Monday, September 2, 2024

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

அம்புலி மிகச் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர். எத்தனையோ மாடுகளைப் பிடித்த அவர் காரி என்ற காளையால் காயம்பட்டு இறக்க நேர்கிறது. அந்தக் காளையை அவரின் மகனான பிச்சி அடக்குவது தான் வாடிவாசல் என்னும் குறுங்கதை. மிகவும் மெதுவாக கதையைச் சொல்லாமல், பேச்சின் மூலமாகவே பழைய கதை வேகமாகச் சொல்லப்படுகிறது. காளைகள், ஜல்லிக்கட்டு, வாடிவாசல் பற்றியே கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிச்சி சல்லிக்கட்டுக்கு அந்த ஊருக்கு போகும்பொழுது ஆரம்பிக்கும் கதை அங்கேயே முடிவது போல வாடிவாசல் கதையை சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதியுள்ளார். 


மூன்று வருடங்களுக்கு முன் தன் அப்பாவை கொம்பில் தூக்கிய காரி காளையை பக்கத்து ஊர் ஜமீன்தார் நிறைய பணம் கொடுத்து வாங்கிவிட்டார். பக்கத்து ஊர் ஜல்லிக்கட்டுக்கு அந்தக் காளை  வருவதை அறிந்த பிச்சி அங்கே செல்கிறான். அவனுடன் பிச்சியின் மச்சினன் மருதனும் உடன் செல்கிறான். 


அங்கே சென்ற பிச்சிக்கு ஒரு கிழவருடன் நட்பு உருவாகிறது. அந்தக் கிழவருக்கு பிச்சியின் தந்தை பற்றியும், அவரைக் காயப்படுத்திய காரி காளை பற்றியும் தெரிந்திருக்கிறது. ஜமீன்தார் அந்த காளையை இங்கே கொண்டுவந்த பின்னர், யாருமே அந்தக் காளையை அடக்க முடியவில்லை என்று அவர் சொல்கிறார். ஜமீன் காளையை அடக்கி விட்டு பின்னர் ஊரில் இருக்க முடியுமா என்றுதான் யாரும் அந்த மாட்டை தொடுவதில்லை எனச் சொல்கிறான் பிச்சி. அந்தக் காளை வாடிவாசலுக்கு வரும்போது நீயே பார், ஆமாம் நீ அதை பிடிக்கப் போகிறாயா என கிழவர் கேட்கிறார்.

நான் காரியை பிடிக்கப் போகிறேன் என்று அவன் சொன்னதும், கிழவர் உயிரை பணயம் வைக்காதே, அது வீரமுள்ள காளை, உன்னை ஒரே குத்தில் குத்தி தூக்கி போட்டு விடும் தம்பி.. விலகி ஊருக்குப் போய்விடு என்கிறார். அந்தக் காளையை பிடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை, எனவே நான் அதைப் பார்க்கிறேன் என்கிறான். சல்லிக்கட்டுக்கு வந்துவிட்டால் ஜமீன் மாடாய் இருந்தால் என்ன, இங்கே போட்டி தான் இருக்கும் என்கிறான் பிச்சி.  கிழவரும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பற்றி தனக்குத் தெரிந்தவற்றை பிச்சி, மருதன் ஆகிய இருவருக்கும் சொல்கிறார். 



ஜல்லிக்கட்டில் ஜமீன் காளையான காரி உள்ளே வருவதற்கு முன்னரே பிச்சி அந்த மாட்டை பிடிக்க வந்திருக்கிறான் என்ற செய்தி பரவ எல்லோரும் ஆர்வமாய் அவனையே பார்க்கின்றனர். ஜமீன்தார், முடிந்தால் அந்த மாட்டை அவன் பிடித்துக்கொள்ளட்டும் என அவனை உற்றுப் பார்க்கிறார். கதையில் பிச்சியும், ஜமீனும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதை அழகாக கொண்டு போயிருப்பார் செல்லப்பா. 

இந்தக் கதையின் இறுதியில் காரிக்கு நடப்பது போல இப்போது செய்ய முடியாது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிச்சிக்கு தொடையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான். 

மனிதனுக்கு ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு எனத் தெரியும். ஆனால் மாட்டுக்கு அது தெரியாது. தன்னைச் சீண்ட வரும் எதிரி என்றே அதற்கு புரியும். இந்தக் கதையில் வருவது போல, வாலை பிடிப்பது, மாட்டை கீழே தள்ளுவது போன்ற செயல்கள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், அதுவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அணைய வேண்டும் எனப் பல விதிகள் இப்போது உள்ளன. 

