Thursday, January 7, 2021

பேய்ச்சி - ம.நவீன்

பேய்ச்சி நாவல் பற்றி ஜெயமோகன் தளம் மற்றும் பேஸ்புக் பதிவுகளில் படித்த பொழுதே வாங்க நினைத்தேன். வாங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். நாவல் மீதான தடையை அறிந்த பின்னர் உடனடியாக இந்நாவலை வாங்க முடிவு செய்து பனுவல் தளத்தில் வாங்கினேன். புத்தகம் வந்து சேர்ந்து படித்தும் விட்டேன்.

எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் சிறுகதைகளை இணையத்தில் படித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் சந்திப்பில் அவரைப் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. பேய்ச்சி நாவலில் அவரின் எழுத்து நம்மை உள்ளே இழுத்துக்கொள்கிறது. மூன்று நான்கு தலைமுறை மக்கள் நாவலில் வந்துபோகிறார்கள். 

ரப்பர் தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள், அங்கே அவர்களின் வாழ்க்கை, தம் சொந்த நிலமான தமிழகத்தை விட்டு இங்கே வந்து பின்னர் இதுவே சொந்த மண் என்று நினைக்கும் மக்கள், பக்கத்தில் இருப்பவர்களே சொந்த பந்தங்கள் என விரிகிறது நாவல். ரப்பர் தோட்டங்களில் மரங்கள் வேரோடு  தோண்டப்பட்டு, செம்பனை மரங்கள் நடும்பொழுது ஏற்படும் வேலை இழப்புகள், தோட்டத்தில் இருந்து பிரிய வேண்டிய நேரம் என புலம்பெயர் மக்களின் வாழ்வை பேசும் நாவல்,. ஜப்பான், பிரிட்டிஷ் என மாறி வரும் ஆட்சிகள், சீனர்களின் உழைப்பு என்று கதையோடு சொல்கிறது. 

ஓலம்மாவின் கணவன் மணியம், நல்லவனாக தெரிந்தாலும் சீன பெண் மீது சபலப்படுகிறான். மணியம் அவளைக் கல்யாணம் செய்யும் முன் அவளுக்கு சித்தம் பிறழ்ந்த குமரன் என்னும் மகன் உண்டு. அப்பிள்ளை அவனைத் தொந்திரவு செய்கிறான். வயதாக வயதாக அவனைச் சமாளிக்க முடியவில்லை என்று வைத்தியர் ராமசாமியிடம் புலம்புகிறான். ஓலம்மா அவன் அப்படி இருந்தால் என்ன, எனக்கு எப்பவுமே அவன் பிள்ளைதான் என்கிறாள். மணியம் குமரனைக் கொல்ல முடிவு செய்து, விஷம் வைத்துக் கொல்கிறான். 

ஓலம்மாவுக்கு நண்பனாக வைத்தியர் ராமசாமி. அவரின் அப்பா கோப்பேரன் தமிழகத்திலிருந்து வந்தவர். பேய்ச்சி அம்மனுக்கு பூசாரியாக இருந்த கோப்பேரன், அவரின் மனைவிக்கு பிறந்த ஆறு அல்லது ஏழு குழந்தைகள் இரண்டு வாரங்களில் இறந்து போக, இந்தப் பிள்ளையையும் பேய்ச்சி காவு வாங்கிவிடுவாள் எனப் பயந்து குழந்தையான ராமசாமியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறார். பின்னர் ஒரு செட்டியாரிடம் வேலைக்குச் சேர்ந்து மலேசியா வந்து சேர்கிறார். வைத்தியராக கோப்பேரன், ஊரை விட்டு, பேய்ச்சியை விட்டு வந்த பின்னர் யாருக்கும் வைத்தியம் பார்ப்பதில்லை. பேச்சியாக வந்து சொன்னால்தான் வைத்தியம் பார்ப்பேன் என்பவருக்கு ஒரு நாகம் தரிசனம் தருகிறது. பின்னர் வைத்தியம் பார்க்கும் அவர், தன் மகன் ராமசாமிக்கும் வைத்திய முறைகளை சொல்லித் தருகிறார். 

தோட்டத்தில் சாராயக் கடை நடத்தி வரும் சீனர்களான சின்னி மற்றும் ஆங்சோ ஆகிய இருவருக்கும் தொழில் போட்டி வருகிறது. சின்னியின் சாராய ஊறலில் ஆங்சோ விசத்தைக் கலந்து விடுகிறான். சின்னி கடையில் சாராயம் குடித்த அனைவரும் இறக்கின்றனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஓலம்மாவின் கணவன் மணியம், சின்னியை பாலியல் உறவு கொள்கிறான். தைப்பூச விழாவுக்கு சென்றிருந்த ஓலம்மா இதை பார்க்க நேரிடுகிறது. சின்னியையும் மணியத்தையும், வைத்தியர் ராமசாமி துணையுடன் கொல்கிறாள். 

