Friday, May 9, 2014

வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி



போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது.







கடந்த வருடங்களை விடவும்  இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம் விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள் நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா பிடிக்குமா எனத் தெரியவில்லை. 



சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும் பூக்கள் பூக்கிறது.  




Tuesday, March 25, 2014

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை

பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள்.

அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி.



ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது.





குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்த்துக் கொண்டே இருந்தோம்.



ஒரு நாள் மேல் சீப்பில் ஒரே ஒரு பழம் மட்டும் ரோஸ்  நிறத்துக்கு மாறி இருந்தது. அன்றே வெட்டி வைக்க, இரண்டு மூன்று நாட்களில் அனைத்து சீப்புகளும் பழுத்து விட்டது. முதல் சீப்பில் பதினேழும், மற்ற சீப்புகளில் 15 முதல் 16 வரையிலும் பழங்கள் இருந்தன. எந்தச்  செயற்கை உரமும் போடாமல் விளைந்த செவ்வாழையின் ருசி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அடுத்த பக்க கன்று வளர்ந்து வருகிறது, அடுத்த வருடமும் செவ்வாழை உண்டு. :)