வாடிவாசல் குறுங்கதை, எழுத்தின் மூலம் உண்மையாக நடக்கும் ஜல்லிக்கட்டை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். வேறு எங்கேயும் நம்மை அகல விடாத கதையும் கூட. பாத்திரங்கள் அறிமுகம் என்று பின்னோக்கி செல்லாத நாவல் வாடிவாசல். 


Monday, August 26, 2024

நிர்மால்யம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாளத்தில் வெளிவந்த படம் நிர்மால்யம் (1973).  இந்த படத்தை எழுதி, இயக்கியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் முதன்முதலாக இயக்கிய படமும் கூட. அப்படத்தின் திரைக்கதையை தமிழில் மீரா கதிரவன் மொழி பெயர்த்துள்ளார். 

அந்தக் காலத்தில் ஒரு வெளிச்சப்பாட்டின் வறுமையை, இயலாமையை நம்மை உணர வைக்கும் கதை நிர்மால்யம். ஒரு கையில் சிலம்பும், மறுகையில் பள்ளிவாளும், இடுப்பில் சலங்கைகளும் கட்டி ஆடும் வெளிச்சப்பாட்டை    தமிழில் அருள் வாக்கு சொல்பவர் என்று கூறலாம். நெற்றியில் பள்ளி வாளால் வெட்டிக் கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுவார்கள். 



தனது தந்தையான பெரிய வெளிச்சப்பாடு ஆடிய காலங்களில் குடும்பத்துக்கு வருமானம் குறைவில்லாமல் இருந்திருக்கிறது. கோவிலில் தொடர்ந்து பூஜைகளும் நடக்கும். எனவே கொஞ்சம் வசதியாகவே இருந்திருக்கிறார்கள். கோவில் நிர்வாகிகளுக்கு கோவிலைப் பராமரிக்க மனதில்லாமல், பூஜை குறைய வருமானம் குறைந்து வறுமை வாட்டுகிறது. வெளிச்சப்பாடுக்கு அப்பு என்ற மகனும், அம்மிணி என்ற மகளும், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள். மனைவி பெயர் நாராயணி.  பெரிய வெளிச்சப்பாடு இப்போது முதுமையில், வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கோவிலில் ஒருநாள் பக்தரின் வேண்டுதல் பூஜை நடக்கிறது. பூஜை நடந்தால் செண்டை மேளம், வெளிச்சப்பாடு, வாரியர் என எல்லாரும் வரவேண்டும். பூஜை முடிந்து பூஜைக்கு உண்டான பணம் மட்டுமே கொடுக்கிறார் வேண்டிய பக்தர். அதைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது மேளம் அடித்தவர் இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கோபப்பட்டு போகிறார். கோவில் நம்பூதிரி எனக்கு இந்த வேலையே வேண்டாம், வேறு ஆளை பூசைக்கு வைத்துக்கொள்ளட்டும் என அவரும் ஊரை விட்டுப் போகிறார். வெளிச்சப்பாடுக்கும் குறைந்த தொகையே வருகிறது. இவ்வளவு குறைந்த தொகைக்கு, எதுக்காக ஆவேசப்பட்டு வேகமாக ஆடி, மண்டையில் ரத்தம் வருமாறு அடித்துக்கொள்ள வேண்டும், இந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாம் என அவரிடம் சொல்கிறார்கள். அதற்கு வெளிச்சப்பாடு "இந்த நடைக்கு வந்து, பள்ளி வாளை எடுத்து அந்த முகத்தை (தெய்வத்தை) பார்த்தால் .. எல்லாமே மறந்து போய்விடும்" என்கிறார். 

வெளிச்சப்பாடின் மகன் அப்பு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். இரண்டு ரூபாய் கேட்டால் கூட தர இயலாத தந்தை மேல் அவனுக்கு கோபம் வருகிறது. ஒருநாள் பள்ளிவாள், சலங்கை, சிலம்பம் என எல்லாவற்றையும் பழைய பாத்திரக்காரனுக்கு போடுகிறான். தெய்வத்தின் பொருளை நான் வாங்க மாட்டேன் என பாத்திரக்காரன் சென்று விடுகிறான். அந்நேரத்தில் அங்கே வந்த வெளிச்சப்பாடு, அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறார். அவனும் போய்விடுகிறான். பிறகு அவனை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடிவதில்லை. 


