Friday, April 3, 2020

மய்யழிக் கரையோரம் - எம்.முகுந்தன்

சுதந்திரத்துக்கு பாடுபட்டு தன் வாழ்க்கையை மறந்த ஒரு வீரனின் கதை. பிரெஞ்சு தேசத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருபகுதி மய்யழி. கேரளாவின் மய்யழி ஆற்றங்கரையில் அமைந்தது அவ்வூர். பிரெஞ்சு தேசத்தினர் வந்து அங்கு தங்கியிருந்து ஆண்ட கதையை சொல்லத்தொடங்கும் நாவல், நாடு சுதந்திரம் பெறுவதில் முடிகிறது. வெள்ளைக்காரர்கள் என்றால் நல்லவர்கள் என்று நம்பும் ஊர் மக்கள், அவர்கள் அடித்து பிடுங்கினாலும் தலை வணங்கும் மக்கள், சாராயப் போதையில் மிதக்கும் மக்கள் என நிரம்பிய ஊர் மய்யழி. உண்மையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே தங்கியிருக்கும் வெள்ளைக்காரர்கள் மய்யழியையே சொந்த ஊராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மய்யழி மக்களுடன் நண்பர்களாக பழகி, ஒருவருக்கொருவர் உறவினர் போல மாறிவிடுகிறார்கள். 

மய்யழியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரியும் தந்தைக்கு மகன் தாசன். தாசன் படித்து நல்ல வேலைக்குச் சென்றால்தான் குடும்பம் நிமிரமுடியும் என்ற நிலை. நன்றாக படிப்பதால் அவன் பள்ளி ஆசிரியர் அவனுக்கு நிறைய சொல்லித்தருகிறார். ஆசிரியருக்கு இந்த மய்யழி சீக்கிரம் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலை காரணம் அவர் இயற்கை எய்த நேர்கிறது. தனது மாணவன் யாரேனும் இந்த விடுதலை வேள்வியை தொடர்ந்து நடத்துவான் என்று சொல்லிக்கொண்டே அவர் கண்மூடுகிறார். அவர் சொன்னது போலவே தாசன் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்கிறான்.




அவனுக்கும் ஆசிரியரின் அக்கா மகளான சந்திரிகாவுக்கும் காதல். சின்ன வயதில் இருந்தே இருவரும் பழக்கம். தாசன் படித்து முடித்த பின்னர் மய்யழியின் ஊர் மூப்பன் துரை அவனை அழைத்து தனது அரசில் பெரிய வேலையோ அல்லது மேற்படிப்பு படிக்க பிரஞ்சு செல்ல வேண்டினாலும் உதவக் காத்திருப்பதாகச் சொல்கிறார். அவன் அதை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு புரட்சியாளர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இவர்கள் செய்யும் புரட்சியால் தாசனின் தந்தை சிறை செல்ல நேர்கிறது. தாசன் மய்யழியை விட்டு வெளியேறி ஒதுக்குபுறமாக தங்குகிறான். 

சந்திரிகாவுடன் உள்ள பழக்கம் அப்படியே தொடர்கிறது. தாசனின் தந்தை சிறையிலிருந்து திரும்பிய பின்னர், தாசன் சிறை செல்ல நேர்கிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று, மய்யழி சுதந்திரம் அடைகிறது. வெள்ளைக்கார மக்கள் அவர்கள் நாட்டுக்கு செல்கிறார்கள். தாசன் சிறையில் இருந்து விடுதலை பெறுகிறான். அவனின் நண்பர்கள் இப்பொழுது இருக்கும் அரசில், ஏதாவது வேலையில் சேரச் சொல்ல அவன் மறுத்து விடுகிறான். தந்தையின் கோபத்தால் அவனின் வீட்டுக்கும் தாசன் செல்வதில்லை. தாசனுக்கு ஏதாவது வேலை இருந்தால் சந்திரிகாவை கட்டி வைப்போம், இப்படி எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒருவனுக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பதென அவளின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்கிறார். இறுதியில் அது அவளின் இறப்பில் முடிகிறது. 

