Friday, May 4, 2012

சினிமா: தி பர்சுட் ஆப் ஹேப்பிநெஸ் (The Pursuit of Happyness)

யாருக்குமே மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. வேலை முதற்கொண்டு முட்டி மோதி தான் மேலே வர வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் நாம் தேடியதை விட, வேண்டுவதை விட அதிகமாக கிடைத்து விடலாம். அது அதிர்ஷ்டம் தான். பெரும்பாலும் நாம் தேடுவது கிடைப்பதில்லை. ஆனால் அதை அடையும் வரை நாம் விடுவதில்லை. தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி என்று சொல்வார்கள். மேலே முளைத்து வரத் துடிக்கும் விதைகளைப் போலவே தானே மனிதர்களும்.

இந்தப் படத்தில்தான் வில் ஸ்மித் என்னும் மாபெரும் கலைஞனின் நடிப்பைப் பார்த்தேன். அழும் இடத்தில் நம்மையும் அழ வைக்கும் நடிகன். தனது தோல்விகளை முகத்தில் தேக்கி வைத்துக்கொண்டு, வெற்றிக்காக தவமிருக்கும் மனிதர்களை திரையில் கொண்டுவந்திருப்பார் ஸ்மித். ஸ்மித்தின் மகன் 'ஜேடன் ஸ்மித்' தான் படத்திலும் வில் ஸ்மித்தின் மகன். இதே பையன்தான் 'The Karate kid' படத்திலும் கலக்கியிருப்பான்

மகிழ்ச்சி என்பது எல்லோருக்கும் ஏன் கிடைப்பதில்லை?.  'Happiness'  என்பதுதான் சரியான ஸ்பெல்லிங். ஆனால், 'Happyness' என்று ஒரு சுவற்றில் எழுதியிருக்க கதையின் நாயகன் கிரிஷ் (வில் ஸ்மித்), 'Y' இல்லை  'i' என்று சொல்லும்போது படம் ஆரம்பிக்கிறது. நாயகன் கிரிஷ், நாயகி லிண்டா, அவர்களின் குழந்தை கிறிஸ்டோபர்.

கிரிஷ், டாக்டர்களுக்கு பயன்படும் ஒரு சின்ன ஸ்கேன் மெசினை விற்றுக்கொண்டிருக்கிறான். கொஞ்ச நாட்களாக எந்த மெசினும் விற்பதில்லை. அவன் அலைந்து கொண்டே இருக்கிறான். ஆனால் எதுவும் விற்பதில்லை. லிண்டா தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறாள். அவள் இரண்டு  ஷிப்ட் வேலை செய்தும், பணம் போதுமானதாக இல்லை. இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வருகிறது. லிண்டா நியூ யார்க் செல்வதாகவும், பையனை அங்கே கூட்டிச் செல்வதாகவும் கூறுகிறாள். கிரிஷ் பையனை பிரிய மறுக்கிறான். அப்பாவுக்கும், பையனுக்கும் இருக்கும் பாசத்தை லிண்டா புரிந்து கொண்டு, அவள் மட்டும் பிரிந்து சென்று விடுகிறாள்.


கிரிஷ் ஒரு ஸ்டாக் புரோக்கர் கம்பெனியில் இண்டர்ன்சிப் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறான். சம்பளம் இல்லாமல் இரண்டு மாதங்கள் பணி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, தேர்வில் தேறினால் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இதற்கிடையில் கம்பெனி வேலைக்கும் சென்று விட்டு, மீதி நேரம் ஸ்கேன் மெசினை விற்கவும் செல்கிறான்.

வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்குகிறார்கள். விடுதிப் பணமும் கட்டாததால் அங்கிருந்தும் வெளியேற்றப் படுகிறார்கள். கையில் பையனை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கிறான் கிரிஷ். ஒருநாள் ரயில் நிலைய கழிப்பறையில் தங்குகிறார்கள். அதற்குப் பின்னர் வீடில்லாதவர்களுக்கு என இயங்கும் ஓரிடத்தில் போய்த் தங்குகிறார்கள். தினமும் தெருவாசிகள், பிச்சைக்காரகள் என அங்கே இடம் பிடிக்க நெருக்கியடிக்கிறது கூட்டம். முன்னால் வருவபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உள்ளே விட்டுவிடுவார்கள். இடம் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வதென்ற பதை பதைப்புடன் வரிசையில் நின்று கொண்டிருப்பான் கிரிஷ் குழந்தையோடு.