புதிதாக வந்த கோவில் நம்பூதிரி இள வயதுள்ள உண்ணி நம்பூதிரி. வெளிச்சப்பாடின் மகள் அம்மிணிக்கும், உண்ணிக்கும் காதல் பூக்கிறது. அரசாங்க வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் உண்ணி நம்பூதிரியை நம்புகிறாள் அம்மிணி. ஆனால் அவனின் தந்தை வேறு ஒரு வரனை நம்பூதிரிக்கு நிச்சயம் செய்துவிட, அந்த காதல் கைகூடாமல் போகிறது. 

அந்தக் காலத்தில் அம்மை, தொற்று வியாதிகள் என பல நோய்கள் வந்ததால் அம்மனுக்கு வேண்டுதல் நிறைய இருக்கும். வெளிச்சப்பாடுக்கு வேலையும், வருமானமும் குறைவில்லாமல் இருக்கும். "ஏதாவது நோய் வந்தால், உங்களுக்கு வருமானம் வரும்" என்று ஒருவர் கூற, அப்படியெல்லாம் எதுவும் நடக்க கூடாது என்றே சொல்கிறார் வெளிச்சப்பாடு. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஊரில் ஒரு சிலருக்கு அம்மை வார்க்கிறது. அம்மனுக்கு நீண்ட காலமாக குருதி பூசை நடக்காததால் தான் அம்மை வந்திருக்கிறது, பூசையை நடத்த வேண்டும் என முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள். 

நீண்ட காலம் கழித்து வெளிச்சப்பாடு சுறுசுறுப்பாகிறார். பூசை நடத்த எல்லோருடனும் சேர்ந்து பணம் வசூல் செய்கிறார். அதிலிருந்து ஒரு பைசா கூட அவர் செலவு செய்வதில்லை. தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஊர் மக்கள் உணர்ந்தால் போதும் என்ற சந்தோசம் அவருக்கு. 

பூசை நடக்க இருக்கும் அன்று அவருக்கு ஒரு துயரமான விஷயம் தெரியவருகிறது. மைமுண்ணி என்பவன் வெளிச்சப்பாடுக்கு கடன் கொடுத்து இருக்கிறான். அவரை எங்கே பார்த்தாலும் கடனைத் திருப்பிக் கொடு என்கிறான். அவ்வப்பொழுது வெளிச்சப்பாட்டின் வீட்டுக்கு வந்து செல்கிறான். வெளிச்சப்பாடின் மனைவி நாராயணியுடன் மைமுண்ணி தொடர்பில் இருப்பதை அறிந்து கையில் பள்ளிவாளுடன் "எனக்கு நாலு பிள்ளைகளை பெற்ற நாராயணி நீயா இப்படி" எனக் கேட்கிறார். அதற்கு நாராயணி, உலகத்தையே வெல்லக்கூடிய பள்ளி வாளின் முன் பயமில்லாமல் "ஆம் நான்தான். நீங்கள் தெய்வம் தெய்வம் என்று சுற்றிக் கொண்டிருந்த பொழுது என் பிள்ளைகள் எப்படி சாப்பிட்டார்கள். உங்கள் தெய்வம் வந்து கொடுக்கவில்லை. வேறு ஒரு ஆணின் முகம் தெரியாமல் வளர்ந்த என்னை, நாற்பது வயதில் இந்த நிலைக்கு தள்ளியது நீங்கள்" என வெடித்து அழுகிறாள். வெளிச்சப்பாடு பிரமித்து நிற்கிறார். 




வறுமை தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததை எண்ணி கலங்கும் வெளிச்சப்பாடு, கோவிலில் எந்நாளும் இல்லாத ஆவேசம் கொண்டு ஆடுகிறார். வாளால் அவர் நெற்றியில் வெட்டுவதை தடுக்க வரும் வாரியரை உதறி விட்டு கோபம் கொண்டு ஆடுகிறார். ரத்தம் முகத்தில் வழிந்தாலும் அதை உதறிவிட்டு ஓங்கி நெற்றியில் வெட்டி உயிரற்று சாய்கிறார் வெளிச்சப்பாடு. 

வறுமையின் முன்னால் தெய்வம் கூட பதிலற்று நிற்கிறது. 

==

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இப்படம் நிறைய விருதுகள் பெற்ற படம். தமிழில் மீரா கதிரவன் அழகாக மொழி பெயர்த்துள்ளார். சில மலையாளச் சொற்களுக்கு அந்தந்த பக்கங்களிலேயே தமிழில் குறிப்புகள் கொடுத்துள்ளார். 

நிர்மால்யம்
எம்.டி.வாசுதேவன் நாயர் 
தமிழில் மீரா கதிரவன்