேன் . இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று , இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை . ஒரு வருடத்துக்கும் முன்னால் , பிரகாஷ் , நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம் . எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால் , முதலில் வாங்க , போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா , போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு . இதில் கூத்து என்னவென்றால் , என் நண்பர்களை வாங்க , போங்க எனக் கூப்பிடுவான் . அவனிடம் கேட்டதற்கு , " டாய் மச்சான் நீ நம்ம ஆளு .. அவங்கள அப்படி கூப்பிட முடியல .. நீ அப்படி இல்லடா .." என்றான் . எனக...

பெய்யும் மழை

Image
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாதாகையால் சிநேகமாய் ஆதரவாய் மோனத் தவமாய் உயிர்த் துளிகளாய்ப் பெய்து கொண்டிருக்கிறது மழை... பெய்யும் மழையை எதிர்த்துக்கொண்டு நீள்சாலைகளில் விரைகிறது என் வாகனம் எந்தச் சலனமுமின்றி.. படம் தந்த தளம் : http://www.artiststranger. com

சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ

Image
இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியின் சுட்டி: சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள் ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும். ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை. நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.

சொல்லிக்கொடுத்த பாரதி..

Image
தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன. ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி. "காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி. சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி. இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும். "தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் மிக வாடித் துன்புற்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் சில வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. " "தழல் வீரத்தில் குஞ்சென்றும்...

சிறு துளிகள் (11/11/2010)

நேற்று காலை சன் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது புதிது, புதிதாக வரும் சிறப்புத் தினங்கள் பற்றி. அதில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு கவிதை சொன்னார்; "தினங்களை விட்டு விட்டு எப்போது குழந்தைகளைக் கொண்டாடப் போகிறீர்கள்" . (குழந்தைகள் தினம் வரப் போகிறது இன்னும் இரண்டு நாட்களில்) சொல்லப் போனால் குழந்தைகளை கவனிக்க முழுவதும் மறந்து விட்டோம். பள்ளி, டியுசன், டிவி, வீடியோ கேம்ஸ் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறை. கேட்டதெல்லாம் உடனே கிடைக்கிறது. ஒரு பொருளைப் பெற காத்துக் கிடப்பது இல்லை. எல்லாம் உடனே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இதற்கு நேர் எதிர் ஏழைக் குழந்தைகள். எதுவுமே கிடைக்காமல், (உணவும்தான்) சிக்னல்களிலும், பேருந்து நிலையங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கிறது பிஞ்சு கைகள். ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?. கொஞ்சம் குழந்தைகளைக் கவனியுங்கள்.... ******...

அதனடியில் இப்போ புத்தர் சிலையும் இருக்கலாம்..

இந்த மாதம் குமுதம் தீரா நதியில் ஈழத்து எழுத்தாளர் திரு. இரவி அவர்களின் பேட்டி இடம் பெற்றுள்ளது. இவர் எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு 'காலம் ஆகி வந்த கதை'. அந்தப் பேட்டியிலிருந்து சில பத்திகள்; நாங்கள் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டிருந்தாலும் அப்பா படிச்சு ஆசிரியராகி தென் இலங்கையில் சிங்களர்களும், முஸ்லீம்களும் அதிகமாக வாழ்ந்த மினுவாங்கொடை கல்லுழுவ கிராமத்தில் வாழ்ந்தார்கள். அந்தக் கதைகளை நான் எப்படிச் சொல்வேன்? நான் அப்போது பிறந்திலன். என் வாழ்வுக்கு முந்தைய வாழ்வு அது. 1958 எண்டு எனக்குச் சொன்னார்கள். இக்கதைகளை ஆயிரம், ஆயிரமாய் நான் பிறந்த பிறகு அம்மாவும், அப்பவும் சொன்னார்கள். மூன்று வயதிலிருந்து அந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். கல்லுலுவவில் அவர் படிப்பிக்கிறார். அப்பா அம்மாவுக்கு அழகுக் குழந்தையா அக்கா இருக்கிறா. பெரிய வால். பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஹாஜியார் குடும்பத்துக்கும் செல்லப்பெட்டை. இந்த மோள் எனக்குத்தான் என்று கடிச்சுக் கொஞ்சுவார். ஹாஜியார் ஆரிபும், அவர் மனைவி பாத்திமாவும் எங்கள் மீது அன்பைப் பொழிந்தனராம். கல்லுலுவவில் அப்பாவிடம் படித்தவர்கள் மாஸ்ரர் என்று அப்...

பட்டாசைச் சுட்டு சுட்டு..

Image
நரகாசுரர்கள், கிருஷ்ணர்கள், தீபாவளி போன்றவை பொய் எனக் கூறினாலும், அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை எனக் கூறினாலும், இது திணிப்பு என்று கூறிக் கொண்டாலும், பெரிய கடைகளின் விளம்பரங்கள், காசை இழுக்கும் பண்டிகை, கரியாக்கும் பண்டிகை எனச் சொல்லிக் கொண்டாலும்....................... "ஹை.. புது டிரஸ் நல்லா இருக்குப்பா.. இன்னும் ரெண்டு மத்தாப்பு பெட்டி வாங்கி கொடுங்க " என்ற நச்சரிப்பிற்கும், "இந்த தீபாவளிக்கு என் பையன் எடுத்து கொடுத்த புடவை" என்ற மகிழ்ச்சிக்கும், "பயிறு பாயசம் சூப்பரா இருக்கு" என்று வயிறு நிறைந்த நிறைவுக்கும், "எத்தனை நாள் ஆச்சு.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு.." என்பதற்கும் இது போன்ற சிறு சிறு சந்தோசங்களுக்கு ஆகவேனும் அடுத்த வருடமும் வேண்டும் தீபாவளி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் . ஒரு பட்டாசுப் பாடல்:

புதிய இடம்: சுருளி அருவி

Image
சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பனின் திருமணத்துக்காக நிலகோட்டைக்கு நண்பர்கள் சென்றோம். இதுவரைக்கும் செல்லாத இடங்கள். கரூர் டூ மதுரை நெடுஞ்சாலையில் பயணித்து நிலகோட்டையை அடைந்து, மணமக்களை வாழ்த்திய பெரும் வாழ்த்து அட்டைகளையும், ஒலி பெருக்கிகளையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு புகைப்படத்திற்கு சிரித்து விட்டு வெளியே வந்தோம். நான் உட்பட நண்பர்கள் நான்கு பேருமே அலுவலுக்கு விடுமுறை போட்டிருப்பதால், வெளியே எங்காவது சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவோம் என்று முடிவு செய்தோம். சாலையை அடைந்து சிலரிடம் 'பக்கத்தில் எங்காவது சுற்றி பார்க்கற மாதிரி இடங்கள் எதாவது இருக்குங்களா ?' என்று கேட்டோம். கும்பக்கரை அருவி, சுருளி அருவி, வைகை என்றார்கள். நண்பனின் அப்பாவிடமும் கேட்டதில் 'சுருளி அருவி நல்லா இருக்கும். அங்க போயிட்டு வாங்க' என்றார். எங்கள் வண்டி சுருளி அருவியை நோக்கிப் பயணித்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் அனைவரும் வெளியே செல்வதால் சந்தோசமாக இருந்தது. வழியில் தோன்றிய வழிகாட்டிகளையும், மக்களிடமும் கேட்டு அருவியை அடைந்தோம். த...