Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************



படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


Wednesday, September 11, 2013

பேருந்து நிலையமும் ஒரு சிறுமியும்

நூறு நிமிடத்தில் கோவையை வந்தடையும் ஈரோ-100 பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒரு சிறுமி, கையில் சிறிய ஜெராக்ஸ் தாள்களுடன் ஏறினாள். எண்ணெய் காணாத தலையும், அழுக்கு உடையுமாக இருந்தவள், எல்லோரிடமும் அந்தத் தாள்களை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒரு சிலர் வாங்கிக் கொண்டார்கள். சிலர் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். எனக்குப் பக்கத்து இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள்.  அவர்களிடம் தாளைக் கொடுத்தவள், அப்படியே பின்னால் சென்றாள்.

திரும்பி வரும்பொழுது, இந்த இரண்டு இளைஞர்களும் ஒரு பத்து ரூபாய்த் தாளை அவளுக்கு கொடுத்தார்கள். இந்தப் பக்கம் திரும்பியவள், என்னிடமும் அந்த தாளைக் காட்டினாள். நான் இல்லை என்று மறுக்க, உடனே அவள் எழுதி இருந்ததைக் காட்டினாள். வழக்கம் போல, வாய் பேச முடியாத சிறுமி இவள், இவளுக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தோடு, நன்கொடை ரூ.10, ரூ.20, ரூ.50 என்று இருந்தது.

என்னிடம் இல்லை என்றேன். திரும்பவும் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள். நான் தலையாட்டிக் கொண்டே இருக்க, அவள் என் தாடையைப் பிடித்து கொஞ்சினாள். நானும் அவளின் கன்னத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு திரும்ப இல்லை என்றேன். கை ஜாடையிலேயே தனக்குப் பேசத் தெரியாது என்றாள். 

எனக்குத் தெரியும், எவனோ ஒருத்தன்(அ)ஒருத்திக்கு இவள் சம்பாதித்துக் கொடுக்கிறாள். அவன் எங்கேயோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, இவள் பிச்சை எடுத்து வரும் காசை செலவழிக்கக் கூடும். இவளுக்கு  சோறாவது வாங்கிக் கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்தச் சிறுமிக்கு நாம் காசு கொடுக்கும் பொழுது, மீண்டும் மீண்டும் இவளை நாம் இந்த நரகத்துக்கே தள்ளிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றவும் செய்தது.

தொடர்ந்து மீண்டும் காலைத் தொட்டாள். நிமிர்ந்து என்னைப் பார்க்கும்பொழுது, இப்பவாவது இவன் குடுப்பானா என்று நினைத்திருப்பாள் போலும். அந்த இரண்டு இளைஞர்களும், 'நீங்க குடுக்காதீங்க' என்றார்கள். நான் தலையை ஆட்டிக்கொண்டே, 'ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன், என் கூட வந்துறியா' என்றேன். அந்த சிறிய முகத்தில் ஒரு மூர்க்கம் வந்தது. என்ன நினைத்தாளோ, என் கன்னத்தில் ஓங்கித் தட்டிவிட்டு அடுத்த சீட்டுக்கு ஓடிப் போனாள். 

இந்தச் சிறுமிக்கு நான் ஒரு பத்து ரூபாய் கொடுத்து இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. முன்னரே சொன்னது போல, இவளுக்குப் பிச்சை போடுவதன் மூலம் மீண்டும் மீண்டும் அவளை இந்த நரகத்துக்கே நாம் அனுப்பி வைக்கிறோம். இந்தச் சமூகத்தில் ஒருவனாய், ஆட்சி செய்யும் அரசுகளுக்கு ஓட்டுப் போட்ட ஒருவனாய் நான் தலை குனிந்து தூங்கத் தொடங்கினேன்.