Friday, April 1, 2011

ஒரு கோப்பை தேநீர்

ஜென்னில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவது என்பது ஒரு தவம் போல். ஒரு கப் தேநீரை கையில் எடுத்துக் கொள்வது முதல், துளித் துளியாக ரசித்து விழுங்கி, காலி கோப்பையை கீழே வைப்பது வரை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை ஜென் குருக்கள் கவனிப்பார்கள். ஒரு கோப்பை தேநீரை இவ்வளவு ரசித்துக் குடிக்க முடிந்தால், இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு ரசிப்பார்கள்.



கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.

இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.


Monday, March 28, 2011

இதுவும்...

ஓட்டுப் பொத்தானை ஒரு அழுத்து அழுத்தி விட்டு இந்தப் பக்கம் வந்தால், கையைப் பிடித்திழுத்து கருப்பு மையை அழுத்தி வைப்பார்கள். அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் மை அப்புவார்கள். அதுவரைக்கும் எந்தக் கூட்டம் கொள்ளை அடித்தால் என்ன, ஊழல் செய்தால் என்ன, நமக்குத் தவறாமல் சன்மானமாக கருப்பு மையோடு, தொலைக்காட்சிப் பெட்டிகளும், மிக்சிகளும், செல்போன்களும் கொடுப்பார்கள்.

- தொழில்கள் வளர
- கல்விக் கட்டணங்களை குறைக்க
- அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிகள்
- விவசாயம் மேம்படுத்த
- மின்சாரம், நீர் ஆதாரம், சாலைகள் பற்றி
- ஏழை மக்கள் முன்னேற
- குழந்தை தொழிலாளர்கள் பற்றி
இவைகளைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. எல்லாமே இலவசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது தேர்தல்.

"மீன் பிடித்துத் தருவதை விட, எப்படி மீன் பிடிப்பது எனக் கற்றுக்கொடுங்கள்" எனச் சொல்வார்கள். இவர்கள் சிறிய இலவச மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்க காத்திருக்கிறார்கள் என்பது, இப்போது நடக்கும் அடிதடி ரகளைகளிலே தெரிகிறது.

அந்த ஒருநாளும் கடந்து போகத்தான் போகிறது. "எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா" என்பது போல், அன்றும் வாக்களிக்கப் போகிறோம். கருப்பு மையோடு பின்னர் எல்லோரிடமும் கடமையைச் செய்ததாக பேசிக் கொள்ளுவோம்.

மகாகவி சொன்னதும் நமக்குத் தான்:

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்
கஞ்சி குடிப்பதற்கு இலார் - அதன்
காரணம் இவையென அறியும் அறிவுமிலார்
நெஞ்சு பொறுக்கு திலையே...