இண்டர்ன்சிப் முடியும் நாள் வருகிறது. தேர்வை எழுதுகிறான். அடுத்த நாள் கண்களில் ஒரு தாகத்துடன் இருக்கிறான் கிரிஷ். அவனுடைய முறை வரும்போது, உயர் அதிகாரிகள் இருக்கும் அறைக்கு அவனை கூப்பிடுகிறார்கள். அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்கள். அப்பொழுது ஸ்மித்தின் கண்களில் இருந்து வரும் கண்ணீர், இத்தனை நாட்களாக அவன் பட்ட துன்பங்களை கழுவிக் கொண்டு ஓடுகிறது. வெளியே வரும் அவன், கூட்டமாக போய்க் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியாக நடக்கிறான்.

யார் கண்டது, அந்தக் கூட்டத்தில் இன்னும் கிரிஷ் போன்ற எத்தனை மனிதர்கள் இருப்பார்களோ?.


                                                            **********************

ஒரு வருடமாக, இந்தப் படத்தைப் பார்த்த நாள் முதற்கொண்டு எழுதலாம் என்றுதான் நினைப்பேன். ஆனால் முடியவில்லை. இவ்வளவு உணர்வுள்ள படமாக ஸ்மித் நடித்ததை சின்ன வரிகளில் எப்படி அடக்குவது என்று தெரியவில்லை. எப்படியோ இன்று எழுதிவிட்டேன். நான் இங்கே சொன்னதை விட, சொல்லாமல் விட்டது அதிகம். ஒவ்வொரு காட்சிகளும் அப்படி இருக்கும். வாழ்க்கையே போராட்டம் என்று சொன்னாலும், நமக்கான வெற்றி கண்டிப்பாக கிடைக்காமல் போகாது.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







Wednesday, May 2, 2012

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அரசமரத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் பிள்ளையாரும் அம்மனும் குடியிருந்தார்கள். ஊருக்குள் வருவோரை வரவேற்கும் விதமாக ஊரின் தொடக்கத்திலேயே இருந்தது. காக்கைகள் குருவிகள் என எப்போதும் நிறைந்து இருக்கும். சிறு சிறு பழங்களாக உதிர்ந்து கீழே கிடக்கும். இவ்வளவு பெரிய ஆலமரத்தின் விதை இவ்வளவு சிறிதா என நினைத்து வியந்த காலங்கள் அவை. ஒருநாள், ஊரைக் கூட்டி மரத்தை வெட்டுவதென்று தீர்மானித்தார்கள். சில நாட்களிலேயே மரம் வெட்டப்பட்டு விட்டது. மரம் வெட்டியதற்கு அவர்கள் சொன்ன காரணம், மரத்தின் வேர் பக்கத்திலுள்ள வீடுகளின் சுவர்களை தாக்குகின்றனவாம். இது நடந்து பதினைத்து வருடங்களுக்கு மேலிருக்கும். இப்பொழுது அதே இடத்தில், ஒரு அரசமரக் கன்றையும் ஒரு வேப்ப மரக் கன்றையும் நட்டி தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். ஒருவேளை அவ்வளவு பெரிய மரத்தை வெட்டியதற்கு, இப்பொழுது வளர்க்கிறார்களோ என்னமோ.

