'இப்படியும் ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து துயரம் நேருமா?' என்று அஞ்சலை நாவலைப் படிக்கும்போது நமக்குத் தோன்றலாம். ஆனால், ஒரு கிராமத்தில், பொருளாதாரப் பின்புலம் இல்லாத குடும்பங்களில் நடக்க கூடியதுதான் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது அஞ்சலை போன்ற பெண்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அஞ்சலையைப் போன்றவர்கள் விழுந்து எழுந்து கண்ணீர்விட்டு ஈரமேறிய மண்ணைக் கொண்டது நம் கிராமங்கள்.
கார்குடல் கிராமத்தில், இரண்டு அக்காக்கள் மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவள் அஞ்சலை. மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அடுத்தது அஞ்சலை தான். காடு தோட்டத்துக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் அஞ்சலைக்கு, கல்யாணம் முடித்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறாள் அம்மா பாக்கியம். மூத்த அக்காள் கல்யாணி தன் கொழுந்தனாருக்கு அஞ்சலையைக் கேட்கிறாள். அம்மா மறுத்துவிடுகிறாள்.
இரண்டாவது அக்காவின் கணவன் மணக்கொல்லை என்னும் ஊரிலிருந்து ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவருகிறான். அஞ்சலையை இரண்டாம் தாரமாக கேட்டும் கொடுக்காத காரணத்தால் கோபத்திலிருக்கும் அக்கா கணவன், மாப்பிள்ளையை மாற்றிக் காட்டிவிடுகிறான். எல்லோரும் கல்யாணத்துக்கு சரி என்று சொல்கிறார்கள். தாலி கட்டிய பின்னர் தான் அஞ்சலைக்கு தான் ஏமாந்தது தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறாள். எப்படியோ நாட்களை நகர்த்துகிறாள்.
மணக்கொல்லையில் சண்டை போட்டுவிட்டு, அம்மா வீட்டுக்குப் போனவளை நடுவழியில் மூத்த அக்கா கூட்டிவந்து தன் கொழுந்தனாருக்கு கட்டிவைக்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. வெண்ணிலா என்று பெயர் வைக்கிறார்கள். பிறகு அங்கேயும் பிரச்சினை ஏற்பட்டு, அம்மா ஊரான கார்குடலுக்கே வருகிறாள். திரும்பவும் அங்கேயும் இருக்க முடியாமல் முதல் கணவன் கணேசன் வீட்டுக்கே திரும்ப வருகிறாள். ஊர் அவளை ஒரு மாதிரியாக பேசுகிறது. அங்கேயும் அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை வெண்ணிலாவை கார்குடலில் அம்மா பாக்கியம் வளர்க்கிறாள்.
எப்படியோ அஞ்சலையின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே ஓடிப்போனவள் என்று அவளைப் பேசுகிறார்கள்.
ஒருவிதத்தில் பார்த்தால், அஞ்சலை தைரியமானவளாகத் தெரிகிறாள். ஆனால், இன்னொரு பக்கம் எடுப்பார் கைப்பிள்ளையாக மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிறாள். மூத்த அக்கா சொல்வதை கேட்காமல், நான் அம்மாவிடம் போய்க்கிறேன் என்று அவளால் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால், அக்காவின் கொழுந்தனார் ஆறுமுகம் அவளுக்குப் பிடித்த மாதிரி இருக்கிறான். ஒரு பெண்ணுக்கு உள்ள ஆசையை அஞ்சலை மறைப்பதில்லை. சில சமயங்களில், அதை பேச்சிலும் வெளிப்படுத்தி விடுகிறாள்.
வெண்ணிலா பிறந்த பின்னர், அம்மா வீட்டில் இருந்தவள் திரும்பவும் முதல் கணவன் வீட்டுக்கு போக முடிவெடுக்கிறாள். அப்போதும் அவள் அம்மாவிடமோ, சொந்த ஊரில் உள்ள தன் அக்காவிடமோ எந்த கருத்தும் கேட்பதில்லை. உண்மையில் பெண்கள் ஒரு செயலைச் செய்யும் முன்னர் பலவகையில் யோசிப்பார்கள். ஆனால், அஞ்சலை செய்த பின்னரே யோசிக்க ஆரம்பிக்கிறாள். அதுவே அவளுக்கு பிரச்சினையாகி விடுகிறது.
இறுதியில், சாகப்போன அஞ்சலையை முதல் பிள்ளையான வெண்ணிலா காப்பாற்றி கூட்டிவருகிறாள். இதற்கு முன்னரும் தற்கொலைக்கு முயன்றவள்தான், ஆனால் அப்பொழுது அம்மா காப்பாற்றிவிட்டாள். இப்பொழுது வெண்ணிலா. 'இத்தன பட்டாச்சு. இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்காம ஏஞ் சாகப்போற நீனு' என்று திட்டும் வெண்ணிலாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறாள் அஞ்சலை. நாவல் இங்கே முடிகிறது.
அடுத்த தலைமுறையான பிள்ளைகளுடன் அஞ்சலை கொஞ்சம் சுகப்பட்டிருப்பாள் என்றே தோன்றுகிறது. எத்தனை பட்டாலும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டிருக்கமாட்டாள் அஞ்சலை.
நாவலில் வரும் கிராமங்களான, கார்குடல், மணக்கொல்லை மற்றும் தொளார் போன்ற ஊர்கள், நாம் அங்கே இருந்ததுபோலவே நாவலில் சித்தரிக்கிறார் கண்மணி குணசேகரன். பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால் கூட எட்டிப்பார்க்காது இருக்கும் நகரங்களில், ஒரு பெண் ஒருவனைச் சும்மா பார்த்தால் கூட கதைகட்டி விடும் ஆட்கள் நிறைந்த கிராமங்களை நம் முன்னால் கொண்டுவருகிறார் ஆசிரியர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், எங்கள் சொந்த ஊரில் இருந்த நிலம், வீட்டை விட்டுவிட்டு இங்கே நகரத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பெரியவரைப் பார்க்க நேர்ந்தது. 'அங்கே எல்லாம் இருக்க முடியாது சாமி. கண்டதையும் பேசுறாங்க. வெளியிலே போக வர.. ஏன் எதுக்குன்னு ஊர்ல இருக்கற ஒவ்வொருத்திகிட்டயும் சொல்லனும். எவளாவது ஒருத்திகிட்ட மாத்தி சொல்லிட்டா போதும், ஊரே கேள்விக்கு வந்து நிக்கும். இங்கே பாரு, என்ன ஒரு சுதந்திரம். எவனும் எதுவும் கேட்க முடியாது. கொஞ்சம் நிம்மதி. ஆனா, ஊரவிட்டு வந்தது வருத்தம் தான். என்ன பண்ண, நிம்மதியா தூங்கி எழுந்திருக்கணும். அது எங்க இருந்தா என்ன? ' என்றார். உண்மையில், கிராமங்கள் நாம் நினைப்பது போல சொர்க்கம் அல்ல.
தேடிப்பார்த்தால் இப்பொழுதும் சில அஞ்சலைகள் எங்காவது நம் கிராமங்களில் அழுதுகொண்டிருக்கலாம்.