Thursday, November 9, 2023

பதேர் பாஞ்சாலி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

'மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று பதேர் பாஞ்சாலியைக் குறிப்பிடலாம். அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப்படுத்திவிடவும் முடியும். இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காண முடியும். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சூழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவது பொருந்தும்.' என இந்நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்கிறார்



சத்யஜித் ராய் இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்நாவலை கொண்டே எடுக்கப்பட்டது. நாவலை அதன் அழகு குன்றாமல் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கியிருப்பார் ராய். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் கிராமமே நிச்சிந்தாபுரம். ஹரிஹரனும், மனைவி சர்வஜெயா என சிறு குடும்பம். புரோகிதம் செய்வதால் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடக்கிறது. அப்பு, துர்கா என இரு பிள்ளைகள். பக்கத்து வீட்டில் தூரத்து சொந்தமான வயதான அத்தை பாட்டியும் இவர்களுடன் இருக்கிறார். 

துர்கா வீட்டிலேயே இருப்பதில்லை. கிராமத்தைச் சுற்றிக்கொண்டே இருக்கிறாள். கொய்யா, மாங்காய் என தோட்டங்களில் சில காய்கள் பறிக்கிறாள். ஒருகாலத்தில் இவர்களின் சொத்தாக இருந்த அந்த தோட்டத்தில் பழம் பறித்ததற்கு ஜெயாவுடன் சண்டைக்கு வருகிறார்கள் இப்போதைய உரிமையாளர். சாலையில் கிடந்த தேங்காயை பொறுக்கி கொண்டு வந்தாலும் திட்டுகிறார்கள். வறுமை வாட்டும் கொடுமையில் சர்வஜெயா இருப்பதை வைத்து குழந்தைகளுக்கு ஏதாவது செய்து தருகிறாள். 

பழைய வீடு என்பதால் மழைக் காலங்களில் ஒழுகுகிறது. குளிருக்கு போர்த்த சரியான போர்வைகள் கூட இல்லை. 

சரியான வேலை இல்லாமல் திணறும் ஹரிஹரன் நான் வேறு ஊருக்கு சென்று வருமானத்துக்கு வழி பிறக்குமா எனப் பார்க்கிறேன் என்று ஊரை விட்டு கிளம்புகிறார். சென்றவர் இரண்டு மாதங்களை கடந்தும் எந்த தகவலும் இல்லை. கொஞ்சம் பழைய பொருட்களை விற்று சர்வஜெயா சமாளிக்கிறாள்.  கிராமத்திலே மழை அடித்து பெய்கிறது. துர்காவுக்கு காய்ச்சல் வந்து படுக்கையில் இருக்கிறாள். ஒரு உப்பு பிஸ்கெட்டாவது வாங்கி கொடு என்கிறாள் துர்கா, கஞ்சிக்கே வழியில்லை பிஸ்கெட்டுக்கு நான் என்ன செய்வேன் என்கிறாள் ஜெயா. நாளாக நாளாக காய்ச்சல் அதிகமாகி துர்கா உயிர் துறக்கிறாள். எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் ஹரிஹரனுக்கும் தகவல் சொல்ல முடிவதில்லை. 

திரும்ப வரும் ஹரிஹரனிடம் இனி இந்த ஊரில் இருக்க முடியாது, கிளம்புவோம் என சர்வஜெயா சொல்ல அவனும் சரி என்கிறான். காசி சென்று ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். ஹரிஹரன் கோவில் வேலை தவிர, மாலை வேளைகளில் புராண கதைகளை மக்களுக்குச் சொல்கிறான். கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அதுவும் பொய்த்து போகிறது. ஹரிஹரன் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். ஜெயாவும் அப்புவும் வேதனையில் மூழ்கிப் போகிறார்கள். 




ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய ஆள் வேண்டும் என்பதை அறிந்து அங்கே போய்த் தங்குகிறார்கள். வேலை அதிகம் என்றாலும் இருப்பதற்கு இடம் கிடைத்ததே என்று இருக்கிறார்கள். ஒருநாள் அங்கே இருக்கும் பிள்ளைகளுடன் சண்டை வர, அந்த வீட்டுப் பெரியவர்கள் அப்புவை அடித்து விடுகிறார்கள். ஜெயா இந்த அடிமை வேலை வேண்டாம், நாம் நம் ஊருக்கே செல்வோம் என நினைக்கிறாள். அங்கே வறுமை இருந்தாலும் நிம்மதியும், யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. 

அவன் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கடவுளிடம் எங்களை நிச்சிந்தாபுரத்துக்கு அனுப்பி வை என்று வேண்டுகிறான். அதற்கு கடவுள் சொல்வதாக கீழ்கண்ட வரிகள்; 
'சோனாடங்கா மைதானத்துக்கு முன்னால் இச்சாமதியைக் கடந்து, தாமரை பூக்களால் நிரம்பிய மதுக்காளி ஏரியைத் தாண்டி, வேகவதியை படகில் கடந்து மேலே செல். உன் பாதை முன்னால் போய்க்கொண்டே இருக்கிறது. அந்த ஊரை விட்டு அயலூரிலும், சூரியோதயத்தை விட்டுவிட்டு அஸ்தமன திசையிலும், ஞானத்தை விட்டுவிட்டு அஞ்ஞானத்திலும் உழன்று கொண்டிருக்கிறாய்' என்று தெய்வம் மகிழ்ச்சியுடன் கூறியது. 