தாசனின் பாட்டியாக வரும் குறம்பியம்மா, நாவல் முழுதும் வருகிறார். ஊரின் மிக வயது முதிர்ந்த பாட்டி. வெள்ளைக்காரர்கள் மேல் மிகவும் மதிப்பும் வைத்திருக்கும் குறம்பி அவர்களுடன் நன்றாகவே பழகுகிறார். தன் பேரன் தாசன் கோட் சூட் அணிந்து வருவான் என்றே காத்துக்கொண்டிருக்கிறார். சுதந்திரம் பெற்றால், வெள்ளைக்காரர்கள் அவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள் என்பதை பாட்டியால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் திரும்பவும் எப்பொழுது வருவார்கள் என்று கேட்டு நச்சரிக்கிறார். குறம்பியிடம் எப்பொழுதும் மூக்குப் பொடி வாங்கிப் போடும் வெள்ளைக்காரத் துரை கூட உண்டு. எல்லா வெள்ளையின மக்களும் தங்கள் அதிகாரத்தை காட்டாமல், சிலர் மக்களுடன் இயல்பாக பழகுகிறார்கள். 


குறம்பி பாட்டி தாசனின் சின்ன வயதில் நிறையக் கதைகள் சொல்கிறார். அதில் ஒரு கதை, கடற்கரையில் இருந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் ஒரு மலை போன்ற வெள்ளியங்கல்லில் தான் நாம் எல்லாம் தும்பிகளாகத் திரிந்தோம். பின்னர் அம்மாவின் வயிற்றில் பிறந்து வளர்ந்து, வயது மூத்து இறந்தாலும் அங்கே தான் செல்வோம் என்று கதை சொல்ல, தாசனுக்கு அது மனதில் பதிந்து விடுகிறது. அங்கே சந்திரிகாவும் தும்பியாக பறந்து கொண்டிருப்பாள் என்று நம்புகிறான். இப்பொழுது மய்யழியில் அவனைத் தவிர அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறான் தாசன். கூடிய சீக்கிரமே அவனும் அங்கே வெள்ளியங்கல்லின் மீது தும்பியாக பறந்து கொண்டிருந்தான். 

நாவலில் சில உரையாடல்களும், முக்கியமான வார்த்தைகளும் பிரஞ்சு மொழியிலேயே இருக்கிறது. இவ்வாறு இருப்பது நாவலுக்கு ஒரு உயிரோட்டத்தை தருகிறது. வலிந்து திணித்த வார்த்தைகளும், உரையாடல்களும் இல்லாமல் கதை தன் போக்கில் நகர்கிறது. கதை மாந்தர்கள் அனைவரின் சித்தரிப்பும் மய்யழி ஊரை நம் முன்னே வந்து காட்டுகிறது. மலையாள மூலத்தில் இருந்து இளையபாரதி அவர்கள் தமிழில் மிகச் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 



Wednesday, March 25, 2020

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்

ஒரே ஒருவரின் மாத சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, ஒரு தொழில் ஆரம்பித்து பின்னர் செல்வச் செழிப்பில் வாழும்போது அந்த மகிழ்ச்சி கிடைக்காத ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் அவ்வளவு எளிதாக இந்த சிறு நாவலைச் சொல்லமுடியாது. கதையில் வரும் கதை மாந்தர்களும் சாதாரணமாக சித்தரிக்கப்படவில்லை. 

அப்பா, அம்மா, மகன், மகள் மற்றும் சித்தப்பா என சிறிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவரான அப்பாவின் வருமானத்தை நம்பியே எல்லோரும் இருக்கிறார்கள். ஒருநாள் அப்பாவின் வேலை இல்லாமல் போக, சித்தப்பா தொழில் தொடங்கலாம் என்கிறார். அப்பாவின் பணியிலிருந்து வந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒரு மசாலா கம்பனி ஆரம்பிக்கிறார்கள். அப்பாவும், சித்தப்பாவும் தொழிலில் பங்குதாரர்கள். 




தொழில் நன்றாக செல்ல பணவரவும் வருகிறது. புது வீடு, பொருட்கள் என வேண்டியதை வாங்குகிறார்கள். சித்தப்பா மட்டுமே தொழிலை கவனித்து கொள்கிறார். கதையின் நாயகனான மகனும், பெண் பிள்ளையான மைதிலியும் இப்பொழுது பெரிய பிள்ளைகள். சித்தப்பா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி குடும்பத்தினர் யாரும் அவரைத் தொந்தரவும் செய்வதில்லை. அவருக்கென தனி குடும்பம் அமைந்துவிட்டால் பின்னர் அவர் நம்மைக் கவனிக்க மாட்டார் என்கிற பயம் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. 

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்தல் எனச் சொன்னாலும், சில சமயங்களில் நியதிகளுக்கு உட்பட்டு கட்டாயமாக குடும்பத்தில் வாழ நேரிடலாம். வேறு வழியில்லாமல் இங்கே, இப்படி இருக்கிறோம் நினைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ நேரிடலாம். நாயகனின் அக்காவான மைதிலி, திருமணம் செய்து, கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறாள். தன்னைத் தலைமேல் வைத்துத் தாங்க தனது குடும்பம் இருக்கிறது என மைதிலி நினைக்கிறாள். அவ்வாறே அவளை நடத்துகிறார்கள். 

