Monday, May 5, 2025

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. 


ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின் கதைப்போக்கும், கதா பாத்திரங்களும் புரிய ஆரம்பித்த பின்னர் அந்தக் குறிப்பும் தேவையில்லாமல் போனது. உலகின் மிகச் சிறந்த நாவல் எனப் பலரும் போற்றிய இந்த ஆக்கத்தை நானும் படித்து முடித்தேன். இதை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மிக கடினமான இப்பணியை முடித்து நம் கையில் தவழ வைத்துள்ளார். 

எண்ணற்ற கதை மாந்தர்களும், நீண்ட விவரிப்புகளும் கொண்ட இந்நாவல் விளக்கும் போர் பற்றிய சித்தரிப்புகள் நாம் நினைத்து பார்த்திராதவை. போர் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. மேலே இருப்பவர்கள் கொடுத்தாலும் கீழே வந்து சேரும்போது அது ஒன்றுமில்லாமல் போகிறது. சில தளபதிகள் தீர்வுகள் ஏற்பட முனைந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். காயம் பட்ட போர் வீரர்களுக்கான மருத்துவமனையில், நிறைய வீரர்கள் கை, கால்களை இழந்து, ரத்தத்துடன் மருத்துவம் பார்க்க காத்திருக்க, காயம்பட்ட ஒரு பிரபு வந்ததும் அவரைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். சிலர் போரை பயன்படுத்தி புது செல்வந்தர் ஆகவும், புதிய பதவிகளைப் பிடித்து மன்னரிடம் செல்வாக்கு பெறவும் முயற்சி செய்கிறார்கள்.



ரஷ்யாவில் உயர் குடி மக்கள் கூடும் விருந்துகளின் வழியாக கதை மாந்தர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அந்த விருந்துகளே ஒருவரின் செல்வத்தை வெளிப்படுத்துவதாகவும், பெரிய குடும்பங்களின் கதைகளை பேசுவதாகவும், திருமண வயது வந்தோரின் திருமணத்தை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அரசில் அங்கம் வகிப்பவர்கள் கலந்து கொள்வதால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்த பின்னர் இறந்து விடுகிறாள். அவரின் தங்கை மேரி அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறாள்.  இருவரின் தந்தையும்  வயதானவருமான பால்கோன்ஸ்கி தற்கால நிகழ்வுகளை விரும்புவதில்லை. அவரின் மனம் போன போக்கில் கோபப்படுகிறார். கொஞ்சம் அழகு குறைந்திருக்கும் தன் மகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆண்ட்ரு தன்னால் முடிந்த அளவு அப்போதிருந்த அடிமைக் கூலி மக்களை சீர்திருத்த, அவர்களை முன்னேற்ற  சில முயற்சிகளை எடுக்கிறார்.

ஆண்ட்ருவின் நண்பர் பீயர் செல்வம் மிக்கவர். மேம்போக்காக ஆண்ட்ருவைப் போன்றே கூலி மக்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பி பணம் செலவிடுகிறார். ஆனால் அது ஒரு கனவு போலவும் அமைந்து விடுகிறது. இடையில் இருப்பவர்கள் அவரை ஏமாற்ற பார்க்கிறார்கள். மிக அழகானவளான ஹெலன் குராகின் என்பவள் பீயரின் செல்வத்துக்காக அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பின்னர் அவரை மதிப்பது கூட இல்லை. காதலும் இல்லை. பீயர் பிரீமேசன் என்னும் அமைப்பில் ஆர்வம் கொள்கிறார். அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 

ராஸ்டோவ் குடும்பம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரா, நிக்கோலஸ், நட்டாஷா, பெட்டியா என நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.  செல்வந்தர்களான இக்குடும்பம் மற்றவர்களுக்கும், விருந்துகளுக்கும்  தாரளமாக செலவு செய்கிறது, திருமதி ராஸ்டோவுக்கு செலவு பண்ண மட்டுமே தெரிகிறது, கணக்கு வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களின் ஆதரவில் வளர்ந்து பின்னர் பெரிய பதவிக்கு வந்த போரிஸ் என்பவன் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