கிராமங்கள் இயற்கையும் அழகும் நிரம்பி வழியும் இடம். ஆறுகளும் மலைகளும் பசுமையை அள்ளிக் கொடுப்பவை. ஆனால் அங்கே வாழ்வதற்கு பெரிய வருமானம் இல்லை என்றாலும், கொஞ்சமாவது தேவை. தன் கிராமத்தில் ராணி போல இருந்த சர்வஜெயா, வெளி உலகை கண்டு மலைத்துப் போகிறாள். நிச்சிந்தாபுரம் அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்க காத்திருக்கிறது.
  
தமிழில் - ஆர். ஷண்முக சுந்தரம்

Friday, October 13, 2023

தமிழகக் கோபுரக்கலை மரபு - குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் கோபுரக்கலை வரலாற்றை பெருங் கோவில்களான தில்லை, மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற கோவில்களின் கோபுரங்களை ஆராய்ந்து முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன் இந்நூலில் விளக்குகிறார். 

கோபுரங்கள் பற்றி விளக்கும் இந்நூல் சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. அவையாவன;  கோபுரத்தின் தோற்றம், கட்டடக் கலை வளர்ந்த திறம், இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள கலைகள் மற்றும் கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு ஆகும். 



கோபுரம் என்ற சொல்லுக்கு பொருளைச் சொல்லி, கோவிலின் நுழைவு வாயில் கோபுரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை விளக்குகிறது இப்புத்தகம். அனலின் வடிவமாகவே கோபுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆண்டுகள் பல கடந்தும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோபுரம் நிலைத்து நிற்க, சரியான இடம் தேர்வு, கற்கள் தேர்வு, அவற்றை அடுக்கிய முறை என பல காரணங்களைச் சொல்கிறார் ஆசிரியர். 

கோபுரத்தின் பகுதிகளான நிலைக்கால் முதல் சிகரம் வரை ஒவ்வொன்றுக்கும் உரிய மரபு பெயர்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று நிலைகளில் ஆரம்பித்து பின்னர் ஏழு, ஒன்பது என கட்டப்பட்ட கோபுரங்கள், கட்டிய மன்னர்கள், திருப்பணி செய்தவர்கள் என ஒவ்வொன்றையும் ஆய்ந்து மிக விரிவாக பேசுகிறது இந்நூல். மேலும் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆய்வுக்கு உதவிய புத்தகங்கள், கல்வெட்டுகள், தகவல்கள் இணைப்பாக உள்ளது.

சுதையால் செய்யப்பட்ட சிற்பங்கள் அடங்கிய கோபுரங்களில் சில வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறவேண்டும். சுதைச்  சிற்பங்களில் விரிசல் இருப்பின் சீர்செய்து வண்ணம் தீட்ட வேண்டும். மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்யவேண்டிய இப்பணியை சிலர் திருப்பணி என்கிற பெயரால் அழிக்கவே முயல்கின்றனர். திருவில்லிப்புத்தூர் கோபுரம் திருப்பணிக்கு பின்னர் அதன் அழகை இழந்ததை நினைத்து வருந்தும் ஆசிரியர், மன்னார்குடி கோபுரம் திருப்பணி எந்த பாதிப்பும் இல்லாமல், பழைய பொலிவுடன் சிறப்பாக நடந்ததை வியக்கிறார். 

மணல் வீச்சு என்ற சுத்தப்படுத்தும் முறையில் சில கோவில்களின் கோபுரங்களில் இருந்த பழமையான ஓவியங்கள் சில மணித்துளிகளில் அழிந்து போனதைக் குறிப்பிடுகிறார். சில கோபுரங்களில் செங்கல் மட்டும் கொண்டு சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செங்கல் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட சில கோபுரங்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், அந்தக் கலையை அறிந்தவர்கள் இன்று யாருமே இல்லை என்கிறது.

சிதைந்து போன கோவில்களில் இருந்து கற்களை எடுத்து எடுக்கப்பட்ட கோபுரங்கள் பற்றியும், திருப்பணிகள் செய்த நபர்கள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. மொட்டை கோபுரமாக இருந்து பின்னர் கட்டப்பட்ட கோபுரங்களையும் இந்நூலில் காணலாம். 

கோபுரங்கள், அவை எடுக்கப்பட்ட காலம், மன்னர்கள்  மற்றும் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு களஞ்சியமாக விளங்கும். 


வெளியீடு:
அகரம்
எண் .1, நிர்மலா நகர் 
தஞ்சாவூர் - 613 007