Friday, February 25, 2011

நிறம், அழகு மற்றும் சிவப்பழகு கிரீம்கள்

பெண் தேடும் படலத்தில், நல்ல குடும்பம், படிப்பு என்று தாண்டி 'நல்ல சிவந்த நிறமுள்ள பெண் தேவை' , குழந்தை பிறந்தவுடன் 'குழந்தை என்ன கலர்?'. குழந்தையின் எடை, ஆரோக்கியம் பற்றி ஒரு கேள்வியுமில்லை. கல்யாணத்துக்குப் போனால், 'பெண் / மாப்பிள்ளை மேட்ச் சரியில்லை. எங்க இருந்து தான் மாப்பிள்ளை / பொண்ணு பிடிச்சாங்களோ' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

சரி விட்டுத் தள்ளுங்கள், சினிமாவில் கூட அழகான நல்ல கலரான (இல்லை மேக்-அப் போட்டுக்கொண்டு) பெண்களே காணக் கிடைக்கிறார்கள். கிராமப் படம் என்றால் இயக்குனரைப் பொருத்து கலர் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்கப் படுகிறது.

அப்படி என்றால் அழகில்லாதவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கும் வழி உண்டாம். தொலைக்காட்சிப் பெட்டிகளில், தொடர்களுக்கு மத்தியில், சிவப்பழகு க்ரீம்களின் விளம்பரங்கள் இதையே வலியுறுத்துகின்றன. தனது தோலின் நிறம் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம் போல் சொல்கிறார்கள். அது எப்படி ஒரே வாரத்தில், ஸ்லைட் மாற்றுவது போல மின்னுகிறார்கள் எனத் தெரிவதில்லை. அதன் பின்னர் திரும்பிப் பார்க்காத ஆடவரெல்லாம் முக ஒளி பட்டு கீழே விழுந்து தொலைக்கிறார்கள்.



ஆண்களுக்கும் சிவப்பழகு கிரீம்கள் உண்டு. 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு' என்று பாடல் இருந்தாலும், அதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளுவதில்லை. எப்படி சிவப்பழகு க்ரீம்களை உபயோகப் படுத்திய பெண்ணின் பினனால் ஆடவர் செல்கிறார்களோ, அதுபோலவே அது போன்ற க்ரீம்களை உபயோகப் படுத்தும் ஆடவன் பின்னாலும் பெண்கள் செல்கிறார்கள்.

இன்னும் சில நிபுணர்கள் அவ்வப்பொழுது வந்து, வெள்ளரி, முட்டை என்று சிபாரிசு செய்கிறார்கள். சாப்பிட அல்ல, முகத்தில் தேய்க்க. க்ரீம்களை விட இந்த இயற்கை பொருட்கள் எவ்வளவோ மேல்.

உங்கள் நிறம் எதுவாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியமான உடலே உங்களைப் பற்றிச் சொல்லும். எனவே, வெய்யில் காலம் ஆரம்பமாகி விட்டது. நிறைய தண்ணீர் குடியுங்கள். வெள்ளரி, தர்ப்பூசணி போன்ற நீர்ச் சத்து நிறைந்த வகைகளை நிறையச் சாப்பிடுங்கள். ஜொலிக்கும் அழகு உங்களுக்கே.

படம்: இணையத்தில் இருந்து - நன்றி.


Wednesday, February 23, 2011

தேர்வு




















மூன்றாவது முறையும்
அட்டெம்ப்டில் தோல்வியடைந்த
பக்கத்துக்கு ஊர்ப் பையனின்
தற்கொலைக்குப் பின்,
தேர்வில் அதிக மதிப்பெண் பெற
வேண்டுமெனச் சொல்லிய
அப்பாவும் அம்மாவும்
'உன்னால முடிஞ்சத படி'
'மார்க் வரலேன்னாலும் பரவால்ல'
'பெயில் ஆனாலும் கவலப்படாதே'
எனச்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


படம்: இணையத்தில் இருந்து. நன்றி