Tuesday, September 6, 2011

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர்.

ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார்.

=======================

'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்'

'சாப்பிட்டீங்களா'

'எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது. அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்'

=======================

நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்கலாம் போலத் தோன்றுகிறது.

நன்றி: புதிய தலைமுறை



Wednesday, August 17, 2011

சிக்னல்















சிக்னல்


சிக்னலில்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

கைக்குட்டை, சாக்ஸ், பூ
மற்றும் இன்னபிற விற்கும்
சிறுவர்களின் கல்வியும்
அவர்களின் பால்ய சந்தோசங்களும்
அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து.
நகராமல் அப்படியே இருக்கிறது.

***************

ஆம்புலன்ஸ்

மனிதம் மறந்து
விட்டதன் அடையாளமாய்
அவசர வண்டிக்கு
வழிவிடச் சொல்லி
காவலர் ஓடிவருகிறார்.

***************

சுதந்திரம்

ஊரெல்லாம் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள்
அன்றும் வாட்ச்மேன் தாத்தா
கொடியேற்றி காலையில் கொடுத்த
சாக்லேட்டோடு
வேலைக்கு வந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.