காலங்கள் ஓடி ஓலம்மாவுக்கு வயதாகிறது. இப்பொழுது கிழவியுடன் பேரனான அப்போய் வசிக்கிறான். சிறுவனான அவனிடம் பாசத்தைக் கொட்டி வளர்க்கிறாள். ஆனால் மகள் முனியம்மா அவனை தன்னோடு அழைத்துச் செல்வதாகச் சொன்னவுடன் அவளுக்கு பயம் வருகிறது. பேரன் அப்போய் ராமசாமியுடன் நட்பாக பழகுகிறான். ராமசாமியுடன் அவன் ஒருநாள் காட்டுக்குள் சென்று வந்ததில் காய்ச்சல் வருகிறது. அவனைத் தூக்கிக்கொண்டு முனியம்மா, ஓலாம்மாவிடம் கோபப்பட்டு புறப்படுகிறாள். இதற்கு முன்னர் அம்மாவைத் தன்னுடன் வந்து இருக்குமாறு வற்புறுத்தியவள், இப்பொழுது எதுவும் சொல்லாமல் போகிறாள். சீன முதலாளி அவள் வீட்டைக் காலி செய்து வெளியே போகுமாறு சொல்கிறான். 

தன் கணவன் குற்றம் செய்தவன் என்று அறிந்தவுடன் அவனைக் கொல்ல முடிவெடுக்கும் ஓலம்மா பேய்ச்சி அம்மனின் இன்னொரு வடிவம் தான். எல்லோரையும் தன் சொந்தமாக நினைக்கும் ஓலம்மா, ஏதாவது பிரச்சினை என்றால் முன்னால் நிற்கிறாள். ஒரு பக்கம் அன்பை பொழிபவளாக மறுபக்கம் தீமை கண்டு பொங்குபவளாக ஓலம்மா. வயதான காலத்தில் தோட்டத்தை விட்டு பிரிய மறுப்பவளுக்கு சீன முதலாளி கெடு  விதித்த பின்னர், தான் ஆசை ஆசையாக வளர்த்த மரங்கள், பிராணிகள் என அழித்து விட்டு தன்னையும் அழித்துக்கொள்கிறாள்.     

சிறுவன் அப்போய் வளர்ந்து இப்பொழுது பெரியவனாகி விட்டான். அவனின் மனைவி மாலதிக்கு குழந்தை வயிற்றில் தங்குவதில்லை. தன் பாட்டியின் ஊரான ஆயேர் தோட்டத்துக்கு செல்கிறான். செம்பனைகளின் நடுவில் பேய்ச்சியின் கோவிலை கண்டுபிடித்து அங்கே இருக்கும் பூசாரியிடம் பேசுகிறார்கள். மாலதியின் கையால் சேவல் அறுத்தால், பேய்ச்சி கனிந்து குழந்தை வரம் அருள்வாள் எனச் சொல்கிறார் பூசாரி. முதலில் மறுக்கும் மாலதி பின்னர் சேவலை அறுக்கிறாள். பூசாரியிடம் இருந்து பறக்க நினைக்கும் சேவலை, ஒரு கையால் பிடித்து இறக்கையை காலால் மிதித்து அவள் சேவலை பலிகொடுக்கும்போது ரத்தம் தெறிக்கிறது. பூசாரி உட்பட எல்லோரும் ஒருகணத்தில் நடுங்கி பின்னர் பேச்சியை வணங்குகிறார்கள் என்பதுடன் நாவல் முடிகிறது. பேச்சிகள் எப்போதும் மறைவதில்லை.

இந்நாவலுக்கு தடை பற்றி சொன்னால், வியப்பாக இருக்கிறது. தமிழ் நாவல்களைப் படிப்பவர்களே கொஞ்சம் பேர். அவர்கள் இந்நாவலைப் படித்து கெட்டுப் போவார்கள் என்று அரசு நினைத்திருக்கலாம். இதில் வரும் பாலியல் சம்பவங்கள் தான் அவர்களை உறுத்துகிறது என்றால் என்ன சொல்வது.

கோவிலுக்குப் போகிறோம். நாள்பட்ட பலகாரங்களை வைத்துக் கொண்டு கடைக்காரர் பார்க்கிறார், சச்சரவு மிக்க மக்கள்,  பக்தியை காசாக்க நினைக்கும் பக்திமான்கள், கோவிலுக்கு வருபவனிடம் பணம் பறிக்க நினைக்கும் மக்கள் என பலபேர் உண்டு. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி கோவில் கருவறை முன் நிற்கும் பொழுது, தரிசனம் பார்க்கும்பொழுது அவை அனைத்தும் மறந்துபோய், பரம்பொருளே மனதில் நிற்கும். அதுபோல இந்நாவலில் பேய்ச்சியின் தரிசனம். அதைவிட்டு, நாவலில் வரும் பாலியல் சம்பவங்களே மனதில் இருக்கிறது என்றால் பிரச்சினை நாவலில் இல்லை.

