Thursday, March 1, 2012
Tuesday, February 21, 2012
பேச்சிலர் சமையல்: தக்காளி சாதம்
நாங்கள் நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்த பொழுது நாங்களே சமைத்து(!) சாப்பிட்டோம்.
சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக் காசையும், வயிற்றையும்
பாதிக்காமல் இருந்தது. ஒரு சிலர் இந்தப் பதிவை படித்து சமைக்க கற்றுக்
கொண்டால் மகிழ்ச்சியே.
தேவையான பொருட்கள்:
அரிசி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெரிய வெங்க்காயம் - மூன்று
பழுத்த தக்காளி - நான்கு
மிளகாய் - நான்கு
பூண்டு, மிளகாய் - ஐந்து
சீரகம், கடுகு, கடலைப் பருப்பு - தாளிக்க
கொத்தமல்லி தழை , கறிவேப்பிலை தழை - சிறிதளவு
உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு
குக்கர்
கரண்டி
காஸ்கட்
குக்கர் வெய்ட் (இதெல்லாம் தேவையா என்று கேட்பவர்களுக்காக, இப்படிதான் ஒருநாள்
சாப்பாட்டைத் தாளித்துவிட்டு இன்னொரு நண்பனிடம் 'கொஞ்ச நேரம் கழிச்சு
குக்கர் மூடிய போட்டு மூடிட்டு வெய்ட் போட்ரு' என்று சொல்லிவிட்டு வந்தோம்.
அரட்டை அடித்துக் கொண்டிருந்ததில் மறந்து, அரைமணி நேரத்துக்கும் மேலாகியும் விசில்
சத்தம் வரவேயில்லை, போய்ப் பார்த்தால் குக்கரில் சுற்றியும் தண்ணீர் ஒழுகி
இருந்தது. கடைசியில் மூடியைத் திறந்து பார்த்தால் காஸ்கட் போடாமல் விட்டுருக்கிறான். ஒரு கேள்வி கேட்டான் பாருங்க. பயபுள்ள கேட்ட கேள்வி இதுதான் 'இதையும் போடனுமாடா.. சொல்லவே இல்ல'. எனவேதான், தேவையான பொருட்களில் இதெல்லாம் சொல்லியிருக்கிறேன்) .
செய்முறை:
முதலில் தேவையான அரிசியைக் களைந்து கால்மணி நேரம் ஊறவைத்தால் சாப்பாடு நன்றாக இருக்கும். அந்த கால்மணி நேரத்தில் வெங்காயம்,
தக்காளி போன்றவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். நீள வாக்கில் அரிந்து
கொள்ளவும். பூண்டை பல் உரித்து தட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை
போன்றவற்றை கழுவி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில்
குக்கரை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டு
பொரிந்ததும், சீரகம், கருவேப்பிலை, கடலைப் பருப்பு, பூண்டு, மிளகாய்,
வெங்காயம் போன்றவற்றைப் போடவும். வெங்காயம் கொஞ்சம் நிறம் மாறத்
தொடங்கியதும், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பிறகு,
எடுத்து வைத்துள்ள அரிசியின் அளவில் மூன்று அல்லது இரண்டரை பங்கு தண்ணீர்
ஊற்றவும். நீங்கள் போட்டது ஒரு டம்ளர் அரிசி என்றால், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றவும். எல்லா அரிசிக்கும் இதுதான் பேசிக் என்றாலும், சில அரிசி
வகைகளுக்கு இரண்டரை பங்கு அளவாக இருக்கும். தண்ணீர் ஊற்றியதும், நன்றாக
கலக்கிவிட்டு மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் போடவும். உப்பை கொஞ்சம் கொஞ்சமாக
போட்டு கலக்கி விட்டு டேஸ்ட் பார்க்கவும். முதலில் நிறைய உப்பு போட்டுவிட்டால் குறைக்க முடியாது. உப்பு சரியாக இருந்தால், அரிசியைக் கொட்டி மூடிவிடவும். சாம்பார் தூள் இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்த்தால், நன்றாக இருக்கும்.
மறக்காமல் காஸ் கட் போட்டு குக்கரை மூடவும். பின்னர், வெயிட் போட்டு, மூன்று விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். வெயிட் விசில் விட்டதும், குக்கரைத் திறந்து, கொத்துமல்லி தழையைத் தூவி கிளறவும்.
தக்காளி சாதம் ரெடி. !
குறிப்பு 1 :
முதன் முதலாக சமைத்துப் பழகுபவர்கள், சிறிதளவில் செய்து பார்த்து விட்டு பின்னர் மற்றவர்களுக்கு செய்து தரலாம்.
குறிப்பு 2 :
தயிரும் ஊறுகாயும் முக்கியம். கொஞ்சம் உப்பு அதிகமாக இருந்தால், தயிரே சரணம். உப்பு, காரம் குறைவாக இருந்தால் ஊறுகாயே சரணம்.
குறிப்பு 3 :
மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்கள், ஒரு டம்ளர் அரிசி என்ற கணக்கில் நான் கொடுத்துள்ளேன். அரிசி கூடும்போது, இந்தப் பொருட்களும் சேர்த்துப் போடவும். ஒன்றிரண்டு குறைந்தால் தப்பில்லை!
படம்: இணையத்திலிருந்து - நன்றி.
Subscribe to:
Posts (Atom)