"சிறு ரத்தம் குடிக்கும் கொசுவை கொன்று
விட முடிகிறது, பெரு ரத்தம் குடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை." -
என்று ஒருமுறை ட்விட்டரில் எழுதினேன். ஊழல் அற்ற ஆட்சியும், நேர்மையும்
கிலோ என்ன விலை என்று கேட்ட கட்சிகளையே பார்த்திருந்த நமக்கு, இப்படி
இரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சி கொல்கிறார்களே என்ற கோபம் இருந்தது.
இவ்வளவு ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'ஆம் ஆத்மி' கட்சி.
சரி, இவ்வளவு
வெற்றி பெற்ற இவர்கள், வருங்காலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுப்பார்களா என்று
நாம் நினைக்கலாம். அதைப் பின்னர் பார்க்கலாம்.
ஆனால், இந்தத் தேர்தல், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, மகுடிகளுக்கு மக்கள் எப்பொழுதும் மயங்க மாட்டார்கள் என இன்னுமொரு முறை உரக்க பறை சாற்றியிருக்கிறது.
அரசியல்வாதிகளே, அரசியல் சாக்கடையைத் தூர்வார நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் வாக்குகள் என்றும் உங்களுக்கே.