மருமகள் முறை கொண்ட சோனியா என்னும் பெண்ணும் இவர்களுடன் வசித்து வருகிறாள். சோனியா நிக்கோலஸ் மீது காதல் கொள்கிறாள். எந்த நிலையிலும் அவள் நிக்கோலஸ் மீது தன் காதலை திணிப்பதில்லை. முதலில் சோனியா மீது ஈர்ப்பு கொண்ட நிக்கோலஸ், பின்னர் தன் குடும்ப சூழலை நினைத்து பெரிய இடத்துப் பெண்ணை மணந்தால் தமது குடும்பத்தின் நிலை உயரும் என நினைத்து, மேரி பால்கோன்ஸ்கியை மணந்து கொள்கிறான். 




சோனியாவுக்கு நேர் எதிராக நட்டாஷா இருக்கிறாள். அவளின் சிறுவயதும், கள்ளமில்லாத பண்பும் அனைவரையும் ஈர்க்கிறது. சிலரைக் காதலிக்கவும், அதிலிருந்து விலகவும் அவளால் முடிகிறது.  அவளை பொறுத்தவரை அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது இளமை காரணமாக ஒரு வண்ணத்து பூச்சி போல பறக்கிறாள். ஆண்ட்ருவை நிச்சயம் செய்த பின்னர், இன்னொருவனுடன் ஏற்பட்ட தற்காலிக ஈர்ப்பால் அவளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. திருமணமும் நின்று போகிறது. பின்னர் போரில் காயம்பட்ட ஆண்ட்ருவை அவள் சந்திக்கும்போது பழைய காதல் இருவருக்கும் பூக்கிறது. ஆனால் ஆண்ட்ருவின் உடல் நிலை மோசமாகி கொண்டே வர, அவர் இறக்கும் வரை ஆண்ட்ருவை தன்னுடனே வைத்து பார்த்துக்கொள்கிறாள் நட்டாஷா. 

முதலில் இருந்தே பீயருக்கும், நட்டாஷாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. போர் சமயத்தில் பீயரின் மனைவி ஹெலன் இறந்து போக, போர் முடிந்த பின்னர் பீயர் நட்டாஷாவை மணந்து கொள்கிறார். பிரெஞ்சு படையிடம் பீயர் மாட்டிக்கொண்டு பல நாட்கள் அவர்களுடனேயே பயணிக்கிறார். அப்பொழுது அவர் சந்திக்கும் மக்கள், வீரர்கள் என அவர் மனம் அலைபாய்கிறது. மேலும் போரில் அவர் களம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், பயப்படாமல் போர் முனையில் நின்றுகொண்டு போரை கவனிக்கிறார்

மன்னர் நெப்போலியன் ஏன் ரஷ்யா மேல் போர் தொடுத்தார் என்பதை இந்நாவல் விளக்கி கொண்டே போகிறது. பின்னர் அவர் பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன, பல்லாயிரம் வீரர்களை இழந்து திரும்ப வேண்டிய அவசியம் என்ன என்று விரிவாகவே ஆய்வு செய்கிறது நாவல். மாஸ்கோ நகரத்தை கைப்பற்றிய பிரஞ்சு படைகள் அதன் பின்னர் வலிமை இழந்து போனது எப்படி, ஒரு நாட்டுக்குள் அவ்வளவு தூரம் தனது படையை நடத்திக் கொண்டு வந்த நெப்போலியனை எது அவ்வாறு செய்ய சொன்னது என்றெல்லாம் பல பக்கங்கள். பிரஞ்சு படையிடம் முதலில் பின்வாங்கிய ரஷ்ய படைகள், பின்னர் கொரில்லா முறையில் தாக்கத் தொடங்கியதையும் விவரிக்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்ய தளபதி குட்டுசோவ் நாவலில் முக்கிய இடம் பெறுகிறார். வயதானவரான இவர் 'எதற்கும் கலங்காதவர்' எனப் பெயர் பெற்றவர். போர் முனையில் ஒவ்வொருவர் சொல்லுவதையும் காது கொடுத்து கேட்கும் குட்டுசோவ், எதையும் செயல்படுத்துவதில்லை. அது போலவே மேலிடத்திலிருந்து வரும் சில கருத்துக்களையும் அவர் ஏற்பதில்லை. இங்கே நடப்பது வேறு, அதை அவர்கள் அரண்மனையில் அமர்ந்து புரிந்து கொள்ள முடியாது என்கிறார். 



ஐநூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வந்து போகின்றனர். சில கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அக்கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள். நாவல் முழுவதுமே மகிழ்ச்சி, ஆசைகள், துரோகங்கள், காதல்கள், பிரிவுகள், வீரம், வீழ்ச்சி என பரந்து கிடக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகில் அங்கங்கே இயல்பாகவே இருக்கிறது நாவலில். நாம் பார்த்தவை சிலவே, நாம் பார்க்காதவை பல உள்ளன என்பது போல ஒவ்வொருவரின் பக்கத்திலிருந்தும் அவர்களின் நோக்கம் என்னவென்றும் விரிவாகவே பேசுகிறது நாவல். 

காலங்கள் பல கடந்தும் மனித குலம் போரை இன்னும் கைவிடவில்லை. தல்ஸ்தோய் போர் தவறென்றோ, சரியென்றோ விளக்கவில்லை. நடந்தது என்ன என்பதையே சொல்லிச் செல்கிறார். ஏதோ ஒருவகையில் போர் என்பது எல்லாரையும் ஒரு கண்ணியில் இணைக்கிறது, எல்லோரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் ஆதாயமும் அடைகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த நாவலை நாமும் படித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழில் படிக்க முடிந்ததே. முக்கியமான இந்நாவலை, இவ்வளவு பெரிய ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். 

போரும் அமைதியும் (War And Peace)  
லியோ டால்ஸ்டாய் 
தமிழில்: டி.எஸ். சொக்கலிங்கம் 
மூன்று பாகங்கள் 
சீதை பதிப்பகம், சென்னை

Tuesday, November 19, 2024

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். 



கோராவுக்கு அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பது தெரியாது. கோரா நல்ல உயரமும், ஆங்கிலேய நிறமும் கொண்டு விளங்குகிறான். தன் அம்மாவுக்கு நேர் மாறாக அவன் இந்து சமய சடங்குகளை கடை பிடிக்கிறான். மற்றவர்களையும் அவன் தனது கொள்கைகளை விளக்கி ஒப்பு கொள்ள வைக்கிறான். அதற்காக அவன் மற்ற சாதி மக்களை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களின் நிலைமை முன்னறேவும் விரும்புகிறான். தன் நாட்டு மக்களை யாரேனும் இழிவு செய்தால் கோரா கோபம் கொள்கிறான். தன் கருத்துகள் பற்றி இதழ்களில் கட்டுரைகளும் எழுதும் கோராவுக்கு நிறைய நண்பர்களும் அவனைப் பின்பற்றும் சிறு கூட்டமும் உண்டு. 

