Thursday, December 20, 2012

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.?

மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம்.

ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைப் பற்றி ஏற்கனவே வார இதழ்களிலும், இணையத்திலும் படித்திருந்த போதிலும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக நாப்கின் தயாரிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் என்றாலும், முக்கியமாக ஆண்கள் பார்க்க வேண்டும்.

முடிந்த அளவு இந்த குறும்படத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Wednesday, December 19, 2012

600 ரூபாய்

உங்களுக்குத் தெரியாது..
பத்துக்கு பத்துக்கு ஒரு அறை என்றால் கூட, வாடகை ஆயிரத்துக்கு மேல்..

உங்களுக்குத் தெரியாது..
என்னதான் அடித்து பிடித்து செலவு செய்தாலும்
மளிகைக்  கடையில் ஐநூறு  ரூபாய் பாக்கி நிற்கிறது
எல்லா மாதத்திலும்

உங்களுக்குத் தெரியாது..
விலை குறைவென்று பண்டிகைக்கு
வாங்கிய துணிகள்
சாயம் போயும், கிழிந்தும் போகின்றன

உங்களுக்குத் தெரியாது..
காய்ச்சல் சளி என்றால் கூட சமாளித்து விடலாம்
மேலதிக நோய் என்றால் மருத்துவர் கட்டணம் நூறுக்கு குறைவில்லை..

உங்களுக்குத் தெரியாது..
பேருந்து, ரயில் போன்றவைகளின்  கட்டணம்
நம் நாட்டில் இலவசம் இல்லையே..
அது போலவே கல்வியும்..

இதையெல்லாம் விட
நீங்கள் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏத்துகிறீர்களோ
அப்போதெல்லாம் காய்கறிகள் உட்பட எல்லாம் விலை ஏறுகின்றன

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா
ஒரு சவத்தை அடக்கம் செய்யக் கூட
குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாய் தேவை..

இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..

சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....

வெகு விரைவில்
குறைந்த செலவில் 
நாம் வல்லரசாகி விடலாம்....