Thursday, January 10, 2013

கற்கள்

இவன் வயிற்றில் இருந்தபோது
ஒருநாள் 
நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல்
சடசடவென கல்மாரி விழுந்தது... 

நடந்து பழகியவன்
ஒருநாள் கல் தடுக்கி
விழுந்த காயத்திற்கு
நான்தான் மருந்து போட்டு விட்டேன்...

கல்லைத் தூக்கி வீசியதில்
பக்கத்துக்கு வீட்டு பையனின்
மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில்
பையனின் அம்மாவுடன்
ஜென்மப் பகை வந்தது...

தள்ளாத வயதில்
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டுப் போனவன்
அவன்

அவனே
ஒரு பாறாங் கல்லோ
என்று இப்பொழுது நினைக்கிறேன்....




Tuesday, January 8, 2013

குறும்படம்: தணல்

ஒரு சிலிண்டர் வெடிக்க நிறைய காரணம் இருக்கலாம். இப்படிதான் வெடித்தது என்று வெடித்த பின்னர் நிரூபிக்கலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு என்பது முடிந்து போன ஒன்று.

சிலிண்டர் வெடிப்புக்கே நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது, அணு உலைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. என்னதான் அது பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தாலும், இந்தக் குறும்படத்தில் சொல்வது போல நிகழக் கூடும். மனிதர்களை இழந்த பின்னர் நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்போம் ஒரு காலத்தில், அது யாருக்காக?.

இந்தக் குறும்படத்தில் எங்கள்  நண்பன் பாலா ஒரு பாத்திரமாக நடித்துள்ளான். வாழ்த்துக்கள் பாலா.

'தணல்' குழுவுக்கு வாழ்த்துக்கள்.