நாயகனுக்கு தனியாக எந்த வேலையும் கம்பெனியில் இல்லை. மாதமானால் ஒரு தொகை அவனின் வங்கி கணக்குக்கு வந்துவிடும். மசாலா கம்பெனிக்கு அவன் செல்லாமலே சம்பளம் அனுப்பப்படுகிறது. சித்தப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார். அனிதா என்னும் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். முதலில் அனிதாவுக்கு ஒன்றும் தெரியாமலிருக்க, போகப்போக அந்த வீட்டின் நிலைமை புரிகிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து வந்து குடும்பம் நடத்தினால்தான் அது நேர்மை, கவுரவம். இப்படி இன்னொருவர் தயவில் என்னால் வாழ முடியாது என்கிறாள். அவனும் சரி, நான் கம்பனிக்குப் போகிறேன் என்று சொல்ல நினைக்கிறான். ஆனால், அங்கே தனக்கு என்ன வேலை இருக்கும், சரி இது நம்ம கம்பெனி தானே, நமக்கும் பங்கு உண்டே என்றெல்லாம் சொல்லிப்பார்க்கிறான். ஆனால் அனிதா சமாதானம் ஆவதில்லை. 

சித்தப்பா திருமணம் செய்யாமல் இருப்பது, அனிதாவுக்கு வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களும் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பதை கேள்வி கேட்கிறாள். சித்தப்பாவைத் தேடி ஒருநாள் ஒரு பெண் வீட்டுக்கு வருகிறாள். அவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள். ஆனால் யாரும் அவளை உள்ளே விடுவதில்லை. 'வெங்கா.. நான் டுவ்வி வந்திருக்கேன்' என்று அவள் கூப்பிடும்போது கூட அவர் வெளியே வருவதில்லை.  அவருக்கு நன்கு பிடித்த மசூர் பருப்பு குழம்பை மட்டும் அவரிடம் தந்துவிடுங்கள் எனக் கெஞ்ச, அம்மா அதை வாங்கி வெளியே வீசிவிடுகிறாள். அந்தப்பெண் அழுதுகொண்டே போய்விடுகிறாள். அனிதாவுக்கு இது எதுவும் பிடிப்பதில்லை.  இரண்டு வாரம் கழித்து திரும்புவதாக சொல்லிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் அனிதா. 

கதையின் நாயகன் அடிக்கடி செல்வது ஒரு காப்பி அருந்தும் இடத்திற்கு. ஒரு நாளின் பெரும்பான்மையான இடங்களை அங்கேயே கழிக்கிறான். அங்கே வின்செண்ட் என்னும் சர்வர் பணிபுரிகிறார். நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைக்கு ஏதேனும் ஒருசில வார்த்தைகளில் அவன் தீர்வு தருகிறான். அவன் முழுதையும் சொல்லாமலே வின்சென்ட் எப்படி தீர்வு தருகிறான் என்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறான். 

கதைக்கு முடிவு என ஒன்றும் இல்லை. ஆனால், அனிதா ஊருக்கு சென்றிருக்கும்பொழுது, அப்பா, அம்மா, மைதிலி, சித்தப்பா மற்றும் அவன் ஆகியோர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு ஒருவகையில் எப்படி கொலை செய்வது, அதை எப்படி மறைப்பது, ஊரில் உள்ள ரவுடிகள் இதை எப்படிச் செய்கிறார்கள் எனப் பேசுகிறார்கள். அப்பா, இதை பற்றி பேச வேண்டாம் என எழுந்து செல்கிறார். 

அனிதா இரண்டு நாட்கள் முன்னரே வந்திருக்க வேண்டும். ஒரு தகவலும் அவளைப்பற்றி இல்லை. அவன் காபி கவுஸில் உட்கார்ந்து யோசிக்கிறான், அவள் ஏன் இன்னும் வந்து சேரவில்லையென்று. 

ஓரிடத்தில் சர்வர் வின்சென்ட் சொல்வான் 'ஒரு கதைக்கு பல பரிமாணம் இருக்கும்' என்பான். அதுபோல இந்தக் கதைக்கும் பல கோணங்கள். 

இந்த நாவலின் தலைப்பு, வித்தியாசமான ஒன்று. அதற்கான காரணமும் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. கன்னடத்தில்  இருந்து கே.நல்லதம்பி அவர்கள் இந்நூலை தமிழில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.