கோராவின் அம்மாவுக்கு லச்சுமியா என்ற பெண் பணிவிடை செய்து வருகிறாள். அப்பெண் வேறு சாதி என்பதால் கோரா தன் அம்மாவின் அறைக்குச் சென்று உணவு அருந்துவதில்லை. தண்ணீர் கூட குடிக்க மாட்டான். இத்தனைக்கும் அவனை சிறு வயதில் இருந்து வளர்த்தவள்  லச்சுமியா .ஆனந்தமாயிக்கு அதைப் பற்றிய வருத்தம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிடும் என நினைக்கிறாள். கோராவின் அம்மா ஆனந்தமாயி ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "சாதி முக்கியம் என்று நான் நினைத்திருந்த காலத்தில், அந்த சாதியின் பழக்க வழக்கங்களையும், ஆச்சாரங்களையும் கடை பிடித்தேன். சாதியை விட மனிதர்களே முக்கியம் என பின்னர் நான் உணர்ந்து விட்டேன். அதனால் இப்பொழுது என்னால் யார் கையால் கொடுத்த உணவுகளையும் சாப்பிட முடியும். ஈஸ்வரனின் அன்பையும் கருணையையும் மட்டுமே நான் நம்புகிறேன். சாதியை அல்ல."

கோராவுக்கு பினய் என்றொரு நண்பன் உண்டு. சிறு வயதில் இருந்தே பழக்கம் என்பதால் மற்ற எல்லோரையும் விட ஒருபடி மேலாக இருவருமே நட்பாக இருக்கிறார்கள். பினய்க்கு பெற்றோர் இல்லை. உறவினர்களும் அவனுடன் இல்லை. பெற்றோர் இல்லாத பினய்க்கு கோராவும், ஆனந்தமாயி அம்மாவும் உறவுகளாக இருக்கிறார்கள். கோராவும், பினயும் இந்துக்கள் என்றாலும் இருவருமே இருவேறு பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கோரா பின்பற்றும் ஆசாரங்களை பினய் பின்பற்றுவதில்லை. மேலும் எல்லோருடனும் எளிதில் பழகும் குணம் பினய்க்கு உண்டு. தன்னை பெறாத தாயாகவே ஆனந்தமாயி அம்மாவை அவன் எண்ணுகிறான். தன் மகன் கோரா தன்னுடன் உணவு உண்ணுவதில்லை என்ற குறையை ஆனந்தமாயிக்கு பினய் தீர்த்து வைக்கிறான். அவளின் அறையில் உணவு உண்ணுவதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. கோராவின் வீட்டில் பினயும் ஒருவனாகவே இருக்கிறான். 

தனது வாரிசு இல்லை என்ற உண்மையை கோராவிடம் சொல்லிவிடலாம் என்று ஆனந்தமாய் சொல்லும்போது, எனக்கு பிரச்சினைகள் வரலாம் என்று சொல்கிறார் கிருஷ்ணதயாள். அவரின் பென்சன் நிறுத்தப்படக் கூடும், மேலும் இன்னொருவரின் குழந்தையை எடுத்து வளர்த்து அதை அரசிடமோ, காவல் துறையிடமோ சொல்லாததால் இன்னல்கள் நேரும், தாக்குப்பிடிக்க முடியும் வரை பார்ப்போம் முடியவில்லை என்றால் என்றாவது ஒருநாள் கோராவிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்கிறார். 

க்ரிஷ்ணதயாளின் முன்னாள் நண்பரான பொரேஷ் பாபு குடும்பத்துக்கும் பினய்-கோராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொரேஷ் பாபு குடும்பம் பிரம்ம சமாஜத்தை பின்பற்றுகின்றனர். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியின் பெயர் பரதசுந்தரி. மேலும் அவரின் இறந்து போன இந்து நண்பரின் பிள்ளைகள்  சுசாரிதா, சதீஷ் ஆகிய  இருவரை அவர் வளர்த்து வருகிறார். சதீஷ் சிறுவன். எல்லோருக்கும் மூத்தவளான சுசாரிதா அந்த வீட்டில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கிறாள். அவளை பிரம்மோ சமூகத்தைச் சேர்ந்த ஹரன் பாபுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள் பரதசுந்தரி. 




