தோற்ற மயக்கம்
எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்)
துல்லிய நீர்ப்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்..
பார்ப்பதற்கு பரவசம்தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குரூரம்.
============================================
துபாய்
இ. இசாக் (ஆனந்த விகடன்)
கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்.
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன் நெடுநேரமாக.
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்கையில்
'யாரும்மா.. இவங்க?' என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்.
============================================
வதை
ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்)
திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்..
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டில்
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது.
============================================
கவனம்
சே. சதாசிவம் (ஆனந்த விகடன்)
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமாண மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி.
============================================
Friday, June 10, 2011
Wednesday, June 8, 2011
Subscribe to:
Posts (Atom)