Monday, June 22, 2020

சிற்பம் தொன்மம் - செந்தீ நடராசன்

சிற்பம் தொன்மம் என்ற இந்த நூல் 28 கட்டுரைகளால் ஆனது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிற்பத்தைப் பற்றி பேசுகிறது. தமிழினி வசந்தகுமார் எடுத்த புகைப்படங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பையும் வரலாற்றையும் விளக்குவதாக உள்ளது இந்தக் கட்டுரைகள். 


கட்டுரை என்றவுடன், வெறுமனே இது இந்தச் சிற்பம்,  இந்தக் கோவிலில் உள்ளது என்று சொல்லிச் செல்வதில்லை. அந்தச் சிலைக்குரிய புராணக் கதைகள், மற்ற இடங்களில் உள்ள அது போன்ற சிலைகள், அச்சிலை பற்றி சிற்ப புத்தகங்களில் சொல்லியுள்ள அம்சங்கள் என விளக்குகிறார் செந்தீ நடராசன் அவர்கள். 

அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்றால் நேராக மூலவரை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவோம். ஆனால் பிரகாரகங்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை நாம் உற்று நோக்குவதில்லை. உண்மையான கலை அங்கே இருப்பதை நாம் அறிவதில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில், சண்டேசருக்கு அருள்புரியும் சிற்பத்தைச் சிலர், அந்தச் சிவனே ராஜராஜனுக்கு முடிசூட்டினார் என மாற்றிப் புரிந்து கொள்ளக்கூடும்.

கோவில்களில் உள்ள சிற்பங்கள் விநாயகர், கிருஷ்ணன், அனுமன் என்றால் நாம் எளிதாக கண்டுபிடுத்துவிடுவோம். மற்ற சிற்பங்களை நாம் அடையாளம் காண்பது சிரமமே. அப்படிச் சிலைகளை நோக்கி, இனம் கண்டறிய என்ன செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்நூல். 



 
கை அமைதிகள்(வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம்.. போன்றவை), சிற்பம் வைத்திருக்கும்  ஆயுதங்கள், அமர்ந்திருக்கும் வாகனம் அல்லது ஆசன வகை, கிரீட வகைகள் போன்றவை மூலம் இச்சிற்பம் இந்த மூர்த்தி என்பதை அறியலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிற்பங்களைக் கொண்டு செந்தீ அவர்கள் விளக்குகிறார். சிற்ப நூல்களில் அந்த மூர்த்திகளுக்கு உண்டான அளவுகளையும் சொல்கிறார். 

சில சிற்பங்களை விளக்கும்போது, வேறு பகுதிகளில் அந்தச் சிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்கிறார். அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை பற்றி விளக்கும்பொழுது, உமையொரு பாகனின் தலையலங்காரம் ஜடா மகுடமாகவோ அல்லது பாதி ஜடா மகுடம் மீதி கிரீடம் போல இருக்கும், ஆனால் திருச்செங்கோட்டில் உள்ள சிலை முடியை அள்ளி முடித்து குந்தளமாக கட்டி இருப்பதைச் சொல்கிறார். 

வேதங்களில் குறிப்பிடப்படாமல் பின்னர் தோன்றிய நரசிம்ம அவதாரம், அதன் சிலையமதி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல பெருமாளுக்கு தென்னகத்தில் பூதேவி, ஸ்ரீதேவி என இரு தேவிகள், ஆனால் வடக்கில் செல்லும்போது அங்கே ஒரே துணை என்பதையும் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆந்திராவில் ராமப்பா கோவிலில் உள்ள நடன மங்கையின் சிலை பற்றிய கட்டுரையில், ராமப்பா என்னும் சிற்பியின் பெயர்கொண்டே அந்தக் கோவில் குறிப்பிடப்படுவதை சொல்கிறார்.


 
வீரபத்திரன், கஜசம்காரமூர்த்தி, கங்காள நாதர், பிச்சாடனார் போன்ற சிற்பங்களையும், வரலாற்றையும், புராணக் கதைகளையும் விளக்குகிறது இந்நூல். பவுத்த, சமண சிற்பங்கள் பற்றியும் சில கட்டுரைகள் உள்ளன. புராணம், கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்கள் படிக்க வேண்டிய முக்கிய நூல். நூலைப் படித்த பின்னர், எந்த கோவிலுக்குச் சென்று ஒரு சிற்பத்தைக் கண்டால் நின்று பார்த்து விட்டே செல்வோம். அதுவே இந்நூலின் வெற்றி. 

சிற்பம் தொன்மம் 
செந்தீ நடராசன் 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

படங்கள்: இணையத்தில் இருந்து.