பொரேஷ் பாபு, ஆனந்தமாயி, பினய், சுசாரிதா, லொலிதா போன்றோர் அனைத்து மக்களும் நம் சொந்தங்களே, நமக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை என நினைக்க, பரதசுந்தரி, ஹரன், ஹரிமோகினி  போன்றோர் சாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கோரா இதில் கொஞ்சம் வித்தியாசப்படுகிறான்.  தனது சாதியின் ஆசாரங்களை பிறழாமல் கடைபிடிக்கும் அதே வேளையில், அடுத்தவரின் துன்பங்களை புரிந்து கொள்ளவும், நாடு சுதந்திரம் பெற்று எல்லோரும் மேன்மை அடைய வேண்டும் என விரும்புகிறான். கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மக்களைச் சந்திக்கிறான். ஏழை இளைஞர்களை காவலர் அடிப்பதைப் பார்த்து, சண்டைக்கு போகிறான். பின்னர் அதே பிரச்சினையில் நீதிபதி சிறை தண்டனை விதிக்கவும் தயங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறான். உண்மையும், நேர்மையுமே தனக்கு அழகு என்று எங்கேயும் தலை நிமிர்ந்து நிற்கிறான் கோரா. 

பினய்-லொலிதா காதலால் பிரச்சினைகள் வருகின்றது. ஆனால் இருவருமே தமது சமூக பழக்க வழக்கங்களை மதித்து மதம் மாற முடியாதென தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. கோரா கூட அந்த திருமணத்தை எதிர்க்கிறான். இதற்கிடையில் ஹரிமோகினி என்னும் பெண் சுசாரிதாவுக்கு பெரியம்மா என கூறிக்கொண்டு வருகிறாள். ஹரிமோகினியால் பொரேஷ் பாபுவின் வீட்டில் இருந்து தனியே வருகிறாள் சுசாரிதா. ஹரிமோகினி இந்து ஆச்சாரங்களை வன்மையாக கடைபிடிக்கிறாள். எங்கே சுசாரிதா கோராவின் மேல் காதல் கொண்டு கல்யாணம் செய்து விடுவாளோ என்று பயந்து தனது கணவனின் வழியில் ஒரு வரனை பார்த்து வைக்கிறாள். அவளின் திட்டங்களுக்கு சுசாரிதா மறுப்பு தெரிவிக்கிறாள். 

கோரா-சுசாரிதா காதல் நேரடியாக இருவருமே தெரிவிக்காவிட்டாலும், சுசாரிதா கோராவை ஒரு குருவாக நினைத்திருக்க, தனது வழியை பின்பற்றும் சிறந்த பெண்ணாக கோரா நினைக்கிறான். 

ஒரு துறவியாக செய்யக்கூடிய சடங்குகளை கோரா ஒரு விழாவின் மூலம் நடத்த நினைக்கிறான். ஆனால் கிருஷ்ணதயாள் அவனை செய்ய வேண்டாம் என்கிறார். அவன் திருப்பி ஏன் என்று கேட்க, சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டு விடு என்கிறார். சடங்கு செய்ய கொஞ்ச நேரம் இருக்கும்போது  கிருஷ்ணதயாள் மயக்கமாகி உடல்நிலை கெட்டு கோரா பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுகிறார். கோரா திகைத்து நிற்கிறான். 

பின்னர் கோரா தன்னை ஒரு சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு பொரேஷ் பாபுவிடம் கேட்கிறான். எல்லோருடைய சமூக வழக்கங்களுக்கும் மரியாதை கொடுக்கும் அவரை விட சிறந்த குரு அமைய மாட்டார் எனச் சொல்கிறான் கோரா. ஆனந்தமாயி அம்மாவின் அறைக்கு வரும் கோரா, 'நான் வெளியில் தேடிய தெய்வம் எனது வீட்டிலேயே இருந்திருக்கிறது. அத்தெய்வம் நீங்கள் தான் அம்மா. லட்சுமியாவை அழைத்து ஒரு குவளை தண்ணீர் எனக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்' என்கிறான். 

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

தமிழில்: கா.செல்லப்பன்