ஒவ்வொரு முறை நெடுஞ்சாலை அகலம் செய்யும்போதெல்லாம் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த அத்தனை புளிய மரங்களும் இன்று வெட்டப்பட்டு விட்டன. தினமும் அதன் நிழலில் நடந்த காலம் மலையேறிவிட்டது. தினமும் ஒவ்வொரு இடத்திலும் மரங்கள் அடியோடு சாய்ந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு புளியமரத்தின் கதை' நாவலிலும் ஒரு புளியமரமே சுத்தி சுத்தி வருகிறது. ஊரின் முன்னால் இருப்பதால் அந்தப் புளியமரம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புளியமரம் உள்ள இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்திருக்கிறது. அந்தக் குளம் நாறுவதைக் கண்ட மன்னர், அந்தக் குளத்தை மூடச் சொன்னதாக 'ஆசான்' என்பவர் கதை சொல்கிறார் நாவலில். ஒரு முறை அந்த மரம் வெட்டுப்படுவதைத் தான் தடுத்ததாகவும் சொல்கிறார். அந்த மரத்தைச் சுற்றி கடைகள் நிரம்பி, இப்பொழுது அது கடைவீதி போல் ஆகிவிட்டது.

அந்தப் புளியமரத்தின் அடியில் தாமு என்பவன் கடை வைத்திருக்கிறான். சற்று தள்ளி கடை வைத்துள்ள காதருக்கும், தாமுவுக்கும் சண்டை வந்துவிடுகிறது. தாமுவை ஒழிக்க புளியமரத்தை  வெட்டுவதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வருகிறான் காதர். நகரசபை தேர்தலில் தாமுவும் காதரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் பகை புகைந்து கொண்டே இருக்கிறது.

(புளிய மரங்கள் நிறைந்த கோவை மேட்டுப்பாளையம் சாலை, இப்பொழுது இல்லை)

காதருக்கு இசக்கி என்னும் பத்திரிக்கை நிருபர் துணைக்கு வருகிறான். அவன் பத்திரிக்கையில், 'இந்த மரத்தில் தூக்கு போட்டு இறந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மரம் காற்றுக்கு தீடீரென கீழே விழுந்தால் பெரிய இழப்பும், மக்களும் அடிபடுவார்கள்' என்று எழுதுகிறான். உடனே நகரசபையில் மரத்தை வெட்ட தீர்மானம் போடுகிறார்கள். ஆனால், தாமு மற்றும் அவன் கூட்டாளிகள் அந்த மரத்துக்கு வெள்ளியில் பட்டயம் சாத்தி, பொட்டிட்டு சாமியாக்கி விடுகிறார்கள். வெட்ட வந்த ஒப்பந்தக்காரன், தான் வெட்டமுடியாது எனச் சொல்லிவிடுகிறான். மரம் தப்பிக்கிறது.

ஆனால், அன்றிரவே காதரின் ஆள் அந்த மரத்தில் சிறு குழி போல் செய்து அதில் ஆசிட்டை ஊற்றிவிட, இரண்டொரு நாளில் மரம் அப்படியே பட்டுப் போய்விடுகிறது. இப்பொழுது புளியமர ஜங்சனில் இப்பொழுது புளியமரம் இல்லை. காதர் சிறைக்குச் செல்ல, அந்த நேரம் பார்த்து தேர்தலில் போட்டியிட்ட 'கடலை' தாத்தா ஜெயித்து விடுகிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், கடலை மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த தாத்தா நகரசபைக்கு புது உடையில் செல்கிறார். இரண்டொரு மாதம் கழிந்த பின்னர், அவர் வழக்கம் போல கடலை மிட்டாய் விற்க கிளம்புகிறார். குழந்தைகளின் சிரிப்பைப் பார்த்தவுடன் அவருக்கு முகம் மலர்கிறது.

எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்த மரம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எத்தனை மழைக்கு, வெயிலுக்கு தாங்கி அது இவ்வளவு பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. 

இந்நாவல் மரத்தை மட்டுமல்ல, அதனைச் சுற்றியிருக்கும் மக்களையும் சேர்த்தே விவரிக்கிறது. இது ஒரு புளியமரத்தின் கதை என்றாலும், ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் எத்தனை கதைகள் இருக்கும் என்ற ஆச்சரியம் எழுகிறது. மரம் - விருட்சம். அந்த விருட்சமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம், ஆனால் நாம் நம்மால் முடிந்த அளவு அதை வெட்டிக் கொண்டிருக்கிறோம்.  அந்த மரங்கள் நம்மை மன்னிக்கட்டும்.