Friday, April 15, 2011

சார்லி சாப்ளின்

இன்று Google-ன் முதல் பக்கத்தில், சாப்ளினின் பிறந்த தினத்தை நினைவு படுத்தியிருந்தார்கள்.



அவரவர் பிரச்சினைகளில் மூழ்கி விழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன கலைகள். காலங்கள் தாண்டியும் கலைகள் வாழ்வதற்கு கலைஞர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

மற்றவரைச் சிரிக்க வைத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு அவன் கோமாளி வேசம் உட்பட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. தனது காயங்களை மறைத்து அல்லது மறந்து தான் அவர்கள் கலையை வெளிப்படுத்துகிறார்கள்.

காலங்கள் பல கடந்தும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும் அந்த மகா கலைஞனை இந்நாளில் நினைவு கூறுவோம்.

அவரின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சிட்டி லைட்ஸ்
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)

ஒரு வீடியோ:





Sunday, April 10, 2011

மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...


சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....